Published:Updated:

அணையில் கிடைத்த 17-ம் நூற்றாண்டு அம்பாள் சிலை!

நெல்லை மாவட்டத்தின் அணைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அம்பாள் சிலை, நெல்லையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மகிஷாசுரமர்தினி கற்சிலை
மகிஷாசுரமர்தினி கற்சிலை

நெல்லை மாவட்டம், கடையநல்லூர் அருகே கருப்பா நதி அணை பகுதி உள்ளது. சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு குடிநீருக்கும் விவசாயத்துக்கும் பயன்பட்டுவரும் அந்த அணை தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. அதனால் அணைப்பகுதியில் மராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அணையின் ஷட்டர்களைப் பழுதுபார்க்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

கருப்பாநதி அணை
கருப்பாநதி அணை

அணையில் பணிகள் நடைபெற்ற நிலையில், அணையின் மேல் பகுதியில் இருந்த சிமென்ட் மூட்டையொன்று தவறிக் கீழே விழுந்தது. அந்தப் பகுதிக்குச் சென்று பணியாளர்கள் பார்த்தபோது அங்கு சேற்றுக்குள் ஏதோ கிடப்பதைக் கண்டார்கள். உடனடியாக அந்த இடத்தில் தோண்டிப் பார்த்தபோது அழகிய அம்மன் சிலை இருந்தது. உடனடியாக அதை வெளியே எடுத்துவந்தார்கள். அந்தச் சிலையை அங்கிருந்து அரசு அருங்காட்சியகத்துக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அணையில் கண்டுபிடிக்கப்பட்ட சிலை மகிஷாசுரமர்தினி கற்சிலை என்பது தெரியவந்தது. கருப்பாநதி அணையின் நீர்வள ஆதார அமைப்பின் உதவிப் பொறியாளரான ஆனந்த், நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் சிலையை ஒப்படைத்தார். அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி சிலையைப் பெற்றுக்கொண்டு பொதுமக்கள் பார்வைக்கு வைத்தார்.

அணைக்குள் கிடைத்த மகிஷாசுரமர்தினி சிலை
அணைக்குள் கிடைத்த மகிஷாசுரமர்தினி சிலை

இது குறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி கூறுகையில், ``17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த மகிஷாசுரமர்தினி சிலை, எட்டுக் கரங்களுடன் 2 அடி உயரத்தில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்தச் சிலையைப் பொதுமக்கள் அருங்காட்சியகத்துக்கு வந்து பார்வையிடலாம். நெல்லை மாவட்டத்தில் இதுபோன்று பராமரிப்பற்ற நிலையிலும், உரிமை கோராத நிலையிலும் கற்சிலைகள் காணப்பட்டால் அவை பற்றிய தகவல்களை நெல்லை அரசு அருங்காட்சியகத்துக்கு தெரிவிக்கலாம். அந்தச் சிலைகளை நாங்களே எங்களுடைய சொந்தச் செலவில் அருங்காட்சியகத்துக்கு எடுத்துச் செல்வோம். இத்தகைய தகவல்களைக் கொடுப்பதன் மூலம், நமது முன்னோர்களின் கலை பொக்கிஷங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல உதவிகரமாக இருக்கும்’’ எனத் தெரிவித்தார்.