Published:Updated:

`அத்திவரதரே வந்து பிறந்திருக்கிறார்!' - தரிசனத்தின்போது பெண்ணுக்கு நிகழ்ந்த பிரசவம்

JAYAVEL B

அத்திவரதரை தரிசித்த சில நொடிகளிலேயே கர்ப்பிணிப் பெண் ஒருவருக்குப் பிரசவவலி ஏற்பட்டு, அடுத்த சில நிமிடங்களில் அங்கேயே அவருக்குச் சுகப்பிரசவம் ஆன சம்பவம் பக்தர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

அத்திவரதர்
அத்திவரதர்

வேலூர் மாவட்டம், கோலிப்பாக்கம், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் கர்ப்பிணியாக இருக்கும் மனைவி விமலா மற்றும் குடும்பத்தினருடன் அத்திவரதரை தரிசனம் செய்ய இன்று காலை காஞ்சிபுரம் வந்தார். அத்திவரதரை தரிசித்த பின்பு விமலாவுக்கு அங்கேயே பிரசவ வலி ஏற்பட்டது. அங்கிருந்த மருத்துவர்கள் உடனடியாக அவருக்குப் பிரசவம் பார்த்தனர். சுகப்பிரசவத்தில் அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்.

அத்திவரதர் தரிசனத்துக்கு வந்த கர்ப்பிணி
அத்திவரதர் தரிசனத்துக்கு வந்த கர்ப்பிணி

இதுகுறித்து காஞ்சிபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார், ``ஏற்கெனவே அவருக்கு இரண்டு முறை சுகப் பிரசவம் ஆகி இருக்கிறது. இங்கே வந்தால் சுகப்பிரசவம் ஆகும் என சில பெண்கள் நினைக்கிறார்கள். ஆனால், எல்லோருக்கும் இங்கேயே குழந்தை பிறக்கும் பாக்கியம் கிடைப்பதில்லை. அவசரத்துக்குப் பிரசவம் பார்ப்பதற்காக ஒரேயொரு டெலிவரி கிட் மட்டும் வைத்திருந்தோம். அதற்கு வேலைவரும்னு நாங்ககூட நினைத்துப் பார்க்கவில்லை. சுகப்பிரசவம் ஆனதில் எல்லோருக்கும் மகிழ்ச்சி” என்கிறார்.

அசோக்குமாரிடம் பேசினோம், ``ரொம்ப நாளாகவே அத்திவரதரை தரிசனம் செய்யணும்னு எங்க வீட்ல எல்லோரும் சொல்லிகிட்டிருந்தாங்க. என்னோட மனைவி விமலாவும் அத்திவரதரை பார்க்கணும்னு ஆசையா சொன்னாங்க. மனைவியோட ஆசைய நிறைவேற்றணும்னு எனக்கு எண்ணம் இருந்தாலும், லட்சக்கணக்கான மக்கள் வரும் கூட்டத்தில எப்படி அழைச்சுட்டு போறதுன்ற தயக்கம் இருந்துச்சு. அதே நேரத்துல விமலாவோட ஆசையையும் நிறைவேற்றணும்னு தோனுச்சு. இதனால டாக்டர்கிட்ட கேட்டுட்டு போலாம்னு முடிவெடுத்தோம். அவரும் ஆகஸ்ட் 27-ம் தேதிபோலத்தான் பிரசவம் ஆகும்னு சொன்னார். மனசுக்கு கொஞ்சம் தெம்பா இருந்தது. இன்னும் நாள் இருக்குன்னு டாக்டர் சொன்னதால அதுக்குள்ள சாமிய பார்த்துட்டு வந்துடலாம்னு முடிவெடுத்தோம்.

அத்திவரதர் தரிசனம், பிரசவம்
அத்திவரதர் தரிசனம், பிரசவம்

அதிகாலையில எழுந்து குடும்பத்தோட கிளம்பினோம். அப்போதுகூட `இடுப்பு வலி ஏதாவது இருக்கா?’ன்னு கேட்டேன். `வலி எதுவும் இல்லைங்க’ன்னு சொன்னதால உடனே காரில் காஞ்சிபுரம் வந்தோம். 6 மணிக்கெல்லாம் காஞ்சிபுரம் வந்தபோது 5 கிலோ மீட்டருக்கு முன்னடியே காவலர்கள் எங்களை மடக்கி வேறுவழியில் போகச் சொன்னாங்க. நாங்க விவரத்தைச் சொன்னதும் எங்களை அனுமதிச்சாங்க. இதுபோல ஒவ்வோர் இடத்துலேயும் போலீஸ்கிட்ட சொல்லி கிழக்கு கோபுரம் வந்தோம். கிழக்கு கோபுரத்துல கர்ப்பிணிகள், வயதானவர்களுக்குத் தனி வரிசை இருக்கு.

அதுல எங்களைப் போகச் சொன்னாங்க. 8.30 மணிக்கு அத்திவரதரை தரிசனம் செய்தோம். அவளோட ஆசையை நிறைவேற்றின சந்தோஷத்துல மெதுவா கிளம்பினோம். பத்து அடிகூட நகரல, இடுப்பு வலிக்குதுன்னு சொன்னா. உடனே அங்கிருந்தவங்க 16 கால் மண்டபத்தில் உள்ள மருத்துவ முகாமுக்கு அழைச்சுகிட்டு போகச் சொன்னாங்க. அங்கிருந்த மருத்துவர்கள் அவருக்குப் பிரசவம் பார்த்தாங்க. ஆண்குழந்தை பிறந்திருக்கிறதுன்னு சொன்னாங்க. அத்திவரதருக்கு முன்பே குழந்தை பிறந்ததால ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்கிறார்.

குழந்தையுடன் தாய்
குழந்தையுடன் தாய்

காஞ்சிபுரம் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள விமாலாவிடம் பேசினோம், ``அத்திவரதர் தரிசனத்துல கூட்டம் அதிகமா இருக்கு. இந்த நேரத்துல தரிசனத்துக்கு போனா சிக்கலாகிடும்னு சொன்னாங்க. வரதர் கைவிட மாட்டார். அங்கே போனா சுகப்பிரசவம் ஆகும்னு சொன்னேன். அத்திவரதரை கும்பிடும்போதே ஏதோ மாதிரி இருந்தது. பத்து அடிகூட நகரல இடுப்பு வலி வந்துவிட்டது. கோயிலிலேயே குழந்தை பிறக்குற பாக்கியம் கிடைச்சதுல மனசு நெறைஞ்சு இருக்கு. அத்திவரதரே குழந்தையாக பிறந்திருப்பதாக நினைக்குறேன். அதனால குழந்தைக்கு `அத்திவரதர்’னு பேர் வைக்க முடிவெடுத்திருக்கிறோம்” என்கிறார், மகிழ்ச்சியாக.

கோடி பக்தர்களில் ஒருவருக்குக் கிடைத்த பாக்கியம்!