Published:Updated:

`சுழல் மேஜையுடன்கூடிய 300 அடி ஏணி!'- முதல்முறையாக தஞ்சைக்கு வந்த அதிநவீன தீயணைப்பு வாகனம்

தீயணைப்பு வாகனம்
தீயணைப்பு வாகனம்

தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு விழாவுக்காகப் பிரத்யேகமாக இந்த வாகனம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள சுழல் மேஜையுடன்கூடிய ஏணி, 104 மீட்டர் நேராகவும் 55 மீட்டர் பக்கவாட்டிலும் செல்லக்கூடியது. அதாவது, இதன்மூலம் 300 அடி உயரம் வரை செல்ல முடியும்.

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவுக்காக, 300 அடி உயர ஏணியுடன்கூடிய அதிநவீன தீயணைப்பு வாகனம் தஞ்சாவூருக்கு முதன்முறையாக வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தீ விபத்து ஏற்படுவதைத் தவிர்க்கவும், உயிரைக் காக்கவும் இந்த அதிநவீன வாகனம் கொண்டு வரப்பட்டதாக விழாக் குழுவினர் தெரிவித்தனர்.

தீயணைப்பு வாகனம்
தீயணைப்பு வாகனம்

1997-ம் ஆண்டு நடைபெற்ற தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு விழாவின்போது, யாகசாலைப் பந்தலில் ஏற்பட்ட தீவிபத்தால் சுமார் 48 பேர் வரை உயிரிழந்தனர். அப்போது, பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய அந்தச் சம்பவத்திற்குக் காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாகச் செய்யாததே என்று சொல்லப்பட்டது. இந்த முறை எந்த ஒரு சிறு அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு விழா வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு பணியும் மாவட்ட நிர்வாகத்தால் கவனமுடன் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, யாகசாலைப் பந்தல் பெரியகோயில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கத் திடலில் 11,900 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், யாகசாலைப் பந்தலில் 8 இடங்களில் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கக்கூடிய உபகரணங்களுடன் எந்நேரமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

யாகசாலை
யாகசாலை

இதையடுத்து, யாகசாலைப் பந்தலுக்கு சில மீட்டர்கள் தொலைவில் உள்ள சிவகங்கைப் பூங்கா வளாகத்தில் தீயணைப்புத்துறையினரின் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், சுழல் மேஜையுடன்கூடிய ஏணியைக் கொண்ட அதிநவீன வாகனம், சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. ஹைட்ராலிக் பிளாட்பார்ம் என்று அழைக்கப்படும் வாகனம், நீரியல் அழுத்தத்தில் செயல்படக்கூடியது. தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்காக பின்லாந்து நாட்டிலிருந்து ரூ.17 கோடி மதிப்பில் இந்த வாகனம் வாங்கப்பட்டுள்ளது. இங்கு வரவழைக்கப்பட்டுள்ள இந்த வாகனம், பெரியகோயில் வளாகத்தில் மூலவர் விமான கோபுரத்தின் பின்புறம் உள்ள கருவூரார் சன்னதிக்கு முன் நிறுத்தப்பட்டுள்ளது.

பெரிய கோயில்
பெரிய கோயில்

மூலவர் விமானக் கோபுரம் 216 அடி உயரம் கொண்டது. குடமுழுக்கின்போது, மூலவர் கோபுரத்தில் சிவாச்சாரியார்கள், ஓதுவார்களுடன் தீயணைப்பு வீரரும் செல்ல உள்ளனர். இவர்களுக்கு ஏதாவது மயக்கமோ அல்லது வேறு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலோ, இரும்புப் படிக்கட்டுகளின் வழியாகக் கீழே இறக்கிக் கொண்டுவருவதற்கு சிரமம் ஏற்படும். அப்படி ஏதாவது விபரீதம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களைச் சுழல் மேஜையுடன்கூடிய ஏணியின் உதவியுடன் கீழே கொண்டு வந்துவிடலாம்.

இதுகுறித்து திருச்சி மண்டல தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை துணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு விழாவுக்காகப் பிரத்யேகமாக இந்த வாகனம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள சுழல் மேஜையுடன் கூடிய ஏணி,104 மீட்டர் நேராகவும் 55 மீட்டர் பக்கவாட்டிலும் செல்லக்கூடியது. அதாவது, இதன்மூலம் 300 அடி உயரம் வரை செல்ல முடியும். விமானக் கோபுரத்தின் உயரம் 216 அடிகள். ஆனால், இந்த வாகனத்தில் உள்ள ஏணி 300 அடி வரை செல்லும் என்பதால் இதைத் தேர்வுசெய்தோம்.

தீயணைப்பு வாகனம்
தீயணைப்பு வாகனம்

மேலும், இதில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கக்கூடிய வசதி உள்ளது. ஏதாவது திடீரென தீ விபத்து ஏற்பட்டால், உடனே அந்தத் தீயை அணைக்க முடியும். உயிரைக் காக்கவும், தீயை அணைக்கவும் இந்த வாகனம் பயன்படுத்தப்படும். யாகசாலையில் திரி, எண்ணெய் உள்ளிட்ட தீ பற்றக்கூடிய பொருள்கள் பயன்படுத்தப்படும் என்பதால், எளிதில் தீ பற்றாமல் இருக்கக்கூடிய வண்ணம் பந்தலில் பூசப்பட்டுள்ளது. மேலும், சிவகங்கைப் பூங்கா குளத்திலிருந்து தண்ணீர் எடுப்பதற்காக மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது" என்றார்.

பின் செல்ல