Published:Updated:

`ஸாரி..அனுமதியில்லாமல் உள்ளே அனுப்ப முடியாது!' - பெரிய கோயிலில் சிவாச்சாரியார்களைத் தடுத்த போலீஸ்

யாகபூஜை
யாகபூஜை ( ம.அரவிந்த் )

இரண்டாம் கால யாகசாலை பூஜைக்காக 40 சிவாச்சாரியார்கள் சிவகங்கை பூங்கா வாயில் வழியாக உள்ளே வந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார், அடையாள அட்டையோ அல்லது உரிய அனுமதியோ இல்லாமல் இந்த வழியாக விடமாட்டோம் என்றனர்.

தஞ்சாவூர் பெரியகோயிலில் வரும் 5ம் தேதி குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி பெரிய கோயில் வளாகம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதல் குடமுழுக்கிற்காகக் கொண்டு வரப்படும் பொருள்களை வரை அனைத்தையும் சோதனை செய்த பிறகு உள்ளே அனுமதிக்கின்றனர். எந்த விதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்கவே இதுபோன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

கலெக்டர் ஆய்வு
கலெக்டர் ஆய்வு

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவுக்காக விமரிசையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நாளையும், அடுத்த தினமான குடமுழுக்கு நாளிலும் 4,500 போலீஸார் பாதுகாப்பிற்காகக் குவிக்கப்பட உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 2ம் தேதி யாகசாலை பூஜை தொடங்கியது. இதற்காகப் பிரமாண்ட பந்தல் அமைத்து யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதைக் காண மக்கள் குடும்பம் குடும்பமாக பெரியகோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அனைவரும் கடுமையான சோதனைக்குப் பிறகே கோயிலுக்கு உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். லட்சக்கணக்கில் மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். அதனால் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்கவே கடுமையாக சோதனை செய்யப்பட்டு உள்ளே அனுப்பப்படுவதாக விழாக்குழு சார்பில் தெரிவிக்கின்றனர்.

பெரியகோயிலில் சோதனை
பெரியகோயிலில் சோதனை

இந்தநிலையில் நேற்று மாலை இரண்டாம் கால யாகசாலை பூஜைக்காக 40 சிவாச்சாரியார்கள் சிவகங்கை பூங்கா வாயில் வழியாக உள்ளே வந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார், `அடையாள அட்டையோ அல்லது உரிய அனுமதியோ இல்லாமல் இந்த வழியாக விடமாட்டோம்' என அனுமதி மறுத்தனர். அவர்கள், `நாங்கள் யாக பூஜைக்காக வந்திருக்கிறோம். எங்களைப் பார்த்தால் தெரியவில்லையா?' எனக் கேட்கவே, போலீஸார், `எங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உத்தரவை நாங்கள் பின்பற்றுகிறோம். ஸாரி கோச்சிக்காதீங்க' எனக் கூறியுள்ளனர்.

இதையடுத்து சிவாச்சாரியார்கள் சிலர் யாகசாலையில் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் கலெக்டர் கோவிந்தராவிடம் இதைத் தெரியப்படுத்தியுள்ளனர். அதற்கு அவர், `ஏன் அவர்கள் பாஸ் வாங்கவில்லையா?' எனக் கேள்வி எழுப்ப, சிவாச்சாரியார்கள் போட்டோ கொடுக்கவில்லை எனப் பதில் கூறியுள்ளனர்.

கலெக்டர் ஆய்வு
கலெக்டர் ஆய்வு

`எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றுதானே பலவித விதிமுறைகள் வகுப்பட்டிருக்கு. அதைப் பின்பற்ற வேண்டியதுதானே? நானாக இருந்தாலும் விதியைப் பின்பற்றித்தான் ஆக வேண்டும்' என அவர்களிடம் கடிந்து கொண்டு பின்னர் பாதுகாப்பிற்கு இருந்த போலீஸாரிடம் தகவல் சொல்லி சிவாச்சாரியார்கள் உள்ளே வரவழைக்கப்பட்டார்கள். அதன் பின்னர் யாக பூஜையில் அவர்கள் கலந்து கொண்டனர். இந்தச் சம்பவம் கோயில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதே போல் குடி தண்ணீர், பூஜைக்கு உண்டான பூ உள்ளிட்ட எந்தப் பொருள்கள் கொண்டு வந்தாலும் உரிய அனுமதி இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கின்றனர். அத்துடன் பக்தர்களும் உள்ளே வருவதற்கு மற்றும் வெளியேறுவதற்கு என அமைக்கப்பட்டுள்ள வழியில் மட்டுமே அனுமதிக்கப் படுகிறார்கள். அத்துடன் அனைவரையும் முழுமையாக சோதனை செய்த பிறகே கோயிலுக்கு உள்ளே செல்ல முடிகிறது. இதனால் இன்றிலிருந்தே கோயில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது.

பெரியகோயிலில் சோதனை
பெரியகோயிலில் சோதனை

சிலர் அதிக கட்டுப்பாடுகளை விதித்திருப்பதை எண்ணி முகம் சுளிப்பதுடன் காவல்துறையினருடன் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இதையெல்லாம் போலீஸார் காதில் வாங்கிக் கொள்வதே இல்லை. எல்லோருடைய நன்மைக்காகவும் தானே இதுபோல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால், இதைப் பொறுத்துக்கொண்டுதான் ஆக வேண்டும் எனப் பலர் தங்களுக்குள் பேசிச் செல்கின்றனர். நாளையும், நாளை மறு நாளும் இன்னும் அதிகளவிலான கெடுபிடிகள் போலீஸாரால் கடைப்பிடிக்கப்படும் எனக் கோயில் நிர்வாகக் குழு தரப்பில் தெரிவிக்கின்றனர்.

பின் செல்ல