பஞ்சபூத சிவத் தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில், 1,600 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்தக் கோயிலின் சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை சேதமடைந்துவிட்டதாகச் சொல்லப்பட்டு, புதிதாகச் சிலைகள் செய்யப்பட்டன. அவற்றில் தங்கம் கலக்காமல் மோசடி நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. ‘12 பேர்மீது சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவால் வழக்கு பதியப்பட்டு கைதுகளும் அரங்கேறின. என்னவானது அந்த வழக்கு?

சிவன், பார்வதி, முருகன் ஆகிய மூன்று தெய்வங்களின் சிலைகளும் ஒரே பீடத்தில் அமையப்பெற்றதுதான் சோமாஸ்கந்தர் சிலை. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த, 117 கிலோ எடை கொண்ட இந்தச் சிலை பஞ்சலோகத்தில் செய்யப்பட்டது. நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அதிக அளவு தங்கம் கலந்து செய்யப்பட்ட அபூர்வ சிலை இது. சோமாஸ்கந்தரில் இருந்த தொன்மையான முருகனின் சிலை கடந்த 1993-ம் ஆண்டு காணாமல் போனதால், புதிதாக ஒரு முருகன் சிலை செய்து பொருத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டில் சோமாஸ்கந்தர் சிலை பழுதடைந்து விட்டது என்று கூறி, புதிய சிலை செய்ய முடிவெடுத்தது இந்து சமய அறநிலையத்துறை. இது தொடர்பாக அறநிலையத்துறை ஸ்தபதி முத்தையா விடமும் அறிக்கை பெறப்பட்டது. பக்தர்களிடம் தங்கம் நன்கொடையாகப் பெறப்பட்டு, 2016-ம் ஆண்டு 176 கிலோ எடையுள்ள புதிய சிலையைச் செய்து பிரதிஷ்டை செய்தனர்.

இங்குதான் பிரச்னை எழுந்தது. இந்தச் சிலை செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அண்ணாமலை என்பவர் சிவகாஞ்சி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த விவகாரத்தைக் கையிலெடுத்த சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், சிலை செய்ததில் 5.75 கிலோ தங்கம் முறைகேடு நடைபெற்றிருப்பதையும் சிலையில் துளிக்கூட தங்கம் இல்லை என்பதையும் கண்டுபிடித்தனர். இந்து அறநிலையத்துறையின் ஸ்தபதி முத்தையா, ஆணையராக இருந்த வீர சண்முகமணி, திருப்பணிகள் பிரிவு கூடுதல் ஆணையர் கவிதா உட்பட பத்துப் பேரைக் கடந்த ஆகஸ்ட் 2018-ம் ஆண்டு கைது செய்தனர் போலீஸார்.

கைது செய்யப்பட்டு 48 மணி நேரத்துக்கு மேல் காவல் பிடியில் இருந்ததால், நீதிமன்ற உத்தரவின்பேரில் கவிதா சஸ்பெண்ட் செய்யப் பட்டார். கைது செய்யப்பட்டவர்கள் தற்போது பிணையில் வெளியே இருக்கின்றனர். இந்த நிலையில், கோயிலின் செயல் அலுவலர் முருகேசனும் ஓய்வு பெறுவதற்கு ஆறு நாள்களே இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 24-ம் தேதி திடீரென சஸ்பெண்ட் செய்யப் பட்டார். இதையடுத்துதான் மீண்டும் சோமாஸ்கந்தர் சிலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

இது குறித்து ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷிடம் பேசினோம். “முத்தையா ஸ்தபதி கோயில் கட்டும் பணியை மேற்கொள்பவர். அவர் சிற்ப சாஸ்திர வல்லுநர்தான். ஆகம வல்லுநர் இல்லை. அவரிடமிருந்து அறிக்கை பெற்று புதிய சிலையைச் செய்திருக் கிறார்கள். இந்து அறநிலையத்துறையின் விதிகளின்படி பழைய சிலைகளை புனரமைக்க மட்டுமே அதிகாரமுள்ளது, புதிய சிலைகள் செய்ய அவர்களால் உத்தரவிட முடியாது இப்படி விதியை மீறிச் செய்யப்பட்ட புதிய சிலையிலும் துளிக்கூட தங்கம் இல்லை. சிலைக்காகத் தங்கம் கொடுத்தவர்களின் சாட்சியங்களும் உள்ளன. மேலும், பழைய சோமாஸ்கந்தர் சிலையில் 75 சதவிகிதம் அளவில் தங்கம் இருப்பதாக முத்தையா ஸ்தபதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதிலும் தங்கம் இல்லை.

சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட செயல் அலுவலர் முருகேசன்மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்து செல்பவர் அவர். அவருடைய வீட்டில் டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற வசதிகள்கூடக் கிடையாது. உயரதிகாரிகள் தாங்கள் தப்பிப்பதற்காக முருகேசனை பலிகடா ஆக்கியிருக்கிறார்கள். சோமாஸ்கந்தர் சிலை விவகாரத்தை இன்னும் தோண்டினால், மேலும் பல அதிர்ச்சிகள் கிளம்பும்” என்றார்.

சமூக சேவகர் உமா ஆனந்தன், “வழக்கமாக இந்து அறநிலையத்துறையில் யாராவது ஓர் அதிகாரி முறைகேட்டில் ஈடுபட்டால், அவரை முதலில் சஸ்பெண்ட் செய்வார்கள். பின்னர் அவர் மீதான விசாரணையைக் கிடப்பில் போட்டுவிடுவார்கள். ஆறு மாத காலத்துக்குப் பிறகு, ‘என்மீது எந்த விசாரணையும் நடத்தாமல் காலம் தாழ்த்துவது அநீதி. உடனடியாக என்னை பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும்’ என்று சம்பந்தப்பட்ட அலுவலர் நீதிமன்றம் செல்வார். உத்தரவு கிடைத்தவுடன் அதே பணியில் மீண்டும் சேர்ந்துவிடுவார். விசாரணையும் அத்துடன் இழுத்து மூடப்படும். இந்த பாணியில்தான் இந்து அறநிலையத்துறையில் முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் தப்பிக்கின்றனர். சோமாஸ்கந்தர் சிலை வழக்கில் தொடர்புடைய அதிகாரிகளும் இதுபோல் தப்பிவிடாதபடி நீதிமன்றம்தான் கண்காணிக்க வேண்டும்” என்றார்.

விவரமறிந்த சிலரிடம் பேசினோம். “சஸ்பெண்ட் செய்யப்பட்ட கூடுதல் ஆணையர் கவிதா மீண்டும் பணிக்கு வருவது கடினம். அவர்மீதுள்ள வழக்கை முறியடித்தாலும், சிலை முறைகேடு தொடர்பான புகாரின்மீது தனி விசாரணை நடத்தப்படும். சர்ச்சைக்குள்ளான புதிய சோமாஸ்கந்தர் சிலை தற்போது கும்பகோணம் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. தொன்மையான சோமாஸ்கந்தர் உற்சவர் சிலையை மூன்று குழுக்கள் அமைத்துச் சரிசெய்து, தற்போது ஏகாம்பரநாதர் கோயிலில் வைத்து வழிபடுகின்றனர்.

சோமாஸ்கந்தர் சிலை முறைகேடு வழக்கை இப்படியே சில காலம் கிடப்பில் போட்டு மூடிவிட நினைக்கின்றனர். இதுதான் இந்த வழக்கின் இன்றைய நிலை. அரசு வேடிக்கை பார்க்கலாம்; ஏகாம்பரநாதர் வேடிக்கை பார்க்க மாட்டார். தவறு இழைத்தவர்களுக்கு தண்டனை நிச்சயம்” என்றார்கள்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட கவிதா தரப்பில் பேசியவர்கள், “ `சோமாஸ்கந்தர் சிலை செய்வதற்கு பொதுமக்கள் யாரும் தங்கம் நன்கொடை அளிக்கத் தேவையில்லை’ என ஏகாம்பரநாதர் கோயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அதையும் மீறி சில பக்தர்கள் அளித்த தங்கத்தை மட்டும் சிலை செய்வதற்குப் பயன்படுத்தினார்கள். இதனால், சிலையில் தங்கத்தின் அளவு வழக்கமாக இருப்பதைவிடக் குறைந்த அளவுதான் இருந்தது. இதை அந்தச் சமயத்தில் கவிதாவே அறிக்கையாக வெளியிட்டார். அப்படி இருக்கும்போது, அவர் முறைகேட்டில் ஈடுபட்டார் எனக் கூறுவது மிகவும் தவறு. சோமாஸ்கந்தர் விவகாரத்தில் சில அதிகாரிகள் நற்பெயர் எடுப்பதற்காக கவிதாவை பலிகடா ஆக்கிவிட்டனர். அவர்மீது எந்தத் தவறும் நிரூபிக்கப்படவில்லை” என்றனர்.