Published:Updated:

இல்லற பேதம் நீங்கும்... தம்பதி ஒற்றுமை மேலோங்கும்!

கோமுக்தீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
News
கோமுக்தீஸ்வரர்

அணைத்தெழுந்த நாயகரை வணங்குவோம்

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பது பெரியவர்கள் வாக்கு. ஆனால், தற்காலத்தில் கருத்துவேறுபாடுகள் மிகுந்து பிரிந்து வாழும் தம்பதியரின் எண்ணிக்கை மிகுதியாகக் காணப்படுகிறது. அப்படிப்பட்டவர்கள், தங்களின் வாழ்க்கைத்துணையுடனான மனக் கசப்புகள் மறைந்து, பிணக்குகள் நீங்கி மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ வரம் வழங்கும் இறையாய் ஒரு தலத்தில் அருள்கிறான் ஈசன்.

அந்தத் தலம் - திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் திருக்கோயில். இங்கு அணைத்தெழுந்த நாயகராய் அருள்பாலிக்கிறார் கல்யாண சுந்தரேஸ்வரர். வாருங்கள் கோமுக்தீஸ்வரர் ஆலயத்தை தரிசனம் செய்வோம்.

இல்லற பேதம் நீங்கும்...  தம்பதி ஒற்றுமை மேலோங்கும்!

திருவாவடுதுறையில் சுமார் 1,400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீஅதுல்யகுஜாம்பிகை உடனாய ஸ்ரீகோமுக்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமயக்குரவர்கள் நால்வராலும் பாடல்பெற்ற பெருமைமிக்க தலம் இது. தமிழகத்திலேயே மிகப் பெரிய கல் நந்தி இங்கு உள்ளது. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் 3,000 பாடல்கள் இயற்றியதாகக் கூறப்படும் திருமூலர் இங்குதான் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்தார். திருமந்திர ஓலைச்சுவடிகளை இக்கோயில் பலிபீடத்தின் அடியிலிருந்துதான் திருஞானசம்பந்தர் கண்டறிந்து வெளிக்கொணர்ந்தார் என்றும் கூறுவர். அச்சுவடிகள் இன்றும் திருவாவடுதுறை ஆதீன சரஸ்வதி நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

புத்திரப்பேறு வேண்டி இங்கு வந்த முசுகுந்த மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, புத்ர தியாகேசராக இத்தலத்தில் அருள்கிறார் இறைவன்.

இத்தகைய சிறப்புகளுடைய இத்திருக்கோயிலின் இரண்டாம் திருச்சுற்றில், வடமேற்கில், தெற்கு நோக்கிய சந்நிதியில் உலோகத் திருமேனியராய் ஸ்ரீஅணைத்தெழுந்த நாயகர் காட்சியருள்கிறார். அம்பிகையை ஆட்கொண்ட கம்பீர மேனியராய் பெருமானும் நாணம் பொங்கும் முகத்தினளாய் பூரண அழகுடன் அம்பிகையும் காட்சித்தரும் இத்திருக்கோலம் கலையழகின் உச்சம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அன்னையும் அப்பனும் இந்த உலகை உய்விக்க ஆடிய திருவிளையாடல்கள் எண்ணற்றவை. அத்தகைய திருவிளையாடல்களில் ஒன்றுதான் இத்தலத்தில் அணைத்தெழுந்த நாயகராக ஈசன் அருள்பாலிப்பதற்கான காரண நிகழ்வு.

கோமுக்தீஸ்வரர்
கோமுக்தீஸ்வரர்

ஒருமுறை, திருக்கயிலையில் சிவபெருமான் பெருமாட்டியுடன் சொக்கட்டான் ஆடியருளத் திருவுளம்கொண்டார். இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தானே மூலகாரணமாகவும் சாட்சியாகவும் ஈசனார் திகழ்ந்திருக்க, அவருடனான சொக்கட்டான் ஆட்டத்துக்குச் சாட்சியாகத் தம் சகோதரரான திருமாலை இருத்தினாள் உமையம்மை. இச்செயலின் தன்மையை அம்மைக்கு உணர்த்த விரும்பிய ஈசன் ‘மாடே போ’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.

