Published:Updated:

மகான்கள் வழிபட்ட செவலப்புரை அகத்தீஸ்வரர் கோயில்... புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

Agatheeswarar temple
Agatheeswarar temple

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது செவலப்புரை கிராமம். இங்குதான் அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுப் பழைமை கொண்ட இந்த ஆலயத்தில் தற்போது புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் பழைமையும் பெருமையும் வாய்ந்த கோயில்கள் அநேகம் உள்ளன. அவை கலைப் பொக்கிஷங்களாகவும் வரலாற்று ஆதாரங்களாகவும் விளங்குவன. வரலாற்று ஆய்வாளர்கள் நம் புராதனக் கோயில்களை ஆய்வுசெய்து, புதிய கல்வெட்டுகளையும் கட்டுமானங்களையும் கண்டுபிடித்து நம் பாரம்பர்யத்துக்குப் பெருமை சேர்த்துவருகிறார்கள். அவ்வாறு அண்மையில் ஆய்வு மேற்கொண்டு புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ஆலயம், செவலப்புரை அகத்தீஸ்வரர் கோயில்.

Agatheeswarar temple
Agatheeswarar temple

செஞ்சியிலிருந்து வடமேற்குத்திசையில் 9 கி.மீ தொலைவில் உள்ளது செவலப்புரை கிராமம். இங்குதான் 13 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. வராக நதியின் வடபுறத்தில் அமையப்பெற்ற செவலப்புரை கிராமத்தின் ஈசானிய பாகத்தில் அமைந்துள்ளது ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம்.

அகத்திய முனிவர், சிவபெருமானை வழிபட்ட தலத்து இறைவனை `அகத்தீஸ்வரர்' என்று அழைப்பது மரபு. இந்தத் தலத்திலும் அகத்தியர் தங்கியிருந்து சிவபெருமானை வழிபாடு செய்ததாகத் தலவரலாறு சொல்கிறது.

Inscription
Inscription

அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர், இங்கு சுயம்புவான மூர்த்தியாக லிங்கத் திருமேனியோடு அருள்பாலிக்கிறார். அன்னையின் திருநாமம் பிரகன்நாயகி. திருக்கோயிலில் நுழைந்ததும் தெற்குத்திசை நோக்கி அமர்ந்து காட்சிகொடுக்கும் ஸ்ரீநிர்விக்ன கணபதியை தரிசனம் செய்யலாம். அற்புத லிங்கத் திருமேனியையும் எழிலோடு காட்சிகொடுக்கும் பிரகன்நாயகியையும் கண்டு வழிபட பேரானந்தம் பிறக்கும்.

பிராகாரத்தில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் ஆகிய தெய்வங்களின் சந்நிதிகளும் காணப்படுகின்றன. ஆலயத்தின் எதிரில் கிழக்குத் திசையில் திருக்குளமும், கல்லாலான 30 அடி உயர தீப ஸ்தம்பமும் காணப்படுகின்றன.

Agastheeswarar
Agastheeswarar

``அக்னி ஷேத்திரமாக விளங்கும் திருவண்ணாமலையில் ஜோதி பிழம்பாக ஈசன் தோன்றியபோது அவரின் திருமுடியைக் காண பிரம்மனும், திருவடியைக் காண திருமாலும் முயன்றனர். அப்போது திருமால், வராக (பன்றி) வடிவமெடுத்து பூமியைக் குடைந்தபோது உருவானதே `வராக நதி' எனக் கருதப்படுகிறது.

இந்த வராக நதி செஞ்சியை வந்தடைந்தபோது `சங்கராபரணி' எனப் பெயர் மாற்றம் பெறுகிறது. வராகநதியின் வடக்கில், ஊரின் ஈசானிய மூலையில் `ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம்' அமையப்பெற்றுள்ளது.

இந்தக் கோயிலுக்கு வந்து பிரார்த்தனை செய்து வழிபட்டால் விரைவில் திருமண வரம் வாய்க்கும்; குழந்தை பாக்கியம் கிட்டும்; நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயத்தின் தல விருட்சமாகச் சரக்கொன்றை திகழ்கிறது.

Brahan Nayahi
Brahan Nayahi

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா அபிஷேக ஆராதனையோடு சிறப்பாகக் கொண்டாடப்படும். விஜயதசமியன்று சுவாமி திருவீதி உலா காண்பார். இங்கு, பிரதோஷம், விசேஷ நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழாவின்போது, கோயிலின் முகப்பில் இருக்கும் 30 அடி தீப ஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டு கோலாகலமாக வழிபாடு செய்யப்படும்.

இத்தனை சிறப்புகள் மிக்க இந்த ஆலயத்தில்தான் சில தினங்களுக்கு முன்பு கள ஆய்வு மேற்கொண்டனர் பேராசிரியர்கள் ரமேஷ், ரங்கநாதன் மற்றும் ஜோதிபிரகாஷ் குழுவினர். இங்கு புதிய கல்வெட்டுகளைக் கண்டறிந்துள்ளனர். இவை, பாண்டியர்கள் காலம் மற்றும் சம்புவராயர்கள் காலத்தைச் சேர்ந்தவை.

இது குறித்துப் பேராசிரியர் ரமேஷிடம் பேசினோம்.

