Published:Updated:

குழந்தை வரம் அருளும் இலஞ்சிக் குமரன்!

இலஞ்சிக் குமரன்
பிரீமியம் ஸ்டோரி
News
இலஞ்சிக் குமரன் ( இலஞ்சிக் குமரன் )

தாமரைப் பூக்கள் நிறைந்திருக்கும் நீர்த் தடாகத்துக்கு `இலஞ்சி' என்று திருப்பெயர் உண்டு.

முருகப்பெருமானை வழிபடுவது முப்பெரும் தெய்வங்களையும் வழிபடுவதற்குச் சமம். பல பிறவிகளில் புண்ணியம் செய்து, அதனால் சோ்த்துவைத்த நற்பலன்களால் மட்டுமே ஒருவருக்கு `முருக பக்தி' வாய்க்கும்; முருகனின் திருப்பெயர்களை ஓதுவதற்கான பேறு கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள்.

`முருகா' எனும் திருப்பெயரில் மும்மூர்த்தி யரின் திருவருளும் அடங்கும். `மு' - முகுந்தனா கிய திருமாலையும், `ரு' - ருத்ரனயும், `க' கமலத் தில் வீற்றிருக்கும் பிரம்மனையும் குறிக்கும். ஆகவேதான் முருகனை `பெரியசாமி' என்று ஆன்றோர்கள் பலரும் போற்றுவார்கள்.

உள்ளம் உருக `முருகா' ஒருமுறை அழைத் தாலே ஓடி வந்து அருளும் தெய்வம் அவன். எனவேதான் அருணகிரிநாத ஸ்வாமிகள், `மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமம்' என்று போற்றுகிறாா்.

இலஞ்சிக் குமரன்!
இலஞ்சிக் குமரன்!

முருகப்பெருமானின் இந்தப் பெருமை களுக்கு எல்லாம் சான்றாகப் பல திருத்தலங்கள் திகழ்கின்றன. அவற்றில் ஒன்றும் நெல்லைச் சீமையின் சாந்நித்தியம் மிக்க க்ஷேத்திரமுமான ஓர் ஊரையே இந்த இதழில் தரிசிக்கப் போகிறோம்.

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ள இலஞ்சி எனும் ஊர்தான் அது.

இலஞ்சிக்குமாரா் திருக்கோயில்
இலஞ்சிக்குமாரா் திருக்கோயில்

இலஞ்சிக்குமாரா் திருக்கோயில்

தவவேள்விகளில் தலைசிறந்த கபிலர், காசிபர், துா்வாசர் ஆகிய முனிவர்கள் மூவரும் திருக்குற்றால மலையில் கூடியிருந்தனர். அவர்கள் சிருஷ்டி தத்துவத்தின் விளக்கங்கள் குறித்து ஆலோசனை நடத்தினா். அப்போது இப்பூவுலகம் உள் பொருளா, இல் பொருளா என்பது குறித்து விவாதம் எழுந்தது.

கபிலா், `உலகம் இல் பொருளே' என்றார். காசிபரும் துா்வாசரும் `உலகம் உள் பொருளே' என்று வாதிட்டனா்.

``முத்தொழில்களை மேற்கொள்ளும் இறைவனன்றி இல்பொருள் தோன்றாது. எனவே, உலகம் உள்பொருளே. இப்பொருள் பரப்பிரம்மத்தில் அடங்கும்' என காசிபரும் துா்வாசரும் எடுத்துரைக்க, கபிலரும் ஏற்றுக் கொண்டாா். எனினும் பிரச்னை அத்துடன் முடிவுக்கு வரவில்லை.

அடுத்து, “உள்பொருளான உலகின் உண்மைப் பொருள் யாா்?” என்ற வாதம் தொடங்கியது. இந்தக் கேள்விக்கு நிறைவான ஒரு பதில் கிடைக்கவில்லை. ஆகவே, துர்வாச முனிவர் முருகனை வேண்டித் துதித்தார்.

அக்கணமே, மலைக்கு நாயகனான முருகப் பெருமான் அங்கே குமாரக் கடவுளாகத் தோன்றி `தாமே முத்தொழில் புரியும் மூா்த்தி. தாமே உண்மையான பரம்பொருள்' என்பதை உணர்த்தி முனிவர்களின் ஐயத்தைப் போக்கி அருளினார்.

இங்ஙனம் முருகப்பெருமான் முனிவர்களுக் குக் காட்சி அளித்த தலமே இப்போது இலஞ்சி குமாரர் திருக்கோயிலாக விளங்குகிறது.

இலஞ்சி  திருக்கோயில்
இலஞ்சி திருக்கோயில்

அருணகிரிநாதா் பாடிய முருகன்!

தாமரைப் பூக்கள் நிறைந்திருக்கும் நீர்த் தடாகத்துக்கு `இலஞ்சி' என்று திருப்பெயர் உண்டு. இத்தலத்தில் அருளும் குமாரரை அருணகிரிநாதப் பெருமான் திருப்புகழில் கீழ்க்காணும்படி பாடிப் பரவுகிறார்.

`இந்திர வேதர் பயங்கெட சூரைச்

சிந்திட வேல்கொ டெறிந்துநல் தோகைக்

கின்புற மேவியிருந்திடு வேதப் பொருளோனே

எண்புன மேவி யிருந்தவள் மோகப்

பெண்திரு வாளை மணந்திய லார்சொற்

கிஞ்சியளாவு மிலஞ்சி விசாகப் பெருமாளே!'


இதில் இலஞ்சி விசாகப் பெருமாளே எனப் போற்றுகிறார் அருணகிரியார்.

ஸ்ரீஅகஸ்தியர், ஸ்ரீகுற்றாலநாதர், ஸ்ரீகுழல்வாய்மொழிஅம்மன்
ஸ்ரீஅகஸ்தியர், ஸ்ரீகுற்றாலநாதர், ஸ்ரீகுழல்வாய்மொழிஅம்மன்

வரத ராஜனாய் அருளும் முருகன்

முனிவர்கள் மூவருக்கும் அருள் வழங்கிய வள்ளலான இலஞ்சிக் குமரன், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வரம் வாரி வழங்கும் ஸ்வாமியாய் அருள்கிறார். வரங்கள் தருவதில் மேலானவன் என்பதால் இவ்வூர் முருகனைச் சைவ ஆகமங்கள் `வரதராஜா்' எனப் போற்று கின்றன.

முருகப்பெருமானின் அருள் வல்லமையால், முத்து முத்தாகப் பாடும் பேறு பெற்ற அருணகிரி நாதரும் தம்முடைய கந்தரனுபூதிப் பாடல் ஒன்றில் `வரதா முருகா மயில்வாகனனே' என்று பாடிப் பரவசப்படுகிறார்.

ஆக, வரதராஜர் எனும் திருப்பெயர் மாமனான மாலவனுக்கு மட்டுமன்றி, அவரின் மருகனான முருகப்பெருமானுக்கும் உண்டு என்று சிலாகிக்கிறார்கள் முருகனடியார்கள். இலஞ்சியில் அருளும் சிவபெருமானும் சாந்நித்தியம் மிகுந்தவர். இங்குள்ள லிங்கத் திருமேனி குறுமுனிவர் அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம்.

ஸ்ரீநாககன்னி,  ஸ்ரீவிநாயகர்
ஸ்ரீநாககன்னி, ஸ்ரீவிநாயகர்

ஈசனுக்கு இனியவள்

சிவ-பார்வதி திருக்கல்யாணம் கயிலையில் நடைபெற, உலகமே அங்கு திரண்டது. அதனால் புவியின் சமநிலை தவறியது. வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது.

உலகம் சமநிலை பெறவேண்டும் எனில் அகத்தியன் தென் திசைக்குச் செல்லவேண்டும் எனத் திருவுளம் கொண்ட சிவப் பரம்பொருள் குறுமுனியை தெற்கு நோக்கிச் செல்லப் பணித்த திருக்கதையை நாமறிவோம்.

கந்த சஷ்டி
கந்த சஷ்டி

அங்ஙனம் தெற்கே வந்தவர் பொதிகை மலைப் பகுதியை அடைந்தார். பயண வழி நெடுக பல தலங்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்ட அகத்தியர் இந்தப் பகுதியிலும் லிங்க மூர்த்தத்தை ஸ்தாபித்தார்.

பொதிகை மலைச்சாரலில், தென்காசிக்கு அருகில் சித்ரா நதி தீரத்தில் வெண்மணலால் ஆன ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வெண்மணலுக்கு வடமொழியில் `இருவாலுகம்' என்று பெயா்.

அதனால், வெண்மணலால் ஆன அகத்தியா் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கத்திருமேனிக்கு `இருவாலுக ஈசன்' என்ற திருப்பெயர் ஏற்பட் டது. இத்தலத்தின் அம்பிகைக்கு இருவாலுக ஈசர்க்கினியாள் என்று திருப்பெயர்.

அம்மையும் அப்பனும் அருள்மழை பொழி வதில் இலஞ்சிக் குமராருக்குச் சளைத்தவர்கள் இல்லை என்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

புராண மகிமைகளோடு வழிபாட்டுச் சிறப்புகளும் மிக்கதாய் திகழ்கிறது இலஞ்சி குமாரர் திருக்கோயில்.

குற்றால அருவியில் தீர்த்தவாரி

சித்திரை மற்றும் ஐப்பசி மாதத்தில் திருக் குற்றாலத்தில் அருள்மிகு குற்றாலநாதர் கோயிலில் `விஷு' திருவிழா நடைபெறும். அப்போது, வள்ளி, தெய்வானை தேவியருடன் இலஞ்சிக் குமாரரும் கலந்துகொள்வார். பத்து தினங்கள் அத்தலத்திலேயே தங்கி அருள் பாலிப்பாா். பின்னா் திருக்குற்றால அருவியில் தீா்த்தவாரி முடித்து, இலஞ்சி திருத்தலத்துக்குத் திரும்புவார்.

தன் தந்தையான திருக்குற்றாலநாதரிடம் முருகப்பெருமான் பிரியாவிடை பெற்று இலஞ்சி தலத்துக்குத் திரும்பும் வைபவம், அடியார்கள் அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும்.

தன் மகனுக்குப் புதுப் பட்டாடையைப் பரிசளித்து, குற்றாலீசர் வழியனுப்பி வைக்கும் அந்த வைபவக் காட்சிகள் தரிசிப்போரைச் சிலிர்க்கவைக்கும்!

இலஞ்சி நடராஜர்
இலஞ்சி நடராஜர்

கந்த சஷ்டியில் ஐந்து திருக்கோலங்கள்!

கந்தசஷ்டி விழாவின்போது முருகப்பெருமான், கீழ்க்காணும் விவரப்படி ஐந்து திருக்கோலங்களில் காட்சி தருவது, இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

முதல் நாள்: அயன் (பிரம்மன்) திருக்கோலம்

இரண்டாம் நாள்: அரியின் திருக்கோலம்

மூன்றாம் நாள்: ஈசனாக அருள்வார்

நான்காம் நாள்: மஹேஸ்வரர் திருக்கோலம்

ஐந்தாம் நாள்: சதாசிவ மூா்த்தியாக அருள்பாலிப்பார்.

ஸ்ரீவராஹி, ஸ்ரீசம்த மாதர்கள்
ஸ்ரீவராஹி, ஸ்ரீசம்த மாதர்கள்

இந்தத் திருக்கோல காட்சி வைபவம், முருகனே மும்மூர்த்தி யாக அருள்பாலிப்பதை முனிவர்களுக்கு உணர்த்திய தல வரலாற்றை நினைவுகூர்வதாக இருக்கும். சூரசம்ஹார வைபவமும் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறும். இத்தலத்தின் கந்தசஷ்டி விழா குறித்து திரிகூடராசப்பக் கவிராயா் தமது திருக்குற்றாலக் குறவஞ்சியில் பாடியுள்ளாா்.

ஸ்ரீவாசுகி
ஸ்ரீவாசுகி

இங்ஙனம் பல மகிமைகளைக் கொண்ட இலஞ்சிக் குமாரர் கோயிலுக்குப் பாண்டிய மன்னன் மாறவா்மன் குலசேகரன் புனரமைப்புத் திருப்பணிகள் செய்துள்ளான். அழகு மிளிரும் இந்தத் திருக்கோயிலின் திருச்சுற்று மதிலை 15- ம் நூற்றாண்டில் சொக்கம்பட்டி ஜமீன்தாரான காளத்திப் பாண்டியன் நிா்மாணம் செய்துள்ளாா். அமரர் சாண்டோ எம்.எம்.ஏ சின்னப்பா தேவரும் இக்கோயிலில் திருப்பணிகள் செய்து மகிழ்ந்துள்ளார்.

ஸ்ரீலட்சுமி
ஸ்ரீலட்சுமி

மாதுளை முத்துக்களால் வேல் சமர்ப்பணம்

வெற்றிவேல் பரமன் விரும்பி அமா்ந்த திருத்தலம் இலஞ்சி என்றும் பிரம்மா, இந்திரன் உள்ளிட்ட தேவா் கள் குமாரக் கடவுளை அா்ச்சித்து மகிழ்ந்த இடம் இலஞ்சி என்றும் போற்றுகிறது திருக்குற்றாலம் தல புராணம். முருகனை வழிபடும் போது, `முருகா' என்று நம் வாய் நவின்றால் மட்டும் பற்றாது. நம்முடைய ஊன், உள்ளம், உணா்வு, உயிா், நாடி, நரம்பு அனைத்தும் ஒன்றுபட உருக்கத்துடன் முருக நாமத்தை ஓதவேண்டும். அவ்வாறு ஓதி வழிபடும் அன்பர்கள், குறையாத செல்வமும் ஞானமும் பெறுவா்.

அவர்களை நோய், துன்பம் எதுவும் அண்டாது; யம பயம் தீண்டாது; அந்தப் பக்தர்கள் மேலான மோட்ச நிலையை அடைவர் என்பது திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகளின் வாக்கு.

திருமணத்தடை நீங்கவும், புத்திரப்பேறு வாய்க்கவும் குடும்ப ஒற்றுமை மேலோங்கி வறுமை நீங்கவும் இலஞ்சி முருகனை அன்பா்கள் பக்தியோடு வணங்கிச் செல்கின்றனர்.

ஸ்ரீசரஸ்வதி
ஸ்ரீசரஸ்வதி

பிராா்த்தனை நிறைவேறியதும் மாதுளை முத்துக்களால் செய்யப்பட்ட வேல் மற்றும் சேவற்கொடியைக் காணிக்கை செலுத்துகின்றனர். இப்பெருமானுக்கு அப்பம் மற்றும் வடை நிவேதனமாக படைக்கப்படுகின்றன.

குற்றாலத்துக்குச் செல்லும் அன்பர்கள், குற்றாலநாதரை தரிசிப்பதுடன் அப்படியே இலஞ்சிக் குமாரக் கடவுளையும் தரிசித்து, அவனின் அருள் சாரலில் திளைத்து வாருங்கள்! அவனருளால், நம் பிரச்னைகள் யாவும் பனிபோல் விலகிவிடும்.

தென்காசி-செங்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள் ளது இலஞ்சிக் குமாரா் கோயில்.காலை 6:30 முதல் பிற்பகல் 12:30 மணி வரையிலும்; மாலை 4.30 மணி இரவு 8 மணி வரையிலு கோயில் நடைதிறந்திருக்கும்.