Published:Updated:

உருவில் பெரிய பைரவர் சிவப் பிரசாத மாங்கனி!

மகாதேவர் ஆலயம்
பிரீமியம் ஸ்டோரி
மகாதேவர் ஆலயம்

கட்டிமாங்கோடு மகாதேவர் ஆலயம்

உருவில் பெரிய பைரவர் சிவப் பிரசாத மாங்கனி!

கட்டிமாங்கோடு மகாதேவர் ஆலயம்

Published:Updated:
மகாதேவர் ஆலயம்
பிரீமியம் ஸ்டோரி
மகாதேவர் ஆலயம்

தென் பரதக் கண்டத்தில் நாஞ்சில் பகுதியின் பல இடங்கள் மகாபாரதக் கதையுடன் தொடர்புடையனவாகத் திகழ்கின்றன. துவாபர யுகத்தில் வனவாசத்தின் போது, பாண்டவர் ஐவரும் மேற்குத் தொடர்ச்சி மலையின் பெருங் காடுகளில் வசித்ததாகக் கூறுகின்றனர்.

கட்டிமாங்கோடு மகாதேவர் ஆலயம்
கட்டிமாங்கோடு மகாதேவர் ஆலயம்
உருவில் பெரிய பைரவர் சிவப் பிரசாத மாங்கனி!
மகாதேவர் ஆலயம்
மகாதேவர் ஆலயம்
கட்டிமாங்கோடு  ஆலயம்
கட்டிமாங்கோடு ஆலயம்
கட்டிமாங்கோடு
கட்டிமாங்கோடு


இதையொட்டி, தற்போதைய நாகர்கோவிலின் சுற்றுவட்டாரப் பகுதி, அக்காலத்தில் பஞ்ச பாண்டவர்களின் பெயராலேயே பஞ்சவன்காடு என வழங்கப்பட்டதாம். இதன் நீட்சியாக இன்றும் நாகர்கோவிலுக்கு அருகேயுள்ள ஓரிடம், நடுக்காடு எனும் பெயருடன் திகழ்கிறது.

நாகர்கோவிலை அடுத்துள்ளது சொத்தவிளை. இங்குள்ள தடாகம் ஒன்றில் நீர் அருந்திய பாண்டவ சகோதரர்களில் நால்வர், மூச்சு பேச்சற்று மடிந்து விழுந்தனராம். குளத்திலிருந்து ஒலித்த அசரீரிக்கு மதிப்பளிக்காமல் நீர் பருகியதால் அவர்களுக்கு இந்த நிலை வாய்த்ததாம். பின்னர் மூத்தவரான தருமர் அங்கு வந்து சேர்ந்தார். அவர் அசரீரியின் கேள்விகளுக்கு உரிய பதில்களைக் கூறி, சகோதரர்களை உயிர்ப்பித்தார் என்கிறது ஒரு திருக்கதை.

இங்ஙனம் பாண்டவ சகோதரர்கள் செத்து விழுந்த இடம் என்பதால் செத்தவிளை என்று பெயர் வந்ததாம். அதுவே, காலப்போக்கில் சொத்தவிளை என்றானதாகச் சொல்கிறார்கள்.

இதேபோல் நாகர்கோவிலை அடுத்துள்ள கட்டிமாங்கோடு எனும் ஊரிலும் பாண்டவர்கள் ஓராண்டு காலம் வசித்ததாகக் கூறுவர். அதற்கு சாட்சியாகத் திகழ்கிறது இவ்வூரின் அருள்மிகு மகாதேவர் திருக்கோயில். பாண்டவர்கள் வழிபட்டு பூஜித்த இந்தக் கோயிலின் மகாதேவரை தரிசிக்க, ஒருநாள் அதிகாலையில் புறப்பட்டோம்.

நாகர்
நாகர்
pillaiyar
pillaiyar
nandhi
nandhi
lord siva
lord siva


நாகர்கோவிலிலிருந்து சுமார் 12 கி. மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது கட்டிமாங்கோடு கிராமம். செழித்து நிற்கும் வாழைகளும் நெடிதுயர்ந்த தென்னைகளும் நிறைந்திருக்க பசுமை வனப்புடன் திகழ்கிறது கட்டிமாங்கோடு. இங்கே ஒரு குளத்தின் கரையில் மகாதேவரின் ஆலயம் அமைந்துள்ளது.

அழகிய, அமைதி நிறைந்த அற்புத ஆலயம் இது. முறைப்படி வலம் வந்து மகாதேவரை தரிசிக்க கருவறைக்கு நகர்ந்தோம். உள்ளே, சிவலிங்கத் திருமேனியராக அருள்கிறார் கட்டிமாங்கோடு மகாதேவர். அவரின் எதிரில் கல் மண்டபத்தில் நந்திதேவர் வீற்றிருக்கிறார். கன்னிமூலையில் அருள்மிகு சக்தி கணபதி கம்பீரமாகக் காட்சி தருகிறார். அருகில் தர்மசாஸ்தா சந்நிதி, நாகராஜ சந்நிதியை தரிசிக்கலாம்.

கருவறையின் முன்பகுதியில் இடப்பக்கமாக தெற்கு நோக்கி பைரவர் சந்நிதி அமைந்துள்ளது. சுமார் 5 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார் பைரவ மூர்த்தி. கருவறையின் வலப்பக்கத்தில் யோகீஸ்வரருக்கு தனி பீடம் அமைக்கப்பட்டுள்ளது.

கட்டிமாங்கோடு ஆலய விழாக்குழு கமிட்டித் தலைவரும், ஓய்வுபெற்ற கூட்டுறவுசங்கங்களின் துணைப்பதிவாளருமான தா.சுப்பிரமணியன் இந்தக் கோயிலின் வரலாற்றை விவரித்தார்.

“அப்போது இந்தப் பகுதிக்கு `காளை மகரிஷி வனம்’ என்று பெயர். இங்கே ஒரு மாமரத்தின் கீழ் அமர்ந்து தவம் செய்துவந்தார் கலைக் கோட்டுமுனி என்ற முனிவர். மிகப் பெரிதான அந்த மாமரத்தை கட்டிமா மரம் என்றே அழைப்பார்களாம். இதன் காரணமாகவே இந்த ஊருக்கும் கட்டிமாங்கோடு என்று பெயர் வந்ததாகச் சொல்வார்கள்.

மரத்தின் அடியில் சிவலிங்க பிரதிஷ்டையும் செய்திருந்தார் முனிவர். இந்த மரத்தில் வருஷத் துக்கு ஒரு முறை ஒரு மாங்கனி காய்க்கும். சித்திரைவிஷு தினத்தன்று முனிவர் கண் விழிப்பார். அவருக்காகவே தோன்றியது போல், மாங்கனி ஒன்று பழுத்துத் தொங்குமாம். முனிவர் கை நீட்டியதும் அந்த மாங்கனி மரத்திலிருந்து விடுபட்டு முனிவரின் கையில் வந்து விழுமாம்.

அதைச் சிவலிங்கத்துக்குப் படைத்துவிட்டு, பின்னர் பிரசாதமாகச் சாப்பிடுவார் முனிவர். அப்போது அங்கு வேறு எவரேனும் வந்தால் அவர்களுக்கும் மாங்கனிப் பிரசாதம் கிடைக்கும். பின்னர் மீண்டும் தவத்தில் ஆழ்ந்துவிடுவார் கலைக்கோட்டுமுனி; அடுத்து வரும் சித்திரை விஷு அன்றுதான் மீண்டும் அவர் விழிப்பார்.

இந்த நிலையில், பஞ்சவன் வனத்துக்குச் செல்லும் வழியில் இந்த வனப்பகுதிக்கு வந்த பாண்டவர்கள், கட்டிமாமரத்தின் கனிந்த மாம்பழத்தின் நெட்டுப்பகுதியைக் (காம்பு) கண்டனர். அந்த இடமே இப்போதும் நெட்டாங் கோடு எனும் கிராமமாகத் திகழ்கிறது. இன்றும் `நெட்டுகண்ட நெட்டாங்கோடு’ எனும் சொல் வழக்கு உண்டு.

தொலைவிலிருந்து நெட்டுப் பகுதியைக் கண்ட பாண்டவர்கள், மாமரத்தை நெருங்கியதும் அம்பு எய்து பழத்தைத் தரையில் வீழ்த்தினான் அர்ஜுனன். அவர்களில் சகாதேவன் முக்காலத்தையும் உணர்த்தவல்ல ஜோதிடத்தில் சிறந்தவன் அல்லவா? அவன் அர்ஜுனனின் செயலைக் கண்டு பதறிப் போனான்.

‘அண்ணா! இது கலைக்கோட்டு மாமுனி வருடத்துக்கு ஒருமுறை கடவுளுக்குப் படைத்துச் சாப்பிடும் மாம்பழம். இன்று விஷு தினம். முனிவர் அருகிலுள்ள சுனையில் நீராடச் சென்றுள்ளார். இன்னும் சற்று நேரத்தில் இங்கு வந்துவிடுவார். மாங்கனி தரையில் கிடப்பதைக் கண்டால் நமக்கு சாபம் நிச்சயம்’ என்றான்.

பாண்டவர்கள் கலங்கினார்கள். தங்களைக் காக்கும்படி கிருஷ்ண பகவானை மனதார வேண்டினார்கள். பகவானும் அங்கு தோன்றி அவர்களுக்கு ஓர் உபாயம் சொன்னார்.

`நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மனதில் ஒளித்து வைத்துள்ள விஷயங் களை வெளிப்படை யாகக் கூறினால், மாங்கனி மீண்டும் காம்புடன் சென்று ஒட்டிக்கொள்ளும்’ என்றார். பாண்டவ சகோதரர்களும் அப்படியே செய்த னர். ஆனாலும் தரையிலிருந்து மாங்கனி எழுந்து நின்றதே தவிர, மரக்கிளையில் இருக்கும் காம்புடன் சென்று சேரவில்லை.

