Published:Updated:

சபரிமலைக்கு வருகிறார் குடியரசுத் தலைவர்! - மகரவிளக்கு பூஜையில் பங்கேற்க ஏற்பாடுகள் தீவிரம்

சபரிமலையில் நடக்கும் மகரவிளக்கு பூஜையில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேரளாவுக்கு வருகை தரவுள்ளார். அதனால் சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் 16-ம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. கோயிலின் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பூஜைகள் செய்து தீபாரதனை காட்டி நடை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து 41 நாள்கள் நடைபெற்ற மண்டல பூஜைகளுக்குப் பின்னர் டிசம்பர் 27-ம் தேதி நடை சாத்தப்பட்டது. 

சபரிமலை ஐயப்பன் கோயில்
சபரிமலை ஐயப்பன் கோயில்

அதன் பின்னர் டிசம்பர் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு தலைமை அர்ச்சகர் ஏ.கே.சுதீர் நம்பூதிரி பூஜைகள் செய்து மகரவிளக்கு பூஜைக்காகக் கோயிலின் நடை திறந்து வைத்தார். நடை திறக்கப்பட்டு 18 படிகளுக்கும் பூஜைகள் முடிந்ததும் சரண கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஜனவரி 15-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. வரும் 21-ம் தேதி வரை நடை திறந்திருக்கும். மகரவிளக்கு பூஜை காலத்தில் பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. 

Vikatan

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் 5-ம் தேதி சபரிமலை வரவுள்ளார். மகரவிளக்கு சீஸனில் அவர் வருவதற்கு உகந்த சூழல் நிலவுகிறதா என்பது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை மூலம் கேரள அரசிடம் கேட்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் வருகைக்கு உகந்ததாக, தற்போதைய சூழல் இருக்கிறது எனக் கேரள அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அத்துடன், ஜனாதிபதி வருகையின்போது ஹெலிகாப்டர் பயன்படுத்த இடவசதி இருக்கிறதா எனவும் மாநில அரசிடம் கேட்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தேவசம்போர்டிடம் மாநில அரசு சார்பாக விளக்கம் கேட்கப்பட்டது. 

ஐயப்பன் கோயில்
ஐயப்பன் கோயில்

பண்டிதவலம் பகுதியில் இருக்கும் நீர்த்தேக்கத்தின் மீது அரசின் ஹெலிகாப்டரை தரையிறக்க இடம் உருவாக்கலாம் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. அங்கிருந்து ஜனாதிபதியை ஜீப் மூலம் அழைத்துச் செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சபரிமலை ஐயப்பன் கோயில் சர்ச்சைகளுக்குப் பின்னர் முதல் முறையாக ஜனாதிபதி வருகை தரவிருப்பதால் கூடுதல் போலீஸாரைப் பணியில் அமர்த்துவது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருகிறது.