Published:Updated:

`குறை தீர்க்கும் மகாதேவர்... சித்தர்கள் தொழும் மனோன்மணி!' 7-ம் நூற்றாண்டுக் கோயில் கும்பாபிஷேகம்

மகாதேவர்
மகாதேவர்

சித்தர்கள் போற்றி வணங்கும் தெய்வம் மனோன்மணி. மனதை அடக்கியே சித்தர்கள் அஷ்டமா சித்திகளைப் பெற்றனர். அன்னையின் சந்நிதி இருக்கும் தலங்களில் சித்தர்கள் தினமும் அரூபமாய் வந்து வழிபாடு செய்வர் என்பது ஐதிகம்.

சிவபெருமானுக்கு மகாதேவர் என்ற திருநாமம் உண்டு. தேவர்களுக்கு எல்லாம் தேவராக விளங்கும் மகாதேவராக இறைவன் கோயில்கொண்ட தலங்கள் மிகவும் சிறப்புமிக்கவை. அங்கு நம் குறைகளைச் சொல்லி வழிபட உடனே அவற்றைத் தீர்த்தருள்வாராம் மகாதேவர். அப்படி ஒரு தலம் கடம்பத்தூர் அருகேயிருக்கும் அகரம் கிராமத்தில் உள்ளது.

அகரம் மகாதேவர் ஆலய கும்பாபிஷேகம்
அகரம் மகாதேவர் ஆலய கும்பாபிஷேகம்

இந்தத் தலத்தில் அம்பிகையின் திருப்பெயர் மனோன்மணி என்பதாகும். மனோன்மணி என்றால் மனதின் உள்ளே மணியாகத் தோன்றி அருள்பவள் என்றுபொருள். லலிதா சகஸ்ரநாமம் போற்றும் ஆறு ஆதார தேவதைகளும் மனோன்மணியுள் அடக்கம் என்கின்றனர் ஞானியர். சித்தர்கள் போற்றி வணங்கும் தெய்வம் மனோன்மணி. மனதை அடக்கியே சித்தர்கள் அஷ்டமா சித்திகளைப் பெற்றனர். அன்னையின் சந்நிதி இருக்கும் தலங்களில் சித்தர்கள் தினமும் அரூபமாய் வந்து வழிபாடு செய்வர் என்பது ஐதிகம்.

மகாதேவர்
மகாதேவர்

மனோன்மணி அம்மை தன்னை வணங்கும் பக்தர்களின் மனதில் குடியேறி அவர்களை நல்வழிப்படுத்துவாள். மனோன்மணி அம்பாள் இந்தத் தலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். அன்னை மனோன்மணியை வழிபட மனநலம் கூடும் என்றும் வாழ்வில் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் என்றும் சொல்கிறார்கள்.

இத்தகைய சிறப்புகளையுடைய சிவனும் அம்பாளும் கடம்பத்தூர் அருகேயிருக்கும் அகரம் கிராமத்தில் கோயில் கொண்டருள்கின்றனர். 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கோயில் காலப்போக்கில் சிதைவுற்றது. இது கண்டு வருந்திய சிவனடியார்கள் பெருமுயற்சிகொண்டு இந்த ஆலயத் திருப்பணிகளைத் தொடங்கினர். அதன் பலனாகத் தற்போது இந்த ஆலயம் குடமுழுக்கு செய்யத் தயாராக உள்ளது. குடமுழுக்கையொட்டி இங்கு (28.1.2020) இன்று யாகசாலை பூஜைகள் தொடங்கியுள்ளன. இன்றுகாலை கணபதிஹோமம், மஹாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், புதிய சிலைகள் கண் திறப்பு ஆகிய வைபவங்கள் நடைபெற்றன.

லிங்கம்
லிங்கம்

நாளை (29.1.2020) விசேஷ சாந்திபூஜை, ஷண்ணவதி ஹோமம், திரவ்யாஹுதி ஆகியன நடைபெற உள்ளன. 30.1.2020 அன்று குடமுழுக்கு நாள் அன்று யாகங்கள் நடத்தப்பட்டு மஹாபூர்ணாஹூதி நடைபெறும். பின்பு மனோன்மணி சமேத மகாதேவர் சந்நிதி விமான கும்பாபிஷேகமும், மூலவர் கும்பாபிஷேகமும் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் சிவாசார்யர்களும் சிவனடியார்களும் திரளாகக் கலந்துகொள்வர்.

எப்படிச் செல்வது? : சென்னை அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் கடம்பத்தூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது இக்கோயில். கடம்பத்தூரிலிருந்து ஷேர் ஆட்டோ வசதியும் இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு