Published:Updated:

`பெரியகோயிலில் பரிகார பூஜை இல்லாமல் கும்பாபிஷேகமா?'- பழைய சம்பவங்களை நினைவுபடுத்தும் சிவனடியார்கள்!

``கடந்த காலங்களில் சித்தர் நெறி மற்றும் இந்துவேத ஆகம முறைகளை மீறி, கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்தது மற்றும் கோயிலுக்கு வந்த அரசியல் தலைவர்களின் நிலையை நாடறியும்"

சிவனடியார்கள்
சிவனடியார்கள்

தஞ்சாவூர் பெரியகோயிலில், கடந்த காலங்களில் சித்தர் நெறி மற்றும் இந்து வேத ஆகம முறைகளை மீறி, கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்தது. இதனால் கோயிலுக்கு வந்த அரசியல் தலைவர்களின் நிலை என்னவானது என நாடறியும் எனவே தமிழ் முறைப்படி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தினர் தெரிவித்தனர்.

சிவனடியார்கள்
சிவனடியார்கள்

தஞ்சாவூர் பெரியகோயில் உலகப்புகழ் பெற்று விளங்கி வருகிறது. தினம்தோறும் வெளிநாட்டினர் உட்பட ஆயிரகணக்கான சுற்றுலாப் பயணிகள் பெரிய கோயிலில் கட்டுமானத்தை எண்ணி வியப்புடன் பார்த்து ரசித்து செல்கின்றனர். இந்த நிலையில் பெரியகோயிலுக்கு வரும் பிப்ரவரி மாதம் 5ம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 23 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்கு இப்போதே பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

அத்துடன் பெரியகோயில் கும்பாபிஷேகத்தை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகள் வைத்து வருகின்றன. இந்த நிலையில் 11 சித்த மடத்தை சேர்ந்த, இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தினை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பெரிய கோயிலுக்கு வந்தனர். அவர்கள் கருவூரார் சித்தர் கூறியபடி தமிழ் வேத முறையில், கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, வேத மந்திரங்களை தமிழில் முழங்கி கோயிலை சுற்றி வலம் வந்தனர்.

பெரியகோயில்
பெரியகோயில்

பின்னர் இந்து வேத மறுமலர்ச்சி இயக்க தலைவர் பொன்னுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``தஞ்சை பெரிய கோவில் 1997ல், கும்பாபிஷேகத்தின் போது, தீ விபத்து ஏற்பட்டு 48 பேர் இறந்தனர். அதன்பின் அப்போது எந்தவித முறையான பரிகாரமும் செய்யப்படாமல் அவசர கதியில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன்பின் அடுத்த கும்பாபிஷேகம் நடத்த முடியாமல் தடைப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் பரிகார பூஜைகளை எதுவும் செய்யாமல், கருவூரார் சித்தர் நெறிக்கு மாறாக, மக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் நலனை மனதில் கொள்ளாமல், கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.

ஏற்கனவே ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில், கருவூரார் சித்தர் நெறிப்படி, தமிழில் பூஜைகள் செய்ய வேண்டும், கோயில் கருவறைகளில் பூஜைகள் செய்பவர்கள் உள்ளிட்ட 48 வகையான பணியாளர்கள், தமிழர்களாக தான் இருக்க வேண்டும் என்ற நெறி முறையை ராஜராஜசோழன் அரசாணையாக வெளியிட காலம் தாழ்த்தினார். அதனால் சித்தர் கருவூரார் நாடாளும் பொறுப்பிலுள்ள அரசர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், தளபதிகள் முதலானவர்கள் இக்கோயிலுக்கு வந்து சென்றால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என சாபம் வழங்கினார்.

பெருவுடையார்
பெருவுடையார்

கடந்த காலங்களில் சித்தர் நெறி மற்றும் இந்து வேத ஆகம முறைகளை மீறி, கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்தது மற்றும் கோயிலுக்கு வந்த அரசியல் தலைவர்களின் நிலையை நாடறியும். அவற்றை நாம் நினைத்து பார்க்க வேண்டும். எனவே, சித்தர் நெறியின் படி செந்தமிழ் மொழியில், இந்து வேதங்களின் முறைப்படி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சர், கலெக்டர் உள்ளிட்ட பலருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.