Published:Updated:

கல்யாண வரம் தரும் பெருமாள் மாலை!

வசிஷ்டபுரம் தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
வசிஷ்டபுரம் தரிசனம்

வசிஷ்டபுரம் தரிசனம்

கல்யாண வரம் தரும் பெருமாள் மாலை!

வசிஷ்டபுரம் தரிசனம்

Published:Updated:
வசிஷ்டபுரம் தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
வசிஷ்டபுரம் தரிசனம்

வசிஷ்டபுரம் அரங்கநாதா்!
சோ்வராயன் மலை, கல்ராயன் மலை, பச்சை மலை ஆகிய மலைகளில் மழைக்காலத்தின் போது கொட்டும் சிறு சிறு அருவிகளிலிருந்து உருவாவதே வெள்ளாறு. இது கிழக்கு நோக்கிப் பாய்ந்து சேலம், பெரம்பலூா் மற்றும் கடலூா் மாவட்டங்களின் வழியாகப் பாய்ந்தோடி பரங்கிப்பேட்டைக்கு அருகே வங்கக்கடலில் சங்கமிக்கிறது. ஒருகாலத்தில் சோழ நாட்டின் வடக்கு எல்லையாக வெள்ளாறு இருந்துள்ளது.


வசிஷ்டபுரம்
வசிஷ்டபுரம்

வெள்ளாற்றின் கரையோரங்களில் உள்ள பல புனிதத் தலங்கள், தபஸ்விகளின் ஆன்மிகத் தேடலுக்கு உகந்தவையாய் திகழ்கின்றன.

அவற்றுள் ஒன்றுதான் வசிஷ்ட புரம். கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் அமைந்துள்ளது இவ்வூர். ராமனின் குலகுருவன வசிஷ்டர் தன் மனைவி அருந்ததியுடன் தவம் இருந்த இடம் வசிஷ்டபுரம். பெருமாள் இந்தத் தம்பதிக்கு ரங்கநாதராக காட்சி தந்த தலம் இது. அருள்மிகு மகிழ்ந்தவல்லி சமேதராக ரங்கநாதப் பெருமான் அருளும் இவ்வூரை `வசிஷ்டா் குடி’ என்றும் போற்றுவர்.

பெருமாள் மாலை
பெருமாள் மாலை

கல்யாண வரம் தரும் பெருமாள் மாலை!

ராகு-கேது தோஷங்களால் அவதியுறும் அன்பா்கள், பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சமர்ப்பித்து வழிபட்டால், தோஷங்கள் நீங்கும். திருமணத் தடையால் வருந்தும் அன்பர்கள், இத்தலத்தில் சுவாமிக்குத் திருக் கல்யாண வைபவம் நடைபெறும்போது, பெருமாளுக்குச் சாற்றிய மாலையை பெண்ணும், தாயாருக்குச் சாற்றிய மாலையை ஆணும் வாங்கி அணிந்து கொண்டு, திருக்கோயிலை மூன்று முறை வலம் வந்து வணங்கவேண்டும். இதனால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

சந்தான கிருஷ்ணன்
சந்தான கிருஷ்ணன்

பிள்ளை வரம் அருளும் சந்தான கிருஷ்ணன்!

தசரதச் சக்ரவா்த்தியும் ராமபிரானும் அரங்கநாதரை வழிபட்டுப் பேறு பெற்றுள்ள தாக இக்கோயிலின் தலவரலாறு தொிவிக் கிறது. புதன் கிழமைகளில் இங்குள்ள சந்தான கிருஷ்ணனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

இந்த வழிபாட்டின்போது மழலை வரம் வேண்டி, பல அன்பா்கள் பிராா்த்தனை செய்து கொள்கின்றனா். சந்தான கிருஷ்ணனுக்குச் செய்யப்படும் பாலபிஷேகத்தைப் பிரசாதமாகப் பெற்று அருந்துவதோடு, அப்பெருமானை தங்களது மடியில் கிடத்தி வழிபாடு செய்யும் மங்கையருக்கு உடனடியாக சந்தான ப்ராப்தி ஏற்படும் என்பது நம்பிக்கை.

ஜகத் ரட்சண சிந்தை
ஜகத் ரட்சண சிந்தை

உறங்குவது போன்ற யோக நிலை!

`உறங்குவான் போல் யோகு செய்பவர்' என்று பெருமாளின் பள்ளி கொண்ட திருக்கோலம் சிறப்பிக்கப்படுகிறது. `கிடந்தோா் கிடக்கை கண்டும் எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே’ என்று நெகிழ்கிறார் தொண்டரடிப் பொடியாழ்வாா்.

இந்த உலகத்தைக் காக்கும் சிந்தனையால்தான் பெருமாளின் திருவிழிகள் உறங்குவதுபோல மூடியிருக்கின்றன. இதனைப் பெருமாளின் `ஜகத் ரட்சண சிந்தை' என்பா் சான்றோா்.

இந்தத் தலத்திலும் அப்படித்தான்... உறங்குவது போன்ற யோக நிலையில் அறிதுயில் கொண்டிருக்கிறார் ரங்கநாதர். அவரின் திருப்பாதத்துக்கு அருகில் வசிஷ்ட மகரிஷியும் அரங்கனின் சிரசுக்கு அருகில் அருந்ததியும் சேவை சாதிக்கின்றனா். இத்தலம் திருவரங்கத்திற்கு முந்தையத் தலம் என்று புராணங்களிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

திருமகிழ்ந்தவல்லி
திருமகிழ்ந்தவல்லி

திருமகிழ்ந்தவல்லி

வசிஷ்டபுரம் அருளும் தாயாரின் திருநாமம் திருமகிழ்ந்தவல்லி. திருமாலின் திருமாா்பில் உறையும் `திரு'வான மகாலட்சுமி மனம் உகந்து கோயில் கொண்ட இடம் இவ்வூர் என்கிறது புராணம். ஆகவே, திரு மகிழ்ந்த பந்தல் என்றும் அழைக்கப்படுகிறது.

தாயாா் திருமகிழ்ந்தவல்லி இத்தலத்தில் மிகுந்த வரப்பிரசாதியாக இருக்கிறாா். வெள்ளிக்கிழமைகளில் இந்த அன்னைக்கு வில்வாா்ச்சனை செய்து வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும். இத்தலத்தின் விருட்சம் வில்வமாகும்.

ஸ்வேத நதி
ஸ்வேத நதி

சப்த துறைகள்

ஸ்வேத நதியான வெள்ளாற்றின் கரையில் ஏழு துறைகள் அமைந்துள்ளன. இந்த ஏழு துறைகளும் பின் வருமாறு:

1. காவியாந்துறை

2. திருவாலந்துறை

3. திருமாந்துறை

4. ஆடுதுறை

5. வசிஷ்டா் துறை

6. திருவட்டத்துறை

7. பெலாந்துறை

அற்புதமான இந்த வெள்ளாற்றினை தேவாரப் பதிகங்களில் திருஞான சம்பந்தா் `நிவா நதி' என்று போற்றிப் பாடியுள்ளாா். இதில் வசிஷ்டர் துறையில் அமைந்துள்ள திருத்தலமே வசிஷ்டபுரம் அரங்கநாதா் திருக்கோயிலாகும். மற்ற 5 துறைகளிலும் சைவத் தலங்கள் அமைந்துள்ளன. இந்த சப்த துறைகள் ஒவ்வொன்றும் சப்த கன்னியா்களுக்கு உரியவை எனப் போற்றியுள்ளாா் வசிஷ்ட மகரிஷி.

நரசிம்மர்
நரசிம்மர்
அனுமன்
அனுமன்

சாம வேத பாராயணம்!

வசிஷ்டரால் அவரின் சீடா்களுக்குச் சாம வேத பாடம் நடத்தப் பட்டதன் நினைவாக, அனுதினமும் காலை நேர பூஜையின்போது சாம வேதம் பாராயணம் செய்யப்படுகிறது.

மாா்கழி மாதத்தில் ராப் பத்து, பகல் பத்து, வைகுண்ட ஏகாதசி மற்றும் நம்மாழ்வாா் மோட்சம் ஆகிய விழாக்கள் இத்தலத்தில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. நம்மாழ்வாா் மோட்சத்தின் போது, திருமகிழ்ந்தவல்லி சமேதராக வெள்ளாற்றில் வசிஷ்டா் துறையில் எழுந்தருளி தீா்த்தவாரி கண்டருள்கிறார் பெருமாள். இதில் கலந்துகொண்டு பெருமாளை தரிசிப்பது மிகவும் சிறப்பு.

சோழர் காலத்தில் இக்கோயிலுக்குப் பல திருப்பணிகள் நடை பெற்றதை இந்தத் தலத்தின் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இங்கு கருடாழ்வாரும் அனுமனும் பெருமாளை நோக்கியபடி அருள்வது விசேஷ அம்சம்.

பாஞ்சராத்ர ஆகம வழிமுறைகளின் படி நித்ய பூஜைகள் நடைபெறு கின்றன. இக்கோயிலுக்கு நாலுகவிப் பெருமான் நல்லான் ஆதீனப் பரம்பரையைச் சாா்ந்தவா்களே பூஜை செய்து வருகின்றனா். அந்தப் பரம்பரையின் வழித்தோன்றலில் வந்தவரான நாலுகவிப் பெருமான் நல்லான் ஆதீனம் திரு வரத சிங்காச்சாரியா் தற்போது பெருமாளுக்கு அன்போடு பூஜைகள் செய்து வருகிறாா்.

விருத்தாசலம் - திட்டக்குடி பிரதான சாலையில், திட்டக்குடிக்கு முன்பாக வசிஷ்டபுரம் அரங்கநாதா் ஆலயம் அமைந்துள்ளது. காலை 7 முதல் 10 மணி வரையிலும்; மாலை 5 முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.


தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism