Published:Updated:

`தஞ்சை சிட்டியே தெரியுது பாருங்க..!' -போலீஸ்காரரின் முகநூல் லைவால் கொதித்த பெரியகோயில் பக்தர்கள்

லைவ் செய்யும் போலீஸ்காரர்
லைவ் செய்யும் போலீஸ்காரர்

கீழே இருந்து பார்த்தாலே கோயிலின் அழகு மெய்சிலிர்க்க வைக்கும். உச்சிக்குச் சென்று பார்த்தால் கோயிலுடன் சேர்ந்து தஞ்சாவூரின் மொத்த அழகும் தென்படும். இதைத்தான் அந்த போலீஸ்காரர் தனது முகநூல் பக்கத்தில் லைவ் செய்துள்ளார்.

தஞ்சாவூர் பெரியகோயிலின் பாதுகாப்புப் பணிக்காகக் கோபுரத்தின் உச்சிக்குச் சென்ற போலீஸ்காரர் ஒருவர் கோயிலின் அழகைத் தனது செல்போன் மூலம் முகநூலில் லைவ் செய்துள்ளார். இது பக்தர்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

பெரியகோயில்
பெரியகோயில்

உலகப் பிரசித்திபெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காகக் கோயிலில் பல்வேறு திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நேற்று பெரியகோயில் விமானத்தில் இருந்த கோபுரக் கலசம் புதுப்பிப்பிதற்காகக் கீழே இறக்கப்பட்டது. இதற்காகப் பாதுகாப்புப் பணிக்காக கோபுரத்தின் உச்சிக்குச் சென்ற போலீஸ்காரர் ஒருவர் தனது செல்போன் மூலம் கலசம், பெரிய கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தனது முகநூல் பக்கத்தில் லைவ் செய்துள்ளார்.

அப்போது முகநூல் லைவில் பேசிய அந்த போலீஸ்காரர் ``நான் பெரிய கோயிலின் உச்சியான 216 அடி உயரத்தில் இருக்கிறேன். தங்கமுலாம் பூசப்பட்ட விமானக் கலசத்தைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். அதன் மேல் விழுந்துள்ள கீறல்கள் கழுகு மற்றும் பருந்துகளால் ஏற்பட்டுள்ளது. மேலே ஏறும்போது கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால், கிடைத்திருக்கிற இந்த வாய்ப்பை விடக் கூடாது என ஏறிவிட்டேன். தஞ்சை சிட்டியே தெரியுது பாருங்க.. இதைப் பார்த்து எல்லாரும் என்ஜாய் செய்தீர்களா?' எனக் கேட்டபடியே லைவ் ஷோவை முடிக்கிறார்.

இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. ஒரு போலீஸ்காரரே இப்படிச் செய்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லைவ் செய்யும் போலீஸ்
லைவ் செய்யும் போலீஸ்

இதுகுறித்து நம்மிடம் பேசிய கோயில் பக்தர்கள் சிலர், `` மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து சோழர்களின் கட்டடக்கலைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக இன்றும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இதன் விமான கோபுரம் 216 அடி உயரம் கொண்டது. அதன் உச்சியில் 12 அடி உயரம் கொண்ட கோபுரக் கலசம் பொருத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் விமான கோபுரத்தைக் கண்டு வியந்து செல்கின்றனர்.

பெரிய கோயிலைப் பார்க்க வரும் அனைவருக்கும் கோயில் சந்நிதியில் உள்ள மூலவரைப் போட்டோ எடுக்க அனுமதியில்லை. கோயில் வளாகத்தில் உரிய அனுமதியின்றி வீடியோ எடுக்கக் கூடாது, ட்ரோன் கேமரா கொண்டு மேலே பறக்கவிட்டு கோயில் வளாகத்தைப் படம் பிடிக்கக் கூடாது எனக் கோயிலின் பாதுகாப்புக்காகப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பெரியகோயில்
பெரியகோயில்

இந்த நிலையில், கும்பாபிஷேகத்துக்காகப் பெரியகோயிலில் பல்வேறு புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று கோயில் கோபுரத்தின் உச்சியில் இருந்த கோபுரக் கலசம் இறக்கப்பட்டது. அப்போது கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆய்வு மையத்தின் கதிரியக்கப் பிரிவு இயக்குநர் வெங்கட்ராமன் தலைமையிலான குழுவினரும் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக உலோகவியல் துறைப் பேராசிரியர் முருகையன் அமிர்தலிங்கம் குழுவினரும் கலசத்தின் தன்மை குறித்து ஆய்வு ஆய்வு செய்தனர். அப்போது கோயில் நிர்வாக குழுவைச் சேர்ந்தவர்களும் உடன் இருந்தனர்.

நிழல் விழாத கோபுரம், ஒரே கல் விமானம், வளரும் நந்தி... தஞ்சை பெரியகோயில் குறித்த நம்பிக்கைகள் உண்மையா?

அப்போது பாதுகாப்பு பணிக்காக போலீஸ்காரர்கள் சிலரும் கோபுரத்தின் உச்சிக்குச் சென்றார்கள். கீழே இருந்து பார்த்தாலே கோயிலின் அழகு மெய்சிலிர்க்க வைக்கும். உச்சிக்குச் சென்று பார்த்தால் கோயிலுடன் சேர்ந்து தஞ்சாவூரின் மொத்த அழகும் தென்படும். இதைத்தான் அந்த போலீஸ்காரர் தனது முகநூல் பக்கத்தில் லைவ் செய்துள்ளார்.

கோயில் உச்சியில் போலீஸ்காரர்கள்
கோயில் உச்சியில் போலீஸ்காரர்கள்

சில மாதங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் ட்ரோன் கேமராவை உச்சியில் பறக்கவிட்டு பெரிய கோயிலின் அழகைப் பலவித கோணங்களில் வீடியோ எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். அவை வைரலான பிறகு கோயில் நிர்வாகக் குழுவுக்கு தெரியவந்தது. அதன்பிறகு அந்த இளைஞரை அழைத்து விசாரித்ததுடன் எச்சரித்து அனுப்பினர்.

கோயிலின் பாதுகாப்புக்காகப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தொல்லியல் துறை. கோயிலின் மேல்தளத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் உரிய அனுமதி வாங்கித்தான் செல்ல வேண்டும். இப்போது புனரமைப்புப் பணிகள் என்பதால் பலர் மேலே செல்கின்றனர். அவர்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்தப் போலீஸ்காரரை செல்போன் எடுத்துச் செல்ல அனுமதித்தது ஏன்.. ஒருவர் லைவ் செய்கிறார் எனத் தெரிந்தும் அதை எப்படி நிர்வாகத்தினர் அனுமதித்தனர் எனவும் தெரியவில்லை.

பெரியகோயில்
பெரியகோயில்

கோயிலுக்கு வரும் அப்பாவி மக்களைப் படாதபாடுபடுத்தும் நிர்வாகம் இதுபோன்ற பெரிய செயல்களைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன் எனத் தெரியவில்லை. இதனால் கோயிலுக்குத்தான் ஆபத்தை ஏற்படுத்தும். பாதுகாப்பு விவகாரத்தில் அறநிலையத்துறையும் தொல்லியல் துறையும் இனியும் அலட்சியமாக இருக்கக் கூடாது. தமிழர்களின் அடையாளமான பெரிய கோயிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கின்றனர் கொந்தளிப்புடன்.

அடுத்த கட்டுரைக்கு