Published:Updated:

நெய் தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும்! - செண்பகராம நல்லூர் ஸ்ரீஜகந்நாதர் ஆலயம்

ஆனந்த் பாலாஜி

பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே ஸ்ரீஜகந்நாதரின் ஆலயங்கள் உள்ளன.

வடக்கே பூரிஜகந்நாதர், தெற்கே ராமேஸ்வரம் அருகே திருப்புல்லாணி, அடுத்து திருநெல்வேலி மாவட்டம் செண்பக ராமநல்லூர் ஆகியவை குறிப்பிடத்தக்க தலங்களாக விளங்குகின்றன.

இவற்றில், திருநெல்வேலி மாவட்டம் - செண்பகராமநல்லூரில், அருகருகே பிரசித்திபெற்ற மூன்று ஆலயங்கள் சேர மன்னனால் அமைக்கப்பட்டுள்ளன. சிறந்த பிரார்த்தனை மற்றும் பரிகாரத் தலமாக விளங்கும் செண்பகராமநல்லூரில் இந்த ஆலயங்கள் அமைந்ததற்கான காரணக் கதை சிலிர்ப்பானது. கி.பி. 12-ம் நூற்றாண்டில் நடந்த திருக் கதை அது.

நெய் தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும்! - செண்பகராம நல்லூர் ஸ்ரீஜகந்நாதர் ஆலயம்

அந்தக் காலத்தில் வேணாட்டு அரசனாக விளங்கிய உதயமார்த்தாண்டவர்மன் பாண்டிய மன்னன் வம்சத்தில் பெண் எடுத்து திருமணச் சம்மந்தம் கொண்டிருந்தார் அதேபோல், தன் மகள் திருபுவனதேவியைப் பாண்டிய மன்னனுக்கு மணம் முடித்துக் கொடுத்திருந்தார்.

இந்தச் சேர மன்னனின் வழிவந்த ராம வர்மனே, செண்பகராமநல்லூரில் உள்ள ஜகந் நாதர் ஆலயத்தை எழுப்பினார் என்கின்றன சரித்திரத் தகவல்கள். ராமவர்மனைச் செண்பக ராம பாண்டியன் என்றும் கூறுவார்கள் (கி.பி. 1385 முதல் 1400 வரையிலான காலத்தில், மலையாளத்தில் எழுதப்பட்ட லீலா திலகம் எனும் நூலில், வேணாட்டுச் சேரமன்னன் உதயமார்த்தாண்டவர்மன் பற்றிய குறிப்புகள் உள்ளன).

நெய் தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும்! - செண்பகராம நல்லூர் ஸ்ரீஜகந்நாதர் ஆலயம்

108 வைணவ க்ஷேத்திரங்களில் 44-வது தலம் திருப்புல்லாணி அருள்மிகு ஆதிஜகந்நாத பெருமாள் கோயில். தசரதருக்குப் புத்திரப் பேறு வழங்கிய தலம் இது. ராமேஸ்வரம் ஆலயத்துக்குச் செல்லும் பக்தர்கள், திருப்புல் லாணி கோயிலுக்கும் சென்று வழிபடும் வழக்கம் உண்டு.

கனவில் கண்ட காட்சி!

மன்னன் ராமவர்மனும் ராமேஸ்வரத்துக்குச் சென்று உரிய முறைப்படி தீர்த்த நீராடி, ஸ்ரீராமேஸ்வரரை வழிபட்டுவிட்டு, திருப்புல்லாணிக்குச் சென்று ஜகந்நாத பெருமாளை வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்படி, ஒரு முறை ராமவர்மன், தன் படை பரிவாரங்களுடன் தல யாத்திரைப் புறப்பட்டான். நான்குநேரியில் இருந்து 10 கி.மீ தொலைவில் சென்று கொண்டிருந்தன அவனுடைய பரிவாரங்கள்.

நெய் தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும்! - செண்பகராம நல்லூர் ஸ்ரீஜகந்நாதர் ஆலயம்

வழியில் செண்பகவனம் வந்தது. அதையொட்டி பாயும் கருமேனி ஆற்றில் திடுமென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மன்னனும் பரிவாரங்களும் ஆற்றைக் கடக்க முடியாத நிலை. மன்னன் கலங்கினான். திருப்புல்லாணி ஜகந்நாதரை எப்படியேனும் தரிசித்துவிடவேண்டும் என்று அந்தப் பெருமாளை மனத்தில் தியானித்து உருகினான்.

இரவு நேரம் வந்தது. மன்னனும் படை பரிவாரங்களும் செண்பக வனத்தில் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தனர்.

நடுநிசியில் ஒரு கனவு. `மன்னா! யாம் தென் திசையில் இந்த இடத்தில் கோயில்கொள்ள திருவுளம் கொண்டிருக்கிறோம். நீ இங்கே எனக்குக் கோயில் எழுப்பி வழிபடுவாயாக' என அசரீரியாக திருவாக்குக் கொடுத்தார் இறைவன்.

நெய் தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும்! - செண்பகராம நல்லூர் ஸ்ரீஜகந்நாதர் ஆலயம்

சிலிர்ப்பும் வியப்புமாய்க் கண்விழித்தான் மன்னன். கனவில் கிடைத்த இறைவாக்கை நினைத்து உள்ளம் உருகினான். அத்துடன், இந்தப் பகுதியில் எந்த இடத்தில் கோயிலைக் கட்டவேண்டும் என்பது குறித்து வழிகாட்டுமாறு ஜகந்நாதப் பெருமாளை மீண்டும் வணங்கி வேண்டினான்.

மீண்டும் அவனுக்கு அசரீரி வாக்கு ஒலித்தது.

`மன்னா! நாளை காலை மேற்கு நோக்கிச் செல். எந்த இடத்தில் விண்ணில் கருடன் வட்டமிடுகிறானோ, அங்கே என் விக்கிரகத் தைப் பிரதிஷ்டை செய்து, கோயில் எழுப்பு' என்று ஆணையிட்டது அசரீரி. மன்னன் மகிழ்ந்தான்.

பொழுது புலர்ந்தது. கருமேனி ஆற்றில் வெள்ளம் அப்போதும் குறையவில்லை. ஆனாலும் மன்னன், தன் பரிவாரங்களோடு மேற்கு நோக்கிச் சென்றான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விரிந்துபரந்து திகழ்ந்த அந்தச் செண்பக வனத்தில், குறிப்பிட்ட ஓர் இடத்தை அவர்கள் அடைந்தபோது வானத்தில் கருடன் வட்டமிடு வதைக் கண்டார்கள். இறைக் கட்டளைப்படி அந்த இடத்திலேயே ஆலயம் அமைக்கும் பணிகளை ஆரம்பித்தான் மன்னன்.

மூன்று திருக்கோயில்கள்

முதலில் விநாயகருக்கான ஆலயம் எழும்பி யது. பின்னர் நின்ற திருக்கோலத்தில், ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக ஸ்ரீஜகந்நாதரை எழுந்தருளச் செய்து, அவருக்கான அழகிய ஆலயத்தை நிர்மாணித்தான்.

நெய் தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும்! - செண்பகராம நல்லூர் ஸ்ரீஜகந்நாதர் ஆலயம்

ராமேஸ்வரம் சிவனாரையும் வழிபடுவது அவன் வழக்கம் அல்லவா. அதற்கேற்ப, செண்பக வனப்பகுதியில் ஸ்ரீராமலிங்கசுவாமி, சௌந்தர்ய நாயகி அம்பாளையும் பிரதிஷ்டை செய்து சிவாலயமும் அமைத்தான். ஆக, ஓரே தலத்தில் மூன்று கோயில்கள் உருவாயின.

மிகசிறந்த பரிகாரதலமாகத் திகழும் இவ்வூருக்குச் சென்று, பாவங்கள் விலகிட ஸ்ரீராமலிங்க சுவாமியை வழிபடுவதுடன், புத்திரபாக்கியம் பெறுவதற்கு ஸ்ரீஜகந்நாத ஸ்வாமியையும் வழிபட்டால், விரைவில் பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சக்கரத்தில் செண்பகவல்லி நாச்சியார்

ஸ்ரீஜகந்நாத பெருமாள் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பூமாதேவியும் துவார பாலகர்களும் கோயிலின் நுழைவாயிலில் அமையவேண்டும் என்று இறைவன் பணித்த படி ஆலயத்தை அமைத்தானாம் மன்னன்.

ஸ்ரீஜகந்நாத சுவாமி ஆலயம் நான்கரை ஏக்கரிலும், ஸ்ரீராமலிங்க சுவாமி ஆலயம் மூன்றரை ஏக்கரிலும் பிரமாண்டமாக அமைந் துள்ளன. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுத் தகவல்களையும் பெருமாள் கோயிலில் காணமுடிகிறது.

நெய் தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும்! - செண்பகராம நல்லூர் ஸ்ரீஜகந்நாதர் ஆலயம்

செண்பக வனமாக இருந்த இடம் என்பதால், செண்பகவன நல்லூர் என்று அழைக்கப்பட்ட இவ்வூர், மன்னனின் செண்பகராமன் எனும் பெயரை ஏற்று, `செண்பகராம நல்லூர்' என்று பெயர் பெற்றது என்கிறார்கள். ஊரின் ஒரு பகுதி, `ஜகந்நாதபுரம்' என்று இறைவனின் பெயரில் விளங்குகிறது.

சிற்ப அற்புதங்கள்!

கோயிலின் மொட்டைக் கோபுர வாயிலின் வழியே நுழைந்து, நெடிதுயர்ந்த கதவைக் கடந்து உள்ளே செல்லலாம்.

இக்கோயிலின் மன்மதன், ரதி சிலைகள் சிற்பக் கலைக்குச் சான்றாகத் திகழ்கின்றன. மன்மதன் கையில் உள்ள கரும்பைத் தட்டி னால் பலவிதமான இசை ஒலிப்ப தைக் கேட்கமுடியும். அதேபோல், பலவிதமான தூண்களைக் கொண்ட பிரமாண்ட மடைப் பள்ளியும் நம்மைப் பிரமிக்கவைக்கிறது.

நெய் தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும்! - செண்பகராம நல்லூர் ஸ்ரீஜகந்நாதர் ஆலயம்

இவற்றை ரசித்தபடியே கொடி மரம் மற்றும் கருட தரிசனம் முடித்து நகர்ந்தால், வலப்புறம் நாராயண புஷ்கரணி உள்ளது. ஒரு காலத்தில் கோலாகலமாக தெப்பத்திருவிழா நடந்த இந்தப் புஷ்கரணி இப்போது தூர்ந்துபோய்விட்டது. தற்போது தூர்வாரும் பணி நடந்து வருகிறது.

கோயிலுக்குள் காட்சி மண்டபம் உள்ளது. 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில், பல்வேறு வாகனத்தில் வந்து பகவான் காட்சி தரும் கோலங்களை இங்கே காணலாம்.

மண்டபத்துக்கு இடப்புறம் ஸ்ரீராமாநுஜர் சந்நிதி. அதற்கும் மேற்குப் புறத்தில் தீர்த்தக் கிணறு. இதிலிருந்துதான் அபிஷேகத்துக்கு நீர் எடுக்கிறார்கள். கோயிலைச் சுற்றி வந்தால் இடப் புறமாக தாயார் சந்நதிக்குச் செல்லலாம்.

இங்கு தனிச் சந்நதியில் ஸ்ரீசெண்பகவல்லி நாச்சியார் ஸ்ரீசக்கரத்தில் ஆவாகனம் செய்யப் பட்டுள்ளார். மலர்ந்த முகத்துடன், வணங்கு வோருக்கு வேண்டும் வரங்களை வாரி வழங்கும் அன்னையாக... வெளிப்பிராகாரத்தில் தனிச் சந்நியில் இந்தத் தாயார் அருள்கிறார். கோயிலின் தலவிருட்சமான செண்பக மரம் தாயார் சந்நதி முன்பு உள்ளது.

இந்த ஆலயத்தின் ஸ்ரீலட்சுமி நாராயணர் சந்நிதியில், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் எலுமிச்சைப் பழ விளக்கில் நெய்யூற்றி தீபமேற்றி வழிபட்டால், நினைத்த காரியங்கள் கை கூடும். திருமணம் ஆகாத பெண்கள் இங்கு வந்து 21 நாள்கள் எலுமிச்சை விளக்கு போட்டு வணங்கினால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும். குழந்தை வரம் வேண்டி நின்றால், அந்த வரமும் விரைந்து கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

கோயிலின் 16 கால் மண்டபமும் விசேஷமா னது. விசேஷ நாள்களில் திருமஞ்சனமும் கல்யாண உற்சவமும் நடைபெறுகின்றன.

தாயார், ஸ்ரீலட்சுமி நாராயணர் சந்நிதிகளை தரிசித்துவிட்டு ஸ்ரீஜகந்நாதரை தரிசிக்கலாம். கருவறை மண்டப வாயிலில் பிரமாண்டமான துவார பாலகர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அருள்பாலிக்கிறார்கள். அவர்களுடைய மேனியில் புடைத்திருக்கும் நரம்புகள்... சிற்ப நுணுக்கத்துக்குச் சான்றுகள்! தொடர்ந்து சேனை முதலியாரை தரிசிக்கலாம். கருவறையில், நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக அருள்கிறார் ஸ்ரீஜகந்நாதர். இவர் சுதர்சனச் சக்கரத்தில் ஆவாகனம் செய்யப்பட்டுள்ளாராம். கேட்ட வரங்களை கேட்டவண்ணம் அருளும் பெருமாள் இவர்.

பெருமாளை தரிசித்துவிட்டு சிவனாரையும் தரிசித்துச் செல்கிறார்கள் பக்தர்கள். சிவாலயத்திலும் இசைத் தூண் உள்ளது. அதிலுள்ள ஒரு துளையில் ஊதினால் சங்கு நாதமும், இன்னொரு துளையில் ஊதினால் வாங்கா இசையும் ஒலிக்குமாம். அதேபோல் சிவாலயத்தில் திகழும் சிம்மச் சிற்பத்தின் வாயில் உள்ள உருளை... சிற்ப அற்புதமாகும்.

சுமார் 40 ஆண்டுகளாக கோபால் பட்டர் மற்றும் அவரின் குடும்பத்தினர் நித்திய வழிபாடுகளை குறைவின்றி நடத்தி வருகின்றனர். இக்கோயிலை முறையாகச் சீர்செய்து, குடமுழுக்கு நடத்தினால், சீரும் சிறப்பும் பெறும் இத்தலம்.

ஜகந்நாத பெருமாளின் பக்தரான விஜயகுமார் என்ற அன்பர், `ஜகந்நாத பெருமாள் கைங்கரிய சபா' என்ற அமைப்பை ஏற்படுத்தி, உள்ளூர் பக்தர்களை அதில் இணைத்து, ஆலயத் திருப்பணிகளைச் செய்து வருகிறார். நெல்லை உழவாரப்பணி அன்பர்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அனைவரும் குடமுழுக்கு நடக்கும் நாளை எதிர்பார்த்து, அர்ப்பணிப்போடு இறைப் பணிகளைச் செய்து வருகின்றனர். நாமும் இந்தப் பணியில் இணைவோம்; இயன்ற வரை திருப்பணிக்கு உதவுவோம்; பெருமாளின் திருவருளைப் பெறுவோம்.

உதவுவோமே.

பக்தர்கள் கவனத்துக்கு...

தலம்: செண்பகராமநல்லூர்

பெருமாள்: ஸ்ரீஜகந்நாத பெருமாள்

தாயார்: ஸ்ரீசெண்பகவல்லி நாச்சியார்

சிவனார்: ஸ்ரீராமலிங்க ஸ்வாமி

அம்பாள்: ஸ்ரீசௌந்தர்ய நாயகி

சிறப்புகள்: சனிக்கிழமைகளில் இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு. புரட்டாசி சனிக்கிழமையில் கருடசேவை விசேஷமாக நடை பெறும். இரவில் கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா வருவார்.

சித்ரா பௌர்ணமித் திருநாளில் பகவான் கோயிலைச் சுற்றி வலம் வருவது, கண்கொள்ளா காட்சியாகும். திருக்கார்த்திகை மாதத்தில் உற்சவம் மிகச்சிறப்பாக நடைபெறும். மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளி எழுச்சி நடைபெறும். தை மாதம் 10 நாள்கள் திருவிழா நடைபெறும். கடந்த மூன்று ஆண்டுகளாக மாதம்தோறும் திருவோண வழிபாடு நடந்து வருகிறது. திருமணம் மற்றும் குழந்தை வரம் அருளும் பரிகாரத் தலம் இது.

எப்படிச் செல்வது? திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரியிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ளது செண்பகராமநல்லூர். நான்குநேரி-மூலைக்கரைப்பட்டி சாலையில், உன்னங்குளம் எனும்

இடம் வரும். அங்கிருந்து வலப்புறம் திரும்பி, 2 கி.மீ. தூரம் பயணித்தால், செண்பகராம நல்லூரை அடையலாம். மூலைக் கரைப்பட்டி, நான்குனேரியில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.

கோயில், காலை 7 முதல் 9 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாள்களில் மட்டுமே மாலையிலும் ஆலயம் திறந்திருக்கும் (ஆலயத் தொடர்புக்கு: 94444 33321).

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு