Published:Updated:

`சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்க வேண்டாம்!’- கேரள அரசு ரகசிய முடிவு?

சபரிமலை சந்நிதானத்தில் இளம் பெண்கள் வந்தால் என்ன செய்வீர்கள் எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவசியம் இல்லாத கேள்விகளைக் கேட்கக் கூடாது எனக் கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கடிந்துகொண்டார்.

சபரிமலை
சபரிமலை

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் சந்நிதானத்தில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான மறுசீராய்வு மனு மீது நேற்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதில் அனைத்து வயதுப் பெண்களும் செல்லும் தீர்ப்புக்குத் தடை இல்லை என்றும், மறு சீராய்வு மனு குறித்து ஏழு நீதிபதிகள் கொண்ட பென்ச் விசாரணை நடத்தும் எனவும் கூறப்பட்டது. மண்டல கால மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை நாளை திறக்க உள்ள நிலையில் சந்நிதானத்தில் இளம் பெண்களை அனுமதிக்க வேண்டாம் எனக் கேரள அரசு நிலைப்பாடு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சபரிமலை
சபரிமலை

கடந்த ஆண்டு சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என சங் பரிவார் அமைப்புகள் வரிந்துகட்டிக்கொண்டு சந்நிதானத்தில் முகாமிட்டிருந்தது. மேலும் பி.ஜே.பி சார்பில் சரணகோஷ போராட்டம் என்ற பெயரில் சபரிமலையில் தினம் ஒரு தலைவர் எனச் சென்று சந்நிதானத்தில் பஜனை பாடி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

காங்கிரஸ் கட்சியினர் கேரள மாநிலம் முழுவதும் ஆளும் சி.பி.எம் கட்சிக்கு எதிராக சத்தியாகிரகப் போராட்டங்கள் நடத்தினர். இதற்கிடையில் பிந்து, கனக துர்க்கா ஆகிய இரண்டு பெண்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சந்நிதானத்தில் தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து மேல்சாந்திகள் நடையை சார்த்தி சுத்திகலச பூஜை நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரள மாநிலத்தில் உள்ள 20 நாடாளுமன்றத் தொகுதியில் 19 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. ஒரு தொகுதி மட்டுமே சி.பி.எம் கட்சிக்குக் கிடைத்தது. சபரிமலை விவகாரத்தில் பக்தர்களின் மனதைப் புண்படித்தியதால் சி.பி.எம் கட்சிக்கு மக்கள் பாடம் புகட்டியதாக காங்கிரஸ் விமர்சனம் செய்தது. இதைத்தொடர்ந்து சபரிமலையில் இளம் பெண்களை அழைத்துச் செல்லமாட்டோம் என கேரள மாநில சி.பி.எம் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சபரிமலை
சபரிமலை

இந்த ஆண்டு சபரிமலை செல்ல சுமார் 133 இளம் பெண்கள் முன்பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் சந்நிதானத்தில் பெண்களை அனுமதிக்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டை கேரள அரசு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதனால்தான் சபரிமலை சந்நிதானத்தில் இளம் பெண்கள் வந்தால் என்ன செய்வீர்கள் எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவசியம் இல்லாத கேள்விகளைக் கேட்கக்கூடாது எனக் கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கடிந்துகொண்டார். மேலும் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு வந்தால் பாதுகாப்பு அளிக்க மாட்டோம் . நீதிமன்ற அனுமதி வாங்கி வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை இளம் பெண்கள் வந்தால் அரசே திருப்பி அனுப்பினால் நீதிமன்ற அவமதிப்பாக அமையும் என்பதால், பக்தர்கள் எதிர்க்கிறார்கள் என்ற காரணத்தைக்காட்டி காவல்துறை மூலம் அவர்களைத் திருப்பி அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.