நிறைவாக திரெளபதி தன் உள்ளத் தில் உள்ளதைச் சொன்னதும் மாங்கனி காம்புடன் சென்று பொருந்தியது. அதேநேரம் முனிவரும் அங்கு வந்து சேர்ந்தார். ‘உங்கள் மனதைத் தூய்மைப்படுத்த பகவான் கிருஷ்ணர் நடத்திய திருவிளையாடலே இது’ என்று கூறி, பாண்டவர்களை ஆற்றுப் படுத்தினார். பின்னர் மாமரத்தை நோக்கி முனிவர் கை ஏந்தி நிற்க, மாம்பழம் வந்து விழுந்தது. அதை இறைவனுக்குப் படைத்தவர், தானும் உண்டு மற்றவர்களுக்கும் வழங்கிவிட்டு தவத்தில் ஆழ்ந்துவிட்டார்.

எப்போதும் எவ்வளவு சாப்பிட்டாலும் வயிறு நிரம்பாத பீமனுக்கு, மாங்கனியின் சிறு துண்டை உண்டதுமே பசி அடங்கியது. பாண்டவர்கள் வியந்தனர். அதேநேரம் முனிவர் தவத்தில் ஆழ்ந்துவிட்டதை அவர்கள் கவனிக்கத் தவறினர். அவரிடம் விடைபெறாமல் செல்வது சரியல்ல என்று எண்ணியவர்கள், அடுத்து முனிவர் கண்விழிக்கும் வரை அங்கேயே தங்குவது என்று தீர்மானித்தனர். அடுத்த சித்திரை விஷு வரும் வரை அங்கேயே தங்கினார்கள்.

முனிவர் வழிபட்டு வந்த சிவலிங்கத்தின் அருகில் வேறொரு லிங்க மூர்த்தத்தை ஸ்தாபித்து வழிபட்டார்கள். ஒரு வருடம் கழித்து முனிவர் விழித்ததும் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு பஞ்சவனம் நோக்கி நகர்ந்தார்கள்.

ஆக, கட்டிமாங்கோடு எனும் இந்தத் தலத்தில் முனிவர் வழிபட்டது, பாண்டவர் வழிபட்டது என இரண்டு சிவ லிங்கங்கள் இருந்தனவாம். பிற்காலத்தில் இரண்டையும் ஒன்றாக்கி, மூலவராக எழுந்தருளச் செய்தார்களாம். இப்போதும் ஒவ்வொரு வருடமும் சித்திரை விஷு அன்று கட்டிமாங்கோடு மகாதேவருக்கு மாங்கனி படைக்கப் படுகிறது. அன்று பக்தர்களுக்கும் மாங்கனி பிரசாதமாக வழங்கப்படுவது, இந்தத் தலத்தின் சிறப்பு.

இதுகுறித்த விவரம், `கட்டிமாங்கோடு மகாதேவர் கோயில் விஷுக் கனி வழங்கல்' என்ற தலைப்பில் பஞ்சாங்கங்களில் பல்லாண்டு காலமாக குறிப்பிடப்படுவது விசேஷம். அவற்றில் இந்தத் தலத்தை `அற்ற மாங்கனி பொருந்திய அருமை கட்டிமாங்கோடு’ என்றே குறிப்பிட்டுச் சிறப்பு செய்கிறார்கள்!’’ என்றார் தா.சுப்பிரமணியன். ஆலயத்தின் வழிபாடுகள் குறித்து அர்ச்சகர் ராகவ ஐயர் விவரித்தார்.

“தினமும் காலை 6 முதல் 9 மணி வரையிலும் மாலை 4 முதல் 6 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும். பிரதோஷம், முதல் மற்றும் கடைசி திங்கள்கிழமைகளில் சோமவாரம் போன்ற வழிபாடுகள் சிறப்புற நடைபெறுகின்றன. அதேபோல், மகாசிவராத்திரி விழா, மார்கழி திருவாதிரை அன்று அகண்டநாம வழிபாடு, சித்திரை விஷு ஆகிய வைபவங்கள் சிறப்புற நடைபெறுகின்றன.

கடந்த 2008-ல் இங்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு, தற்போது வரும் தை மாதம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலிலும், கட்டிமாங்கோடு மகாதேவர் ஆலயத்திலும்தான் பைரவர் சந்நிதிகள் உள்ளன. சுசீந்திரம் கோயிலைவிட இங்குள்ள பைரவர் உருவில் பெரியவர்!” என்றார்.

எப்படிச் செல்வது?: நாகர்கோவிலில் இருந்து 12 கி.மீ. தொலை வில் அமைந்துள்ளது கட்டிமாங்கோடு மகாதேவர் ஆலயம். நாகர் கோவிலில் இருந்து பேருந்தில் பயணித்து பரசேரியை அடையலாம். அங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரம் பயணித்தால் கோயிலை அடையலாம். பேயங்குழி எனும் ஊரை அடைந்து, அங்கிருந்தும் ஆலயத்துக்குச் செல்லலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism