பிரீமியம் ஸ்டோரி

நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்திருக்கும் அத்திவரதர், தமிழகத்தையும் தாண்டி பக்தர்களை ஈர்த்துக்கொண்டே இருக்கிறார். அத்திவரதர் வரலாறு தொடங்கி, பாதுகாப்பு ஏற்பாடுகள், குறைபாடுகள், ஆகம சர்ச்சைகள், கூட்ட நெரிசலில் பலி, ரெளடிக்கு மரியாதை என, ஏதேனும் ஒருவிதத்தில் கவனம் ஈர்த்துக்கொண்டேயிருக்கிறது காஞ்சிபுரம்.

பக்தர்கள் கூட்டம்
பக்தர்கள் கூட்டம்

`இன்னும் எத்தனை நாள்களுக்கு இந்தப் பரபரப்பு?’ என்று எல்லோரும் எண்ணிக்கொண்டி ருக்கையில், ‘‘அத்திவரதரை மீண்டும் நீரில் இறக்கக் கூடாது. இதுகுறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மடாதிபதிகளும் சேர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசவுள்ளோம்’’ என்று பத்திரிகையாளர் சந்திப்பில் இன்னொரு விவாதத்தைக் கிளப்பியுள்ளார், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர். ஜீயரின் பேச்சையடுத்து அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைப்பார்களா அல்லது வழிபாட்டில் வைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எல்லா தரப்புகளிலும் எகிறிக் கொண்டிருக்கிறது.

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மூலவர் தேவராஜப் பெருமாள், தாயார் பெருந்தேவி. இந்தக் கோயிலின் ஆதிமூலவராக இருந்த அத்திவரதர், அனந்தசரஸ் என்ற கோயில் தீர்த்தக் குளத்தின் நடுவில் உள்ள மண்டபத்தின் அடியில், வெள்ளிப்பேழையில் சயனக்கோலத்தில் வைக்கப்பட்டிருப்பார். நீரில் மூழ்கியிருக்கும் அத்திவரதரை, 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே எடுத்து, முதல் 24 நாள்கள் சயனக்கோலத்திலும், அடுத்த 24 நாள்கள் நின்ற கோலத்திலும் வைப்பார்கள்.

திருப்பதியாகுமா காஞ்சிபுரம்?

அத்திவரதர், கடைசியாக 1979-ம் ஆண்டு ஜூலை மாதம் காட்சிக்கு வைக்கப்பட்டார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வைக்கப் பட்டுள்ளார். இதுவரையிருந்த வழக்கப்படி, 48 நாள்களுக்குப் பிறகு அத்திவரதரை மீண்டும் நீருக்குள் இறக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில்தான் அத்திவரதரை நீரில் இறக்க வேண்டாம் என்ற கருத்தை வெளியிட்டுள்ளார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘அந்தக் காலத்திலிருந்த அரசியல் சூழ்நிலைகளால், விக்கிரகங்களை ஆங்காங்கே ஒளித்துவைக்க வேண்டியிருந்தது. அதனால், அத்திவரதரை மறைத்து வைத்தனர். இப்போது அந்த பயம் இல்லை. சேற்றிலோ, நீரிலோ வரதர் ஏன் கஷ்டப்பட வேண்டும்? பூஜை செய்யவிட்டாலும்கூட பரவாயில்லை. அதே இடத்தில் வைத்து அவரை வழிபட்டால், காஞ்சிபுரம்கூட திருப்பதி ஆகிவிடும். எனவே, விக்கிரகத்தை நீரில் வைக்க வேண்டாம்.

 சடகோப ராமானுஜர்,  பணீந்திர ரெட்டி
சடகோப ராமானுஜர், பணீந்திர ரெட்டி

திருக்கோயிலூர் ஜீயர் சுவாமிகளும் `நீரில் வைக்கக் கூடாது’ என கடிதம் கொடுத்துள்ளார். மேலும், நிறைய மடாதிபதிகள் இதே கருத்தை வலியுறுத்தி கடிதம் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். மக்களிடம் நல்ல விஷயங்களைக் கொண்டுசேர்ப்பதற்காக அத்திவரதர் வந்துள்ளார். எனவே, தற்போது உள்ள அதே இடத்தில் அவரை வைக்கலாம். `என்னை மீண்டும் புதைக்கப்போகிறாயா... புதைக்க வேண்டாம்’ என ஆன்மிகச் சொற்பொழிவாளர் ஸ்ரீகிருஷ்ண பிரேமி சுவாமிகளின் கனவில் தோன்றி அத்திவரதர் அழுதிருக்கிறார். எனவே, அத்திவரதரை மீண்டும் புதைக்கக் கூடாது என அனைத்து மடாதிபதிகளும் சேர்ந்து முதல்வரைச் சந்தித்துப் பேசவிருக்கிறோம்’’ என்கிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர்.

அறநிலையத் துறை ஆணையர் பணீந்திர ரெட்டியிடம் இதுபற்றிக் கேட்டதற்கு, ‘‘பல தரப்பிலிருந்தும் இதுகுறித்து எங்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அத்திவரதரை மீண்டும் நீரில் வைக்கலாமா, தொடர்ந்து வழிபாடு நடத்தலாமா என்பது குறித்து ஆன்மிக அறிஞர்களிடம் ஆலோசித்துவருகிறோம். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வோர் ஆகம விதி இருக்கும். அந்தக் கோயிலின் தத்தாச்சாரியர், ஸ்தானிகர், பட்டர்களின் கருத்துதான் இதில் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்கள் சொல்வதுதான் இறுதி முடிவு. அவர்கள் சொல்லும் கருத்தை அறநிலையத் துறை செயல்படுத்தும்’’ என்றார்.

அத்திவரதரை நீரில் வைக்கக் கூடாது என்று ஜீயர் கூறியிருக்கும் நிலையில், காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் பட்டர்கள், ஜீயரின் கருத்துக்கு எதிராகப் பேசியுள்ளனர். அத்திவரதரைப் பொருட்காட்சியாக மாற்றக் கூடாது என்றும், அப்படிச் செய்தால் அது இந்து மதத்துக்கு அவமானம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அத்திவரதரை வெளியில் வைத்தால் திருப்பதியைப்போல காஞ்சிபுரமும் பெரும்புகழ் அடையும் என்பது எல்லோரையும் வசீகரிக்கின்ற கருத்தாக இருக்கிறது. பொருளாதாரரீதியாகவும் காஞ்சிபுரம் வளர்ச்சி அடையும். இதனால், இந்துசமய அறநிலையத் துறையின் அடுத்த நடவடிக்கை என்ன என்பதை அறிய, ஆன்மிகவாதிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு