Published:Updated:

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இனி லட்டு பிரசாதம்!

புட்டுக்கு மண் சுமந்து திருவிளையாடல் நடத்திய சிவபெருமானுக்குப் பிடித்த புட்டுவை பிரசாதமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சில ஆன்மிக அமைப்பினர் கூறி வந்தனர்

லட்டு
லட்டு ( ஈ.ஜெ.நந்தகுமார் )

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரசாதமாக லட்டு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தீபாவளி அன்று நடைமுறைக்கு வர இருந்த திட்டம் சில நாள்கள் கழித்து வந்தாலும் பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்டு பிரசாதம்
லட்டு பிரசாதம்

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். தினமும் திருவிழா என்பதுபோல் தினமும் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும். மீனாட்சியம்மன் கோயிலில் வழிபட வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக இனிப்பு வழங்க முடிவு செய்த கோயில் நிர்வாகத்தினர், லட்டு வழங்க முடிவெடுத்து சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர்.

லட்டு வழங்கக் கூடாது, புட்டுக்கு மண் சுமந்து திருவிளையாடல் நடத்திய சிவபெருமானுக்குப் பிடித்த புட்டுவை பிரசாதமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சில ஆன்மிக அமைப்பினர் கூறி வந்தனர். ஆனால், லட்டுதான் சில நாள்கள் வரை கெடாமல் வைத்து சாப்பிடக் கூடியது என்று முடிவெடுத்து, இதற்கான தயாரிப்பு இயந்திரங்களை பெற்று வேலையாட்களையும் நியமித்தனர்.

காணொலிக் காட்சி
காணொலிக் காட்சி

தீபாவளிக்கு வழங்கலாம் என்று திட்டமிட்டனர். முதலமைச்சரின் அனுமதி கிடைக்காததால் காலதாமதமான நிலையில், இன்று காலை லட்டு பிரசாதம் வழங்குவதை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். கோயில் தக்கார் கருமுத்துக் கண்ணன், இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று முதல் லட்டு பிரசாதம்...`விறுவிறு' தயாரிப்பு பணிகள்!

கோயில் திறந்தது முதல் நடை சாற்றும் வரை கோயிலுக்கு வரும் பக்தர்கள் மீனாட்சியம்மனை தரிசித்துவிட்டு சொக்கநாதரை தரிசிக்கச் செல்லும் வழியில் முக்குறுணி விநாயகர் சந்நிதி அருகில் லட்டு பிரசாதம் வழங்கப்பட உள்ளதாகக் கூறினார்கள்.

லட்டு பிரசாதம்
லட்டு பிரசாதம்

சுகாதாரமான முறையில் நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் முதல் இருபதாயிரம் லட்டுகள் தயாரிக்கப்பட உள்ளதாகவும், கூட்டம் அதிகம் வரும் நாளில் அதிகமாக லட்டு தயாரிக்கப்படும் என்றும் கோயில் ஊழியர்கள் கூறினார்கள். லட்டுக்கு, இனி திருப்பதி மட்டுமல்ல; மதுரையும் ஃபேமஸ்தான்.