Published:Updated:

திருப்பதியில் சர்வ தரிசனத்துக்கு அனுமதி! -9,000 ஆன சிறப்பு தரிசன எண்ணிக்கை

 திருமலை-திருப்பதி
திருமலை-திருப்பதி

திருமலை திருப்பதியில் ஜூன் 11 ம்தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில் ஜூலை 1 முதல் 3,000 பேர் சர்வ தரிசனம் செய்யவும் டோக்கன்கள் வழங்க தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்று திருமலை திருப்பதி. இங்கு நாள் ஒன்றுக்கு 60,000 முதல் ஒரு லட்சம்வரை பக்தர்கள் தரிசனம் செய்வர். ஆனால் கொரோனா தொற்றுகாரணமாக வழிபாட்டுத் தலங்கள் எல்லாம் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. திருமலை திருப்பதியும் மார்ச் 20 ம் தேதி முதல் தரிசனத்தை ரத்து செய்தது. ஆகம விதிகளின் படி சுவாமிக்கு தினமும் ஆராதனைகள் நடைபெற்றுவந்த நிலையில் ஜூன் 8 -ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி ஜூன் 8 ம் தேதி முதல் ஸ்ரீவாரி ஊழியர்களுக்கு சோதனை அடிப்படையில் தரிசனங்களை அனுமதித்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஜூன் 11 முதல் சிறப்பு தரிசனம் மூலம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்தது.

திருப்பதி கோயில்
திருப்பதி கோயில்

300 ரூபாய் சிறப்பு தரிசனம்!

இதனால் பக்தர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவருகிறது. நேற்று (28.6.2020) காலை ஆறுமணி முதல் இரவு 9 மணிவரை மொத்தம் 11,239 பேர் தரிசனம் செய்துள்ளனர். மொத்தம் 3,194 பேர் பெருமாளுக்கு முடி காணிக்கை செலுத்தினர். தேவஸ்தானம் நாள் ஒன்றுக்கு 6,000 பேருக்கு வழங்கி வந்த 300 ரூபாய் சிறப்பு தரிசன அனுமதிச் சீட்டுகளைத் தற்போது 9,000 -ஆக அதிகரித்திருக்கிறது.

ஜூலை 1 முதல் சர்வ தரிசனம்!

மேலும் ஜூலை 1 முதல் சர்வ தரிசனம் எனப்படும் இலவச தரிசன சேவையும் நாள் ஒன்றுக்கு 3,000 பேருக்கு அனுமதி வழங்கப்படும். இதற்கான டோக்கன்களை திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம் மற்றும் அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளேஸ்களில் பெற்றுக்கொள்ளலாம். சர்வ தரிசன டோக்கன்களை ஒருநாள் முன்பாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன்படி ஜூலை 1 ம் தேதிக்கான டோக்கன்கள் நாளை (30.6.20) முதல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி
திருப்பதி

மேலும் பக்தர்கள் அனைத்துக் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் பக்தர்களுக்கு இ பாஸ் கிடைப்பது சாத்தியமில்லாத நிலை நிலவுகிறது.

அடுத்த கட்டுரைக்கு