அந்த நிலையிலேயே சிந்தை தெளிவுற்ற உமையன்னை சாப விமோசனம் வேண்டிட, பூலோகத்தில் பல தலங்களில் சிவபூஜை செய்து வரும்படியும், தக்க தருணத்தில் தாமே அங்கு வந்து ஆட்கொண்டு அருளுவதாகவும் பெருமான் அருளினார். அதன்படி, கோரூபாம்பிகையாகக் கயிலையை விட்டு நீங்கி பூலோகத்தில் தோன்றி னாள் அம்பிகை. தன் அன்னை கயிலையைவிட்டு நீங்கியதைக் கண்டு மனம்தாளாத குழந்தை கணபதியும் கன்றாக மாறிப் பின்னோடி வந்தார். மாடு மேய்க்கும் இடையராகத் திருமாலும் உடன் வந்திட, அலைமகளும்; கலைமகளும் பசுவுரு ஏற்று அம்மையுடன் பூலோகம் வந்தனர்.

காசியில் தோன்றிய கோரூபாம்பிகை, தலங்கள் தோறும் சிவபெருமானை தரிசித்தபடி காவிரித் தலங்களை வந்தடைந்தாள். தேரழுந்தூர், கோமல், திருக்கோழம்பம், கரைகண்டம், திருவாவடுதுறை, குத்தாலம், திருவேள்விக் குடி, திருஎதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி ஆகிய திருத்தலங்கள் இப்புராண நிகழ்வுடன் தொடர்புடைய திருக்கல்யாணத் திருத்தலங்கள். இத்தலங்களை தரிசிப்போருக்கு மணவாழ்வு சிறக்கும் என்பது ஐதிகம்.

இந்த வரிசையில், திருக்கோழம்பம் தலத்தில் உறைந்துள்ள லிங்க வடிவ ஸ்ரீகோகர்ணேஸ்வரரை பால் சொறிந்து அபிஷேகித்தாள் அன்னை கோரூபாம்பிகை. அந்த நிலையில், பசுவின் கால் இடறி பாணத்தின் மீது குளம்பு பட்டவுடனே லிங்கத்திலிருந்து தோன்றினார் பெருமான். அதுகண்டு பயந்த கோரூபாம்பிகை திருவாவடு துறை தலம் நோக்கி ஓடிவரலானாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருவாவடுதுறை எல்லையில், அன்னை கோவுரு நாயகியைக்கண்ட பிள்ளையார் மகிழ்ச்சியுடன் ‘அம்மா, அப்பா இதோ இருக்கிறார்’ என்று திருவாவடுதுறை நாதரை அடைய வழி காட்டினாராம். இன்றும் அவர் ‘அன்னைக்கு வழிகாட்டிய விநாயகர்’ என்ற திருநாமம் தாங்கி விளங்குகிறார்.

இல்லற பேதம் நீங்கும்...  தம்பதி ஒற்றுமை மேலோங்கும்!

இத்தலத்து இறையான ஸ்ரீமாசிலாமணீசரை மனமுருகி பணிந்து வணங்கினாள் உமையன்னை. அன்னையின் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன் அவளைத் தம் திருக்கரங்களால் தொட்டு அணைத்து எழுப்பிட, அன்னை பசு உருவம் நீங்கப் பெற்று பழைய திருவுருவில் மிக்க எழிலுடன் காட்சியளித்தாள்.

அவ்வாறு அணைத்த நிலையிலேயே தம்பதி சமேதராய் ‘அணைத்தெழுந்த நாதர்’ என்ற திருப்பெயருடன் சகலருக்கும் சிவபெருமான் காட்சியளித்தார். மேலும், பசுவுருவம் நீங்கச் செய்தருளியமையால் இத்தலத்துப் பெருமான் ‘கோமுக்தீஸ்வரர்’ எனவும் வழங்கபெற்றார் என்பது தல வரலாறு.

கயிலையில் பிரிந்த சிவபெருமானும், அம்பாளும் பூலோகத்தில் ஒன்றுசேர்ந்த திருத்தலம் இது என்பதால் இன்றும் இத்திருக்கோயிலில் அருளும் அணைத்தெழுந்த நாயகர் சந்நிதி முன்பு தீபமேற்றி, அர்ச்சித்து வழிபடும் தம்பதியர் எல்லா நலன்களும் பெற்று இல்லறத்தில் ஒற்றுமையுடன் சிறந்து விளங்குவர் என்பது கண்கூடு.

கோயிலில் திருப்பணி செய்யும் அர்ச்சகர் உமாபதி சிவாசார்யரிடம் பேசினோம்.

“குடும்பப் பிரச்னைகளால் பிரிந்து வாழும் தம்பதியரின் தோஷங்களைக் களைந்து, மனக் கவலைகளை அகற்றி அவர்களின் இல்லற வாழ்வினை இன்பமயமாக்கி அருளுகின்றார் ஸ்ரீஅணைத்தெழுந்த நாயகர்.

பசு உருவத்தில் ஈஸ்வரன் திருமேனிமீது பால் சொறிந்து வழிபடும் கோ உரு நாயகியின் திருவுரு தனித்த புடைப்புச் சிற்பமாக இங்கு அமைந் திருப்பது விசேஷமாகும்.

என் அனுபவத்தில் நீதிமன்றக் கூண்டில் நின்ற தம்பதியர்கூட, இங்கு வந்து வழிபட்டதன் பலனாக, விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்று ஒன்றுசேர்ந்துள்ளார்கள். முதலில் தனித்தனியாக வந்து ஸ்வாமியை வணங்கி, அவரின் அருளால் பிரச்னைகள் நீங்கப்பெற்று, பிறகு வாழ்க்கைத் துணைவரோடு ஒன்று சேர்ந்து இத்தலத்துக்கு வந்தவர்கள் அநேகர். மூலவர் பின்புறம் உள்ள முருகப்பெருமான், நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய்க்கு அருள் செய்தவர். எனவே, முருகனுக்கு மாலையிட்டு வணங்கத் திருமணத் தடை விலகி இல்லற பாக்கியம் கிட்டும்” என்றார்.

இப்படி வணங்கிடுவோரின் இடர் களைந்து, அவர்களின் இல்லறம் நல்லறமாக்க அருளிடும் ஸ்ரீஅணைத்தெழுந்த நாயகரை நாமும் ஒருமுறை சென்று வணங்கி வளம் பெறலாமே...!

அம்பிகை பசு வடிவில் பூஜித்த தலங்கள்

1. தேரழுந்தூர்: ஸ்ரீசௌந்தர்ய நாயகி உடனாய ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில். அகத்தியரின் தவ வலிமையால் தேர் அழுந்தி நின்ற ஊர். சிவாலயத்துக்கு எதிரிலேயே ஆமருவியப்பன் (கோ ஸஹர்) என்ற திருநாமம் தாங்கியபடி பெருமாள் தனிக்கோயிலில் பசு மற்றும் கன்றோடு அருள்பாலிப்பது கூடுதல் சிறப்பு. கவிச்சக்கரவர்த்தி கம்பர் வாழ்ந்த ஊர்.

2. கோமல் : கோ+மால் = கோமால். தற்போது கோமல் என்று மருவி வழங்கப்படுகிறது. ஸ்ரீஅன்னபூரணி சமேத ஸ்ரீக்ருபாகூபேஸ்வரர் கோயில். இன்றும் ஹஸ்த நட்சத்திர நாள்களில் சித்தர்கள் அஞ்சலி பாவனையில் மூலவரை பிரதட்சணம் செய்வதாக ஐதிகம்.

3. திருக்கோழம்பம்: ஸ்ரீசௌந்தர்யநாயகி உடனருள் ஸ்ரீகோகணேஸ்வரர். அம்பிகை பசு வடிவில் பூஜித்தபோது, லிங்கத்தின் பாணத்தில் ஏற்பட்ட குளம்பின் வடுவானது இன்றும் காணலாம். இந்நாளி்ல் குளம்பியம் என்றழைக்கப்படும் இத்தலத்து மூலவர் ஸ்ரீகுளம்பியநாதர் என்றே அறியப்படுகிறார்.

4. கரைகண்டம்: ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வ நாதர் திருக்கோயில். குளம்பியத்திலிருந்து வெருண்டு ஓடிவந்த கோவுரு அம்பிகை, காவிரியின் கரையில் நின்று ஆவடுதுறை உள்ள திசையைக் கண்டறிந்தபடியால் கரைகண்டம் என்ற பெயர் பெற்றது.

5. திருவாவடுதுறை: ஸ்ரீஅதுல்யகுஜாம்பிகை சமேத ஸ்ரீகோமுக்தீஸ்வரர். சிவபெருமானால் கோரூபாம்பிகைக்கு சுயவுரு அளிக்கப்பெற்ற தலம். பிரிந்த அம்பிகை ஈசனோடு இணைந்த புராணச் சிறப்புகள் நிறைந்த தலம்.