Published:Updated:

`கண்ணனின் திருவடியில் பிரார்த்தனைகளைச் சமர்ப்பிப்போம்!' - திருவடிசூலத்தில் சிறப்பு அர்ச்சனை

கோகுலாஷ்டமியை முன்னிட்டு சென்னைத் திருப்பதியாம் திருவடிசூலம் வேங்கடாசலபதி சந்நிதியில் நடைபெறும் சிறப்பு அர்ச்சனையில் வாசகர்களும் சங்கல்பிக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாளை (11.8.2020) கோகுலாஷ்டமி. கண்ணனாக இந்தப் பூவுலகில் திருமால் அவதரித்த திருநாள். இந்த நாளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று கண்ணனாக, வேங்கடவனாக, மகாவிஷ்ணுவாக எழுந்தருளியிருக்கும் இறைவனை அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கம். ஆனால், இந்தக் கொரோனா காலகட்டத்தில் ஆலயம் சென்று தொழமுடியாத அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. வீட்டிலிருந்தே வழிபடும் நிலை. இந்த நிலையில் வாசகர்களின் குறைகளை நீக்கும் வண்ணம், திருமால் எழுந்தருளியிருக்கும் 108 திவ்ய தேசங்களின் சந்நிதிகளும் கொண்ட அற்புதத் திருத்தலமான திருவடிசூலத்தில் வேங்கடவன் சந்நிதியில் சிறப்பு அர்ச்சனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை சக்தி விகடனும் அருள்மிகு சப்தசைலஜ ஸ்ரீவாரு வேங்கடாசலபதி கோயில் நிர்வாகமும் இணைந்து நிகழ்த்துகிறார்கள். அற்புதமான இந்த வழிபாட்டில் வாசகர்களும் சங்கல்பிக்கலாம்.

`கண்ணனின் திருவடியில் பிரார்த்தனைகளைச் சமர்ப்பிப்போம்!' - திருவடிசூலத்தில் சிறப்பு அர்ச்சனை

செங்கல்பட்டிலிருந்து திருப்போரூர் செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது திருவடிசூலம் என்னும் திருத்தலம். பசுமைமிகு மலைகள் சூழ, மிகவும் விசாலமான பரப்பளவில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். முகப்பில் மிகப் பிரமாண்டமாகத் தசாவதார மூர்த்தி காட்சியளிக்க உள்ளே இரு புறங்களிலும் கருடனும் ஆஞ்சநேயரும் சந்நிதி கொண்டருள்கிறார்கள்.

திருமலையில் ஏழுமலைகளின் நாயகனாக அருளும் திருவேங்கடவனே இந்த க்ஷேத்திரத்தின் நாயகனுமாய்த் திகழ்கிறார். பயணப் பாதைகள், ஆலயத்தில் தரிசனத்துக்கு அழைத்துச் செல்லும் வழிகள் ஆகியவை மட்டுமல்ல, திருவேங்கடவனின் சந்நிதானமும் அப்படியே திருப்பதியை நம் கண்முன் நிறுத்துகிறது. பெருமாளின் கருவறை விமானம் பொன்னிறத்தில் பிரகாசமாகக் காட்சி தருகிறது.

கருவறையில் திருப்பதி திருவேங்கடவனைப் போன்று அதே திருக்கோலம், அதே பேரழகுடன் சேவை சாதிக்கிறார், ஸ்ரீவாரு வேங்கடேச பெருமாள். பத்மாவதி தாயாரும் திருச்சானூரில் சேவை சாதிக்கும் அதே கோலத்தில் அருள்கிறார். இந்தக் கோயிலின் அருகிலேயே, அண்ணனின் ஆலயத்துக்கு இணையான எழிலோடு திகழ்கிறது, மாயோனின் சகோதரியாம் ஆதிபரமேஸ்வரிதேவி ஸ்ரீகருமாரியம்மன் கோயில். கேட்ட வரத்தைக் கேட்டபடி அருளும் வரப் பிரசாதியாய் அருள்கிறாள் அம்பிகை.

கோகுலாஷ்டமி
கோகுலாஷ்டமி

விசாலமான பிராகாரத்தில் அமைந்துள்ள 108 திவ்ய தேச சந்நிதிகளில் அந்தந்த திவ்ய தேசத்தின் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். இத்தகைய சிறப்பும் மகிமையும் சாந்நித்தியமும் நிறைந்த இந்தத்தலத்தில்தான் கோகுலாஷ்டமியையொட்டி சிறப்பு அர்ச்சனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாசகர்கள் தங்களின் பெயர், நட்சத்திரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு சங்கல்பம் செய்துகொள்ளலாம். வேங்கடவன் சந்நிதியில் சங்கல்பிக்கும் காணொளி பின்பு சக்திவிகடன் முகநூலில் வெளியிடப்படும். கோகுலாஷ்டமி அன்று பெருமாளுக்கு அர்ச்சனை செய்துவழிபட்டால் தடைகள் நீங்கி, வாழ்வில் மகிழ்ச்சியும் செல்வமும் சேரும் என்பது நம்பிக்கை. எனவே, விருப்பம் உள்ள வாசகர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தை நிரப்பி இந்த வைபவத்தில் பங்குகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு