Published:Updated:

23 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம்! - திருவிழாவுக்குத் தயாராகும் தஞ்சை பெரியகோயில்

தஞ்சாவூர் பெரியகோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பாலாலய யாகசாலைக்கு பந்தல் அமைக்கும் பணியைத் தொடங்குவதற்காக இன்று பந்தக்கால் ஊன்றும் முகூர்த்தம் நடைபெற்றது.

பெரியகோயில் விழாவில்
பெரியகோயில் விழாவில்

தஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோயில் வளாகத்தில் பாலாலய யாகசாலைக்கு பந்தல் அமைக்கும் பணியைத் தொடங்குவதற்காகப் பந்தகால் ஊன்றும் முகூர்த்தம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பெரியகோயில் விழாவில்
பெரியகோயில் விழாவில்

தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப் புகழ் பெற்று திகழ்ந்து வருகிறது. யுனெஸ்கோவால் உலக பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. பல சிறப்பு மிக்க தஞ்சை பெரிய கோயில் மாமன்னன் ராஜராஜ சோழனால் கி.பி 1010-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அப்போது ராஜராஜ சோழன் விமரிசையாகக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்தார். அதன் பிறகு, தஞ்சாவூரை ஆண்ட மன்னர்களும் கோயிலில் பல்வேறு திருப்பணிகளைச் செய்து கும்பாபிஷேகம் செய்திருக்கின்றனர்.

இந்த நிலையில், 1996-ம் ஆண்டு கடைசியாகப் பெரிய கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கிட்டத்தட்ட கும்பாபிஷேகம் நடைபெற்று 23 ஆண்டுகள் ஆகிவிட்டன. 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற வேண்டிய கும்பாபிஷேகம் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டுக்கொண்டே சென்றது. கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் எனத் தொடர்ந்து பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையேற்று 23 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் 2020 பிப்ரவரி மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகக் கோயிலில் பல்வேறு புதுப்பிக்கும் பணிகளைச் செய்து வருகிறார்கள் தொல்லியல் துறை அதிகாரிகள்.

பெரியகோயில் விழாவில்
பெரியகோயில் விழாவில்

இந்நிலையில், இன்று பாலாலய யாகசாலை அமைக்கும் பணியைத் தொடங்குவதற்காக, முகூர்த்தக்கால் ஊன்றும் விழா நடைபெற்றது. முகூர்த்த கம்பை வைத்து, சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனைகள் காட்டிய பின்னர் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதைத்தொடர்ந்து வரும் நவம்பர் மாதம் 29-ம் தேதி நான்கு கால யாகசாலை பூஜையுடன் தொடங்கி டிசம்பர் மாதம் 2-ம் தேதி பாலாலயம் நடைபெற உள்ளது. அதன் பிறகு, கோயிலில் நடை சாற்றப்பட்டு, கருவறையிலுள்ள சுவாமிகள் திரை கொண்டு மூடப்படும்.

பின்னர் நடராஜர் மண்டபத்தில், உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட உள்ளது. கும்பாபிஷேக தேதி அறிவிக்கப்பட்ட உடன், கோயில் பின்புறமுள்ள கலையரங்கத்தில் 8 கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட உள்ளது எனக் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்தனர்.

பெரியகோயில் விழாவில்
பெரியகோயில் விழாவில்

23 ஆண்டுகளுக்குப் பிறகு, பெரிய கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை நினைத்து பக்தர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் இப்போதே மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.