Published:Updated:

"இதே போன்ற மூலஸ்தானம் மீண்டும் கிடைக்காது" - ஜாக்கிகள் மூலம் மாரியம்மன் கோயிலை நகர்த்தும் ஊர்மக்கள்!

நகர்த்தப்படும் மாரியம்மன் கோயில்

நான்கு வழிச்சாலைப் பணிக்காக மாரியம்மன் கோயிலை இடிக்கும் சூழல் ஏற்பட்ட போதும், கோயிலை இடிக்காமல் நகர்த்தி வைத்துக் கும்பாபிஷேகம் செய்யும் முயற்சியில் ஊர்மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

"இதே போன்ற மூலஸ்தானம் மீண்டும் கிடைக்காது" - ஜாக்கிகள் மூலம் மாரியம்மன் கோயிலை நகர்த்தும் ஊர்மக்கள்!

நான்கு வழிச்சாலைப் பணிக்காக மாரியம்மன் கோயிலை இடிக்கும் சூழல் ஏற்பட்ட போதும், கோயிலை இடிக்காமல் நகர்த்தி வைத்துக் கும்பாபிஷேகம் செய்யும் முயற்சியில் ஊர்மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

Published:Updated:
நகர்த்தப்படும் மாரியம்மன் கோயில்
விழுப்புரம் - நாகப்பட்டினம் வரையிலான நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதற்காக, தேவைப்படும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், இந்து சமய அறநிலையத்துறை மூலமாக சாலையோரம் உள்ள கோயில்களுக்கும் இழப்பீடுகள் வழங்கி அப்புறப்படுத்துவதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில், கெங்கராம்பாளையத்தில் உள்ள 70 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான 'கெங்கை முத்து மாரியம்மன்' கோயிலை அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நகர்த்தப்படும் கோயில் - கெங்கராம்பாளைய ம்
நகர்த்தப்படும் கோயில் - கெங்கராம்பாளைய ம்

ஆனால், ஊர் மக்களின் வழிபாட்டுத் தலமாக இந்த ஆலயம் திகழ்ந்ததாலும், அரசு போதிய இழப்பீடு வழங்காதாலும் கோயிலை இடிக்க மனமில்லாத ஊர்மக்கள், அந்தக் கோயிலை அஸ்திவாரத்துடன் நகர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அந்தக் கோயில் அறங்காவலர் குழு ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து என்பவரிடம் பேசினோம். "விழுப்புரத்திலிருந்து புதுவை, கடலூர் வழியாக நாகப்பட்டினம் வரையிலான நான்கு வழிச்சாலைக்காக எங்கள் ஊரில் உள்ள மாரியம்மன் கோயிலை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கூறினார்கள்.

ஆனால், இந்த மாரியம்மன் கோயில் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது. ஆரம்பக் காலகட்டத்தில் கொட்டகையில் வைத்து வழிபட்டு வந்தோம். பின்னர் 2000-வது வருடம் ஊர் மக்கள் கூடி சிற்ப வேலைபாடுகளுடன் அழகிய கோயிலைக் கட்டிக் கும்பாபிஷேகம் செய்தோம்.

அதன் பின் 2012-ம் ஆண்டு மீண்டும் கும்பாபிஷேகம் செய்தோம். மேலும் வருடா வருடம் ஊர் மக்களால் சிறப்பான முறையில் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்தான் சாலை விரிவாகத்திற்காகக் கோயிலை இடிக்கச் சொன்னார்கள். ஆனால், அந்தக் கோயிலைப் புதியதாகக் கட்ட வேண்டும் என்றால் 70 - 80 லட்சம்வரை செலவாகும். இந்து சமய அறநிலையத்துறையும் இந்தக் கோயிலை கட்டுவதற்கு 73 லட்சம் வரை செலவாகும் என என்.ஹச்.ஏ.ஐ-க்குப் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் அவர்களோ 23.36 லட்சம் மட்டுமே இழப்பீடாக கொடுக்க முன் வந்தனர். அந்தத் தொகையை வைத்து எங்களால்  இதேபோன்று புதிய கோயிலைக் கட்ட முடியாது. மேலும் புதியதாக கோயிலையே கட்டினாலும், தற்போது இருக்கும் ஆலயத்தின் மூலஸ்தானம் போல மீண்டும் அதே அம்சத்தில் கிடைக்காது. அதனால் எங்களுக்கு இந்த மாரியம்மன் கோயிலை இடிப்பதற்கு மனமில்லை என்றனர்.

கெங்கராம்பாளைய ம் கோயில்
கெங்கராம்பாளைய ம் கோயில்

அதன் பின்னர் ஆர்.டி.ஓ முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தக் கோயில் அறநிலைத்துறையுடன் சேர்க்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறினர். இது குறித்து ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்துவிடம் பேசினோம்.

"பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு கட்டுமானக் குழுவினர் கோயிலை நகர்த்துவது குறித்துக் கேள்விப்பட்டோம். எனவே, அரசு சார்பில் வழங்கப்பட்ட இழப்பீடு தொகையைக் கொண்டு கோயிலை நகர்த்தி வைத்து வழிபடலாம் என ஊர்மக்கள் முடிவு செய்து, பீகார் மாநிலத் தொழிலாளர் மூலம் கோயிலை இடமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். சுமார் 6 அடி உயரம் அஸ்திவாரத்துடன் கோயிலை உயர்த்தி, 61 அடி தூரம் நகர்த்தி புதியதாக அஸ்திவாரம் போட்டு, அதன் மீது கோயிலை வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதிய அஸ்திவாரம் போடுவதற்காக சுமார் ரூ.3 லட்சம் ஒப்பந்தத்தில் ஸ்தபதி குழுவினர் 10 பேர் ஈடுபட்டுள்ளனர். கோயிலை நகர்த்துவதற்காக ரூ.10 லட்சம் ஒப்பந்தத்தின்படி பீகார் மாநிலத்தவர் 19 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டுமின்றி கட்டுமானம் சார்ந்த பொருட்செலவு, பெயிண்டிங் பணி மற்றும் கும்பாபிஷேக செலவு என இன்னும் நிறைய இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் 25-ம் தேதி கோயிலை இடமாற்றம் செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

தற்போது ஜாக்கிகள் உதவியோடு இரண்டு அடி உயரத்திற்குக் கோயில் உயர்த்தப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதத்திற்குள் இப்பணிகள் முழுவதையும் முடித்து, ஏப்ரல் மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தலாம் எனத் திட்டமிட்டுள்ளோம்" என்றார் மாரிமுத்து.