Published:Updated:

காஞ்சி வரதருக்கு ரகசிய பங்குனி உற்சவமா.. அறநிலையத்துறை அமைச்சர் சொல்வது என்ன?

உற்சவத்தில் வரதர் (கோப்புப் படம்)
உற்சவத்தில் வரதர் (கோப்புப் படம்)

ஸ்ரீரங்கம் கோயிலில் கூட பங்குனி உத்திரத்தை நிறுத்திவிட்டார்கள். அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறும் விதமாக பங்குனி உற்சவப் பெருவிழாவைக் கோயிலுக்குள்ளேயே நடத்தவிருக்கிறார்கள். இதைத் தமிழக அரசு தடைசெய்ய வேண்டும்.

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் கடந்த வருடம் நடைபெற்ற அத்திவரதர் வைபவத்தின் போது நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் அத்திவரதரை தரிசனம் செய்தனர். 48 நாள்களில் ஒரு கோடி பக்தர்கள் ஒரே இடத்தில் குவிந்தது வரலாற்றில் அதுவே முதல்முறை என்கிறார்கள். அதுபோல் தேவராஜபெருமாள் கோயிலுக்குக் குறைந்த அளவு பக்தர்கள் வந்தது இதுவே முதல் முறை என்ற வரலாற்றுப் பதிவும் சில தினங்களில் நிகழவிருக்கிறது. கொரோனா தொற்று காரணமாக அனைத்துக் கோயில்களிலும் திருவிழாக்களுக்குத் தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் காஞ்சிபுரம் தேவராஜபெருமாள் கோயிலில் மட்டும் பங்குனி உற்சவம் நடைபெறவிருப்பதாகக் கோயில் வட்டாரத்திற்கு நெருக்கமான சிலர் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறார்கள்.

வரதராஜ பெருமாள்
வரதராஜ பெருமாள்

கொரோனா தொற்று நோய் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்து கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என அனைத்து ஆன்மிகத் தளங்களிலும் மக்கள் கூடுவதற்கு அனுமதியில்லை. கோயில்களில் தினசரி பூஜைகள் செய்ய மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரம்மோற்சவம் போன்ற திருவிழாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், “காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரம் நடத்தத் தீவிர ஏற்பாடு செய்து வருகிறார்கள். ஸ்ரீரங்கம் கோயிலில் கூட பங்குனி உத்திரத்தை நிறுத்திவிட்டார்கள். அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறும் விதமாக பங்குனி உற்சவ பெருவிழாவைக் கோயிலுக்குள்ளேயே நடத்த இருக்கிறார்கள். இதைத் தமிழக அரசு தடைசெய்ய வேண்டும்” என அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்திவரதர் வைபவத்தின் போது
அத்திவரதர் வைபவத்தின் போது

இந்தத் தகவல் உண்மைதானா எனக் கோயில் வட்டாரத்தில் விசாரித்தோம். இது குறித்து தேவராஜபெருமாள் கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் கூறுகையில் “கோயிலை விட்டு உற்சவர் வெளியில் செல்லமாட்டார். இதனால் உற்சவம் நடைபெறாது. நித்தியப்படி மட்டும் நடைபெறும். வெளி பக்தர்கள் அனுமதி கிடையாது. அர்ச்சகர்கள் மற்றும் ஸ்தானிகர்கள் தலா 3 பேர் மட்டுமே இதில் கலந்து கொள்வார்கள். பங்குனி உற்சவம் நடைபெறும் என்பது ஒரு சிலர் செய்யும் வதந்தி.” என்கிறார்

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், “தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் திருவிழாக்கள் செய்யத் தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறோம். காஞ்சிபுரம் கோயிலில் மட்டும் எப்படி பங்குனி உத்திரம் நடைபெறும்? தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும். பொதுமக்கள் யாரும் கோயிலுக்கு வர அனுமதி இல்லை.

தேவராஜ பெருமாள் கோயில்
தேவராஜ பெருமாள் கோயில்

அரசு உத்தரவுகளை மீறி பங்குனி உத்திரம் நடைபெற்றால் அந்தக் கோயில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார். அர்ச்சகர்களுக்கிடையே ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக யாராவது எதையாவது கிளப்பி விடுவார்கள்.” என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு