Published:Updated:

ஆயிரம் ஆண்டுக் கலைப்பொக்கிஷம் தேங்கிநிற்கும் நீரால் களையிழக்கும் அவலம்... கண்டுகொள்ளுமா அரசு?

தாராசுரம் கோயில்
தாராசுரம் கோயில்

சிறப்புகள் வாய்ந்த தாராசுரம் கோயில் முறையான வடிகால் வசதியுடன் இல்லாததால் ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தின்போது தண்ணீர், கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.

`சிற்பிகளின் கனவு' என்று அனைவராலும் போற்றப்படும் கலைப் பொக்கிஷம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில். பிரமாண்டமான சிற்பங்கள் முதல் சுண்டு விரல் அளவுள்ள நடன சிற்பங்கள்வரை காண்போர் வியக்கும் அதிசயம். இரண்டாம் ராஜராஜனால் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலில் கையில் வீணையில்லாத சரஸ்வதி, நாகராஜனின் சிற்பம், மூன்று முகங்கள் மற்றும் எட்டு கைகளுடன் கூடிய அர்த்தநாரீஸ்வரர் என எங்கும் காணக்கிடைக்காத, கற்பனைக்கு எட்டாத அற்புதச் சிற்பங்கள் உள்ளன. கையில் குழல் ஏந்திய சிவன் திருமேனி இங்கு காணக்கிடைக்கும் கூடுதல் சிறப்பு.

தாராசுரம் கோயில்
தாராசுரம் கோயில்

இசைப் படிகள், தேர் வடிவ மண்டபம் எனக் காணும் இடங்களில் எல்லாம் கலை உணர்வு கொட்டிக்கிடக்கும் இந்தக் கோயிலை யுனெஸ்கோ 2004-ல் பாரம்பர்ய நினைவுச் சின்னமாக அங்கீகரித்தது. நாள்தோறும் இங்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகளும் பக்தர்களும் வந்துசெல்கின்றனர். குறிப்பாக வெளிநாட்டுப் பயணிகளும் ஆய்வாளர்களும் வந்து கண்டுகளிக்கின்றனர்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்தத் திருக்கோயிலில் முறையான வடிகால் வசதி இல்லாத காரணத்தால் ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தின்போது தண்ணீர், கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் தேங்கி, துர்நாற்றம் ஏற்படும் அவலம் நிகழ்கிறது. இதனால் ஏற்படும் அசௌகர்யம் காரணமாகப் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோயிலுக்கு வருவது குறைவதுடன், சிறப்புமிக்க இக்கோயில் தன் பொலிவையும் இழந்துவருகிறது.

தாராசுரம் கோயில்
தாராசுரம் கோயில்

இது குறித்து தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த மேலாளர் ஞானவேலிடம் பேசினோம்.

``இக்கோயிலில் பூஜைகள் செய்வது மட்டும்தான் அறநிலையத் துறையின் கீழ் வரும். மற்றபடி கோயிலைப் பாதுகாப்பது, பராமரிப்பது எல்லாமே தொல்லியல் துறைதான். அவர்கள்தான் மழைக்காலத்தின்போது தேங்கும் நீரை மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர். இருந்தாலும் கோயில் நகரத்தை விடக் கீழே இருப்பதால் நீர் ஊறிக்கொண்டே உள்ளது என்பதுதான் முக்கியமான பிரச்னை" என்றார்.

தஞ்சாவூர் அரண்மனையில் செயல்பட்டு வரும் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தைச் சேர்ந்த ஜான்சன் என்பவரிடம் இதுகுறித்துக் கேட்டோம்.

``தாராசுரம் கோயிலானது ஊரை விடக் கீழிறங்கி உள்ளதால் மழை நேரங்களில் கோயிலைச் சுற்றியும், உள்ளேயும் நீர் தேங்கி நிற்கிறது. இதை வெளியேற்ற எங்களிடம் உள்ள ஆயில் இன்ஜின் மூலம் மட்டுமல்லாது, வாடகைக்கு டீசல் இன்ஜின் எடுத்தும் நீரை உறிஞ்சி வெளியேற்றி வருகிறோம். ஆண்டுதோறும் இதுபோலவே நீர் தேங்கும்போதும் நாங்கள் மோட்டார்களை வைத்து வெளியேற்றி வருகிறோம்" என்றார்.

தாராசுரம் கோயில்
தாராசுரம் கோயில்
`பொன்னியின் செல்வன்' வந்தியத்தேவன் வழியில்...! -  வரலாற்றுப் பயணம்- 2 #Day 3

`இது முழுமையான தீர்வாக அமையாதே' என்றபோது, ``நாங்களும் முழுமையான தீர்வை நோக்கித்தான் செல்கிறோம். அருகில் உள்ள கோயில் குளத்தில் மழைநீர் செல்லும்படி வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். இதனால் கோயிலுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் காக்க வேண்டும். ஆனால், வழியில் சில ஆக்கிரமிப்புகள் உள்ளதால் பஞ்சாயத்திடம் அனுமதி பெற்ற பின்பே இதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும்" என்றார்.

கும்பகோணத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளரும் களப்பணியாளருமான பராந்தகன் தமிழ்செல்வனிடம் பேசினோம்.

``எனக்குச் சொந்த ஊர் கும்பகோணம் என்பதால் நான் தாராசுரம் கோயிலின் மேல் தனி மரியாதை வைத்துள்ளேன். மழைநீர் தேங்குவது ஒவ்வொரு வருடமும் தொடர்கிறது. 2015, 2016-ம் ஆண்டுகளில் இதுபோன்று கோயில் வளாகத்தில் நீர் தேங்கி நின்றபோது என்னுடைய சொந்தப் பணத்தைக் கொண்டு மோட்டர் மூலம் வெளியேற்றினேன்.

தாராசுரம் கோயில்
தாராசுரம் கோயில்
நட்சத்திர பலன்கள் - நவம்பர் 8 முதல் 14 வரை #VikatanPhotoCards

அவ்வப்போது நீரை வெளியேற்றுவதன் மூலம் இந்தப் பிரச்னையைச் சரி செய்ய இயலாது. முறையான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். ஏனெனில், கோயில் இருக்கும் இடம் பள்ளமாகவும், ஊர் கோயிலை விட மேட்டில் இருப்பதாலும், ஆண்டுதோறும் இதுபோன்றே நீர் தேங்கித் துர்நாற்றம் வீசுகிறது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான குளம் வறண்டுள்ளது. ஆனால், கோயிலின் உள்ளே நீர் தேங்கியுள்ளது" என்றார்.

மேலும், ``முறையான வடிகால் அமைப்பை ஏற்படுத்தி கோயில் குளத்தில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். ஆனால், கோயிலில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற வடிகால் வசதி செய்யப்பட வேண்டிய இடங்கள் எல்லாம் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதைப் பற்றி ஊராட்சியிடம் முறையிடலாம் என்றால் கடந்த மூன்று வருடமாக ஊராட்சி அமைப்பு செயல்படுவதில்லை" என்றார்.

தாராசுரம் கோயில்
தாராசுரம் கோயில்

கோயிலுக்கு வந்த கணபதி என்ற பக்தர் பேசும்போது, ``ஒவ்வொரு வருடமும் இதுபோன்று நீர் தேங்கியிருப்பது வழக்கமாகிவிட்டது. மேலும், துர்நாற்றம் வீசுவதால் கோயிலின் உள்ளே சென்று வழிபடுவது மிகவும் சிரமமாக இருக்கிறது" என்றார்.

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இந்த அதிசயங்களைப் பாதுகாத்து, உலக அரங்கில் நம் பாரம்பர்யச் சின்னங்களின் பெருமையை பொலிவிழக்காமல் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

அரசு இதை விரைவில் சரிசெய்ய வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை.

அடுத்த கட்டுரைக்கு