Lamp post
Lamp post

``இங்கு கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு வெவ்வேறு கால கல்வெட்டுகளை ஆய்வு செய்தோம். அவற்றில் ஒன்று ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் ஆட்சிக்காலத்தில் கி.பி.1312-ல் பொறிக்கப்பட்டது. செவலப்புரை எனத் தற்போது அழைக்கப்படும் இந்த ஊரின் பெயர் `ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து சிங்கப்புர நாட்டு செவ்வலப்புரையூர்' என அந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோழர்களின் ஆட்சிக்குப் பிறகு இப்பகுதியில் பாண்டியர்கள் ஆட்சி ஏற்பட்டதையும், ஆலயத்தின் பெயர் அக்காலத்தில் `அகத்தீஸ்வரமுடைய நாயனார்' என அழைக்கப்பட்டதும் தெளிவாகப் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கோயிலுக்கு இவ்வூரிலுள்ள நன்செய், புன்செய் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. பாண்டியர்கள் ஆட்சிக் காலத்தில் இப்பகுதியில் விதிக்கப்பட்ட வரிகளான மரவடை, குளவடை, செக்கிறை, தட்டார்பாட்டம், தட்டொலி, புறவடை மற்றும் தறியிறை போன்ற வரிகள் விதிக்கப்பட்டதையும் அவையனைத்தும் கோயிலுக்கே வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டதும் தெளிவாகக் குறிப்பட்டுள்ளது.

இந்த சிவன் ஆலயத்துக்காக வழங்கப்பட்ட நிலம் `திருநாமத்துக்காணி' என்ற பெயரில் அளிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பெருமாள் கோயிலுக்கு `நாலுமா' நிலம் இருந்துள்ளது. அவை, `திருவிடையாட்டம்' எனவும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இதுகுறித்துப் பெருமாள் கோயிலில் கல்வெட்டுகள் ஏதுமில்லை.

இவ்விதமான கொடையை செஞ்சி மலைப்பற்றைச் சேர்ந்த ஜெயங்கொண்ட சோழ பிரமராயன் மற்றும் அகம்படி வேளான், காட்டுப்பள்ளி வேளான் ஆகியோர் தானத்துக்கு கையொப்பமிட்டுள்ளனர். இந்தச் சிவாலயத்துக்கு வடக்குத் திசையில் உள்ள வயல்வெளிப் பகுதியில் மற்றுமொரு தனிக் கல்வெட்டு இருப்பதைக் கண்டறிந்தோம்.

Inscription
Inscription

இக்கல்வெட்டு `ராசநாராயணன் திருமல்லிநாதன் சம்புவராயன்' காலத்தைச் சேர்ந்தது. கி.பி.1356 -ல் `சோணாடு கொண்டான் திருவீதி என்ற பெயரில் `அஞ்சினான் புகலிடம்' ஏற்படுத்தி, அதை திருநாமத்துக் காணிக்கையாக வழங்கினான்' என்பதைக் குறிப்பிடுகிறது. அதாவது, போர் நிகழும் காலங்களில் போருக்கு அஞ்சித் தஞ்சமடைவோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் புகலிடமாக இந்த இடம் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில் இருக்கும் அகதிகள் முகாம்போல இதைக் கருதலாம்.

இவ்வாறு, இங்கு பாதுகாப்புத் தேடி வருபவர்கள் இங்கு தங்குவதற்கு வரி செலுத்த வேண்டும். அவ்வாறாகப் பெறப்பட்ட வரிகளும் அகத்தீஸ்வரர் கோயிலுக்கு வழங்கப்பட்டது என்பதைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

`சோணாடு கொண்டான்' என்பதற்கு `சோழ நாட்டை வெற்றிகொண்டான்' என்பது பொருளாகும். எனவே, இந்தச் சிறப்பு பெயரின் அடிப்படையில் அஞ்சினான் புகலிடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இக்கல்வெட்டு இருக்கும் இடம் தற்போது கோயிலுக்குச் சொந்தமான பகுதியாகவே உள்ளது. இதுபோன்ற அஞ்சினான் புகலிடம் கல்வெட்டு இம்மாவட்டத்தில் ஜம்பை போன்ற பகுதியிலும் ஏற்கெனவே கிடைத்திருக்கிறது.

Jeshta Devi
Jeshta Devi

இதை வைத்துப் பார்த்தால் இப்பகுதிகள் அக்காலத்தில் எல்லைப் பகுதிகளாகவே இருந்திருக்கின்றன. எனவேதான் இங்கு, பல பகுதிகள் அஞ்சினான் புகலிடமாக ஆக்கப்பட்டிருக்கின்றன. இப்புதிய கல்வெட்டு மூலம் பாண்டியர்கள் கால ஆட்சி இப்பகுதியில் பரவியதையும், சம்புவராயர்கள் ஆட்சிக் காலத்தில் இவ்வூரில் அகதிகள் பாதுகாப்பு முகாம் இருந்ததையும் அறிய முடிகிறது. இக்கண்டுபிடிப்பு இப்பகுதியிலுள்ள கால வரலாற்றை அறிந்துகொள்ள பெரிதும் பயன்படும். மேலும், இங்கு 1300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பல்லவர் கால `ஜேஷ்டா தேவி' சிற்பம் ஒன்றும் பராமரிப்பு இன்றித் திறந்தவெளியில் உள்ளது. அதையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் பேராசிரியர் ரமேஷ்.

குளித்தலையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குமிழித் தூம்புக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
பின் செல்ல