Published:Updated:

கேள்வி - பதில்: அண்ணாமலையார் ஜோதிர்லிங்கமா?

ஸ்ரீஅண்ணாமலையார்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீஅண்ணாமலையார்

காசி, ராமேஸ்வரம் என்று பன்னிரு தலங்களில், நம் உள்ளொளியைப் பெருக்கி, நாம் யார் என்ற அறிவை அளித்து அனுக்கிரகம் செய்கிறார் சிவபெருமான்.

கேள்வி - பதில்: அண்ணாமலையார் ஜோதிர்லிங்கமா?

காசி, ராமேஸ்வரம் என்று பன்னிரு தலங்களில், நம் உள்ளொளியைப் பெருக்கி, நாம் யார் என்ற அறிவை அளித்து அனுக்கிரகம் செய்கிறார் சிவபெருமான்.

Published:Updated:
ஸ்ரீஅண்ணாமலையார்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீஅண்ணாமலையார்

? `ஜோதி' என்றால் நெருப்பு. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் அருளும் அண்ணாமலையார் அக்னி சொரூபம்.ஆனால், அவரை ஜோதிர்லிங்கம் என்று அழைப்பதில்லையே, ஏன்?

- விஸ்வநாதன், சென்னை - 14

ஜோதி என்றால் நெருப்பு என்று பொது வான அர்த்தத்தில் சொல்லலாம். பஞ்சபூதத் தலங்களில் அண்ணாமலையாரை அக்னி வடிவத்தினராக வழிபட்டு வருகிறோம்.

சிவபெருமான் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருந்து வழிநடத்துபவர். அவரின்றி ஓர் அணுவும் அசையாது. அவரை வழிபட்டு ஆற்றல் பெறுவதற்குப் பல வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.

ஆலயம்தோறும் விக்கிரகங்களைத் தகுந்த ஆசார்யர்களின் மூலம் பிரதிஷ்டை செய்து, உலக நன்மையின் பொருட்டு வழிபட்டு வருகிறோம். இயற்கையில்... அவரை உலகுக்கு ஒளிதரும் சூரியனாக வழிபடுவது நம் மரபு. அனைத்து சிவாசார்ய பெருமக்களும் தங்களின் ஆத்மார்த்த பூஜையில், முதலில் சிவசூரியனை வழிபட்ட பிறகே சிவபூஜையைத் தொடங்குவது வழக்கம். பழைமையான ஆலயங்களுக்குச் செல்லும்போது, முதலில் சூரியன் இருப்பதைக் காணலாம்.

உருவமற்ற சிவப்பரம்பொருள் நமக்காக உருவம் எடுத்திருப்பது, அவருடைய கருணை யின் மகிமை. சைவ நூல்கள் ‘சிவார்க்க சக்தி’ என்கின்றன. அதாவது, சிவசூரியனின் சக்தியால் ஆன்மாவுக்குச் சிவஞானம் ஏற்படுகிறது என்று விளக்குகின்றன.

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள பல சூரியன் களில் பன்னிரண்டு சூரியன்களை நாம் பூஜையில் வழிபட்டு வருகிறோம். ஒரே தீபமே பல இடங்களில் ஏற்றும்போது பலவாகத் தெரிவது போல், எல்லாம்வல்ல அண்ணாமலையாரே தன் அருளாற்றலினால் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களாகத் தோன்றி அருள்பாலிக்கிறார். அண்ணாமலையாரே அனைவருக்கும் மூலம் என்பதால், அவர் அந்த எண்ணிக்கையில் வரமாட்டார்.

கேள்வி - பதில்: அண்ணாமலையார் 
ஜோதிர்லிங்கமா?

காசி, ராமேஸ்வரம் என்று பன்னிரு தலங்களில், நம் உள்ளொளியைப் பெருக்கி, நாம் யார் என்ற அறிவை அளித்து அனுக்கிரகம் செய்கிறார் சிவபெருமான். இந்த க்ஷேத்திரங்களை நாம் குடும்பத்துடன் சென்று தரிசித்து வழிபடலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

? கோயிலுக்குச் செல்லும்போது, பக்தர்கள் சிலர் தங்களின் காதில் பூவோ அல்லது துளசி, வில்வம் போன்றவற்றையோ வைத்துக்கொண்டிருப்பதைக் கவனித்திருக்கிறேன். அதற்கான காரணம் என்ன?

- மல்லிகா அன்பழகன்

காதில் பூ வைத்துக்கொள்வது குறித்து சாஸ்திரங்களில் கூறப்படவில்லை. கடவுளின் பிரசாதத்தில் அவருடைய ஆற்றல் இருக்கும் என்ற எண்ணத்தின் காரணமாக, அந்த ஆற்றல் தங்களுக்குக் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி ஒரு வழக்கம் ஏற்பட்டிருக்கலாம்.

பூஜையில் அளிக்கப்படும் பூக்களைப் பெண்கள் தங்களின் சிகையில் சூடிக்கொள்வர். ஆண்களுக்கு அதுபோன்ற வசதி இல்லாத காரணத்தினால், தங்களின் திருப்தியின் பொருட்டு காதில் வைத்துக்கொள்வது என்ற வழக்கம் ஏற்பட்டிருக்கலாம்.

? பூஜைக்குரிய மந்திரங்களில் சிலவற்றை ஆண்கள் சொல்லலாம் என்றும், சிலவற்றைப் பெண்கள் சொல்லலாம் என்றும், வேறுசில மந்திரங் களைப் பெண்கள் சொல்லக்கூடாது என்றும் விதிக்கப்பட்டிருப்பது ஏன்?

- ஆர்.சிவராஜ், திருத்தணி

மந்திரங்கள் மிகவும் வல்லமை வாய்ந்தவை. அவை வெறும் எழுத்துகள் அல்ல; நம் தலையெழுத்தையே மாற்றும் ஆற்றல் பெற்றவை.அனைத்துச் சொற்களும் ஒரே இடத்திலிருந்து தோன்றினாலும் அனைத்தும் ஒன்றல்ல. உச்சரிப்பின் வேறுபாட்டால் சொற்களும் வேறுபடும்; அவற்றால் கிடைக்கக்கூடிய பலன் களும் வேறுபடும்!

‘ஆத்மா’ எனும் நிலையில் அனைவரும் ஒன்றே. ஆனால், எப்போது அந்த ஆத்மா ஓர் உடலில் குடிகொள்கிறதோ, அப்போது அந்த உடலின் தன்மையைப் பொறுத்தே அதன் செயல்கள் அமையும். இதுகுறித்து நம் சநாதன தர்மம் தெளிவாக விளக்குகிறது. இந்தக் காரணத்தை முன்னிட்டே, ஆலயங்களில் கடைப்பிடிக்கப்படும் பூஜைகளினால் ஏற்படும் பலன்கள், பிரபஞ்சத்தின் சகல ஜீவராசி களையும் சென்றடையும் என்றும் அவற்றை இப்படித்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நம் சாஸ்திரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாட்டை நாம் ஒப்புக்கொள்ளவே வேண்டும். ஆத்மா என்ற வகையில் ஒன்றாக இருந்தாலும், உடல் என்ற வகையில் வேறுபாடு உண்டு. இன்றைக்கும் பெண்களே குழந்தைச் செல்வத்தைக் கொடுக்கும் பாக்கியம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். மந்திரங்கள் தரும் அதிர்வுகள் வெளியுலகில் மட்டுமல்லாமல், நம் உடலிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனவேதான், சில மந்திரங்களைப் பெண்கள் சொல்லக்கூடாது என்று நம்

மகரிஷிகள் கூறியுள்ளனர். அவர்கள் கூறியவற்றைக் கடைப்பிடித்து, அதன்படி நம் வழிபாடுகளை அமைத்துக்கொள்வதே சிறந்தது.

? காயத்ரீ மந்திரத்தின் சிறப்பு என்ன. அந்த மந்திரத்தை எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் சொல்லலாமா?

- மு.நமசிவாயம், கும்பகோணம்

காயத்ரீ அனைத்துக்கும் ஆதாரமானது. பொதுவான ஸ்தோத்திரங்களை அனைத்து நேரங்களிலும் அனைவரும் கூறலாம். ஆனால், காயத்ரீ மந்திரத்தை உபதேசம் பெற்றவர்கள் மட்டுமே கூறவேண்டும். பெண்கள் காயத்ரீ மந்திரம் சொல்வதைத் தவிர்க்கவேண்டும். நம் சநாதன தர்மத்தில் பல ஆயிரம் ஸ்தோத்திரங்கள் உள்ளன. அவற்றைப் பாராயணம் செய்தாலே போதும். முக்காலத்தையும் அறிந்தவர்கள் நம் மகரிஷிகள். அவர்கள் கூறியிருப்பது நம் நன்மை யின் பொருட்டே என்றும், இயற்கையுடன் இணைந்திருக்க அவர்களின் வழிகாட்டல்கள் உதவும் என்றும் நாம் நம்பவேண்டும்.

ஆக, அவர்கள் வழிகாட்டியுள்ளவாறு, முறைப்படி உபதேசம் பெற்றவர்கள், எத்தனை முறை தகுந்த அனுஷ்டானத்துடன் ஜபிக்க முடியுமோ அத்தனை முறை காயத்ரீ மந்திரத்தை ஜபித்து வரவேண்டும். இதனால் அனைவருக்கும் நல்ல பலன்கள் ஏற்படும்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002