'கருவறைக்குள் செல்ல முயன்ற காவலர்; அலட்சியம் காட்டிய ஊழியர்' -ராமேஸ்வரம் கோயிலில் ஆகம விதிமீறல்?

கோயிலில் 9 கால பூஜைகளும் தொடர்ந்து நடந்துவருகின்றன. இதற்கென அங்கு பணிபுரியும் குருக்கள்கள், ஊழியர்கள் மற்றும் கோயில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் கோயிலுக்குள் சென்று வருகின்றனர்.
ராமேஸ்வரம் கோயில் ஊழியர்களின் தொடர் அலட்சியத்தால் ஆகம விதிமீறல் சம்பவங்கள் தொடர் கதையாகிவருவதாக பக்தர்கள் பலர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

கொரானோ வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு இன்றுடன் 24-வது நாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள், மசூதிகள், தேவாலயங்கள் என அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களின் தரிசனம் மற்றும் வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்து ஆலயங்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோயில்களில் வழக்கமாக நடைபெறும் பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோயிலிலும் கொரானோ ஊரடங்கினால் பக்தர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கோயிலில் வழக்கமாக நடைபெறும் 9 கால பூஜைகளும் தொடர்ந்து நடந்துவருகின்றன. இதற்கென ஆலயத்தில் பணிபுரியும் குருக்கள்கள், ஊழியர்கள் மற்றும் கோயில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் கோயிலுக்குள் சென்றுவருகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் கோயிலின் தெற்குக் கோபுர வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த காவலர் ஒருவர், காலை வேளையில் சுவாமி சந்நிதிக்குச் சென்றுள்ளார். அங்கு பணியில் இருக்கவேண்டிய குருக்கள் இல்லாத நிலையில், திருநீரை எடுப்பதற்காக சாமி சந்நிதியின் கருவறைக்குள் நுழைய முயன்றுள்ளார். இதைக் கண்ட, அருகில் உள்ள சந்நிதியில் இருந்த குருக்கள் ஒருவர் குரல் எழுப்பி, அந்தக் காவலரை மேலும் உள்ளே சென்றுவிடாமல் தடுத்துள்ளார்.
கோயில் கருவறைக்குள் காவலர் நுழைய முயன்ற தகவலை அறிந்த இணை ஆணையர், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், காவலர் கருவறை மண்டபத்தினுள் நுழைய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் காவலர் மீது காவல் துணை கண்காணிப்பாளரிடம் திருக்கோயில் நிர்வாகத்தினர் புகார் அளித்தனர். டிஎஸ்பி நடத்திய விசாரணையில், கருவறை மண்டபத்திற்குள் நுழைய முயன்ற காவலர், ஒரு வாரத்துக்கு முன்னர்தான் கோயில் பணிக்கு வந்ததும், அந்தக் காவலருக்கு இந்தக் கோயிலின் ஆகமவிதிகள் தெரியாத நிலையில், திருநீர் எடுப்பதற்காகக் கருவறை மண்டபத்தினுள் செல்ல முயன்றதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணை அறிக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் கோயிலில் பணியாற்றும் ஊழியர்கள் பலரும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படாத நிலை தொடர்ந்து வருவதாக பக்தர்கள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இதன் காரணமாகத்தான் தீர்த்த கட்டண டிக்கெட்டில் மோசடி, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கையாடல், பூஜை கட்டண டிக்கெட்டுக்கான மின்னணு கருவிமூலம் பல லட்ச ரூபாய் மோசடி, ஆகம விதிகளை மீறி மூலவரை படம் எடுத்த அர்ச்சகர் என முறைகேடுகளும், மோசடிகளும் தொடர்கின்றன.
ஆனால், இவற்றைக் கட்டுப்படுத்தவேண்டிய ஆலய நிர்வாகமோ இதுகுறித்தெல்லாம் காவல் துறையினரிடம் பெயரளவிற்கு புகாரை கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொள்கிறது என்கிறார்கள் பக்தர்கள். ஆலய நிர்வாகமும் கடுமையான நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் கோயிலில் தொடர்ந்து ஆகம விதி மீறல்கள் மற்றும் மோசடிகளால் பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதுகுறித்து ராமேஸ்வரம் டிஎஸ்பி மகேஷிடம் கேட்டபோது, "சம்பந்தப்பட்ட காவலர், சாயல்குடி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேல் நடவடிக்கைக்காக விசாரணை அறிக்கை மாவட்ட கண்காணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.
திருக்கோயில் நிர்வாகத்தினர், "ஆகம விதிகள் மீறிய காவலர் மீது புகார் அளித்துள்ளோம். மேலும் இச்சம்பவம் நிகழாத வகையில் பணியின்போது அலட்சியமாக இருந்த ஆலயப் பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.