Published:Updated:

`சபரிமலைக்கு வந்த ஆந்திர பெண்கள்!'- வரலாறுகளைக் கூறி திருப்பி அனுப்பிய கேரள போலீஸ்

இளம் பெண்கள் பம்பை நதிக்கரை வரை வந்ததை தொடர்ந்து நிலக்கல்லில் போலீஸார் அனைத்து பேருந்துகளையும் சோதனையிட்டு வருகின்றனர். அனைவரிடமும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வாங்கி பரிசோதித்த பிறகுதான் பம்பைக்கு அனுப்பப்படுகின்றனர்.

சபரிமலை
சபரிமலை

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மகரவிளக்கு மண்டலகால பூஜைக்காக சந்நிதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு மஹேஸ்வர் மோகனரும், புதிய மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரியும் இணைந்து ஐயப்ப சுவாமி கோயில் திருநடையை திறந்தனர். பின்னர் பதினெட்டாம்படி அருகே ஆழி குண்டத்தில் நெருப்பு பற்றவைத்தார் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி.

சபரிமலை நடை திறப்பு
சபரிமலை நடை திறப்பு

சபரிமலையில் அனைத்து பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பு மீதான மறு சீராய்வு மனு ஏழுபேர் கொண்ட பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதே சமயம் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லும் விஷயத்தில் நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. இதற்கிடையில் இந்த ஆண்டு இளம் பெண்களை சபரிமலைக்கு அனுப்ப வேண்டாம் என கேரள அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்த 40 பக்தர்கள் இன்று பம்பை நதிக்கரையை அடைந்தனர். அவர்களுடன் 50 வயது பூர்த்தியாகாத இளம் பெண்கள் பத்துபேர் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். அவர்களை அடையாளம் கண்டுகொண்ட போலீஸார் அவர்களுக்குச் சபரிமலையின் நம்பிக்கை வரலாறுகளைக் கூறி திருப்பி அனுப்பினர்.

போலீஸ் சோதனை
போலீஸ் சோதனை

இளம் பெண்கள் பம்பை நதிக்கரை வரை வந்ததை தொடர்ந்து நிலக்கல்லில் போலீஸார் அனைத்து பேருந்துகளையும் சோதனையிட்டு வருகின்றனர். அனைவரிடமும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வாங்கி பரிசோதித்த பிறகுதான் பம்பைக்கு அனுப்பப்படுகின்றனர். கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் நிலக்கல் வரைதான் பக்தர்கள் தங்கள் வாகனத்தில் செல்ல முடியும். நிலக்கல்லில் வாகனங்களை பார்க் செய்துவிட்டு அங்கிருந்து பேருந்தில் பம்பை நதிக்கரையை அடையலாம். பம்பை செல்லும் அனைத்து பேருந்துகளில் உள்ள பெண்களையும் பெண் போலீஸார் சோதனைக்கு உட்படுத்துகிறார்கள்.