Published:Updated:

`முத்துகுமாரசுவாமி திருக்கல்யாணம்... தைப்பூச திருவிழா!' - பக்தி வெள்ளத்தில் பழநி, திருச்செந்தூர்

திருக்கல்யாணம்
திருக்கல்யாணம்

தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான முத்துகுமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் பழநியில் நடைபெற்றது.

பழநி!

தமிழ் கடவுளாம் முருகப்பெருமானின் படைவீடுகளில் முக்கியமான படைவீடு பழநி. பொதுவாக முருகன் கோயில்கள் கிழக்கு நோக்கியே இருக்கும். ஆனால், சுவாமி மேற்கு நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கும் தலம் பழநி. போகர் உருவாக்கிய நவபாஷாண திருவுருவச் சிலை இந்தக் கோயிலின் சிறப்பு. உலகமெங்கும் இருக்கும் முருக பக்தர்களுக்குப் பழநி புண்ணியபூமி. அறுவடைக் காலம் முடிந்த பிறகு, தங்கள் விளைநிலங்களில் விளைந்த பொருள்களை முருகனுக்கு அர்ப்பணிப்பதுதான் தைப்பூச விழாவின் அடிப்படை.

திருக்கல்யாணம்
திருக்கல்யாணம்

தை பௌர்ணமி அன்று, சந்திரனும் சூரியனும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்வார்கள். கடக ராசிக்குரியது பூச நட்சத்திரம். அந்த ராசியின் அதிபதி சந்திரன். மகர ராசிக்கு உரியவர் சூரியன். தைப்பூச நாளில் இருவரது பார்வையும் சந்திக்கும். இது பக்தர்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும்.

அதனால் இந்த நாளில் தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் 2 கி.மீ தூரமுள்ள மலையைச் சுற்றி வரும் கிரிவலப் பாதையில் நடந்தால், பல்வேறு நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

திருக்கல்யாணம்
திருக்கல்யாணம்

இந்த நாளில் முருகனைத் தரிசிப்பதற்காக விரதமிருந்து பாதயாத்திரையாகப் பக்தர்கள் பழநிக்கு வருகிறார்கள். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த நாளில் பழநியில் தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா, தற்போது பழநியில் நடைபெற்று வருகிறது. அரோகரா... கோஷத்தால் அதிர்ந்துகொண்டிருக்கிறது பழநி.

தைப்பூச திருவிழாவால் பழநி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பிப்ரவரி 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவிழா. 10 நாள்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் வள்ளி தெய்வானை சமேதமாக முத்துக்குமாரசுவாமி ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.

திருவுலா
திருவுலா

விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று பெரியநாயகியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. மணக்கோலத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். திருமணத்தைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். தேவராட்டம், கும்மியென முருகன் புகழைப் பாடிக்கொண்டே அரோகரா... கோஷம் எழுப்பியபடி இருந்தனர்.

பக்தர்கள் வெள்ளம்
பக்தர்கள் வெள்ளம்

தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மாலை நடைபெற இருக்கிறது. அதில் பங்கேற்கவும் தரிசிப்பதற்காகவும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழநியில் தங்கியிருக்கிறார்கள்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடும் கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் தைப்பூசமும் ஒன்று. ஐப்பசி மாதத்தில் வரும் கந்தசஷ்டி விழாவில் அசுரர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றார் முருகப் பெருமான். போருக்குச் செல்லும் முன்பாக பராசக்தி ஞானவேல் கொடுத்த தினம் பூசம் நட்சத்திர நாள்.

`முத்துகுமாரசுவாமி திருக்கல்யாணம்... தைப்பூச திருவிழா!' - பக்தி வெள்ளத்தில் பழநி, திருச்செந்தூர்

முருகனின் வெற்றிக்காக அம்பிகை, வேல் வழங்கிய நாள் பூச நட்சத்திரம் என்பதால், அந்த நாளில் முருகனை தரிசித்தால் எதிரிகள் விலகி, தடைகள் நீங்கி நினைத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டது.

மாலை, சுவாமி அலைவாய் உகந்த பெருமான் தங்கச்சப்பரத்தில் வீதியுலா வருதலும், இரவில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது. இதற்காகப் பக்தர்கள் பல்வேறு மலர்களை அளித்து வருகின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு தூத்துக்குடி மட்டுமல்லாமல் நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விரதமிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வருவது வழக்கம்.

`முத்துகுமாரசுவாமி திருக்கல்யாணம்... தைப்பூச திருவிழா!' - பக்தி வெள்ளத்தில் பழநி, திருச்செந்தூர்

இந்த ஆண்டும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். அலங்கரிக்கப்பட்ட லோடு ஆட்டோ, மினிவேனில் முருகப் பெருமானின் சிலை, திருவுருவப்படத்தை வைத்து பக்திப் பாடல்களைப் பாடியவாறு பாதயாத்திரையாக வந்துள்ளனர்.

பச்சை வேட்டி உடுத்திய பக்தர்கள் அலகு குத்தியும் அங்கப்பிரதட்சனம் செய்தும் காவடி தூக்கியும் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். கடலிலிலும் நாழிக்கிணறிலும் நீராடி அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

`முத்துகுமாரசுவாமி திருக்கல்யாணம்... தைப்பூச திருவிழா!' - பக்தி வெள்ளத்தில் பழநி, திருச்செந்தூர்

கடற்கரையில் மணலைக் குவித்து முருகப் பெருமானின் திருவுருவப் படத்தை வைத்து, பக்தர்கள் வட்டமாகச் சுற்றி அமர்ந்து கைகளைத் தட்டியும் ஓசை எழுப்பியும் பாடல்கள் பாடி வருகின்றனர். திருக்கோயில் நுழைவு வாயில் பகுதி முதல் கடற்கரை வரை திரும்பும் திசையெங்கும் பக்தர்களின் காவடியாட்டம், ஆடல், பாடல், பஜனையால் பக்தி பரவிக் காணப்படுகிறது. பக்தர்களின் `அரோகரா’ கோஷமும் ஓங்கி எதிரொலிக்கிறது.

தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக நெல்லை, தூத்துக்குடியில் இருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு