Published:Updated:

`விக்ரகத்திலிருந்து கீழேவிழுந்து நசுங்கிய கிரீடம்!'- திகிலில் உறைந்த திருச்செந்தூர் பக்தர்கள்

சப்பரத்தின் முன்புறம் சீர்பாதம் சுமந்த திரிசுதந்திரர்களின் கால் இடறியதால் ஒருபக்கம் சப்பரம் சரிந்தது. இதில், சுவாமி ஜெயந்திநாதரின் கிரீடத்தின் மேல்பகுதியில் உள்ள கொண்டை, கல் தூணில் சரிந்து நெளிந்தது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் கடற்கரை ஓரத் தலமும் இரண்டாம் படை வீடும் ஆனது அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இது, குரு ஸ்தலம் என்பதால் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விசேச தினங்களில் ஆயிரக் கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கிறார்கள். விசேஷ நாள்கள் மற்றும் குறிப்பிட்ட சில நாள்கள் தவிர மற்ற நாள்களில் தினமும் மாலை 7 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளி உலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாள்
சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாள்

தங்கத்தேர் இழுக்கும் பக்தர்கள் திருக்கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து தேர் இழுப்பார்கள். வழக்கம் போல, நேற்று மாலை தங்கத்தேர் இழுக்கப்பட்டது. கோயிலைச் சுற்றி வந்த பிறகு, சுவாமி அம்பாளை கோயிலுக்குள் தூக்கிச் செல்லும் போது சுவாமி ஜெயந்திநாதர் விக்ரகத்தின் கிரீடம் கீழே விழுந்து சேதமடைந்தது. இத்தகவல் திருச்செந்தூர் முழுவதும் வேகமாகப் பரவியது.

இதுகுறித்து திருக்கோயில் பணியாளர்கள் சிலரிடம் பேசினோம், “வழக்கம்போல் மாலை 6.30 மணிக்கு ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபம் அருகிலுள்ள தங்கத்தேர் மண்டபத்திற்கு வந்தார். தேரில் சுவாமி, அம்பாள் கிரிவலம் வந்து இரவு 7.30 மணிக்கு நிலையத்தை வந்தடைந்தார். பின்னர் சுவாமி, அம்பாளை சப்பரத்தில் வைத்து சீர்பாதம் திரிசுதந்திரர்கள் சுமந்து சென்றனர். அப்போது கோயில் உள்ளே முதல் பிரகாரத்திற்குச் செல்லும் வழியில் குமரவிடங்கப் பெருமாள் சந்நிதி முன்புறம் உள்ள படிக்கட்டில் இறக்கினர்.

தங்கத்தேர்
தங்கத்தேர்

அப்போது, சப்பரத்தின் முன்புறம் சீர்பாதம் சுமந்த திரிசுதந்திரர்களின் கால் இடறியதால் ஒருபக்கம் சப்பரம் சரிந்தது. இதில், சுவாமி ஜெயந்திநாதரின் கிரீடத்தின் மேல்பகுதியில் உள்ள கொண்டை, கல் தூணில் சரிந்து நெளிந்தது. உடனே, சுதாரித்துக்கொண்ட திரிசுதந்திரர்கள் மேலும் சப்பரம் சரியாமல் அங்கிருந்து சுமந்து சென்று சுவாமி, அம்பாள் அறைக்குள் கொண்டு வைத்துவிட்டார்கள்” என்றனர்.

இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையர் அம்பிரித்திடம் பேசினோம், “சுவாமி விக்ரகத்திலிருந்து கிரீடம் கீழே விழுந்தது உண்மைதான். சப்பரத்தை கோயிலுக்குள் தூக்கிச் செல்லும் எதிர்பாராத விதமாக கால் தவறியதால் சப்பரம் சரிந்து கிரீடத்தின் மேல்பகுதி சிறிது சேதமாகியுள்ளது” என்றார்,

தங்கத்தேர் இழுக்கும் பக்தர்கள்
தங்கத்தேர் இழுக்கும் பக்தர்கள்

இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயகுமார், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பணிபுரியும் அறநிலையத்துறையைச் சேர்ந்த பணியாளர்களாக இருந்தாலும் சரி, சுவாமி, அம்பாளுக்கு கைங்கர்யம் செய்பவர்களாக இருந்தாலும் சரி.. வருமானம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார்கள். சுவாமி, அம்பாளுக்கு கைங்கர்யம் செய்பவர்கள் பய பக்தியுடன் செய்ய வேண்டும். ஆனால் இங்கு பயமும் கிடையாது... பக்தியும் கிடையாது. சுவாமி, அம்பாளைத் தூக்கிச் சென்றவர்களின் அலட்சியப் போக்குதான் இதற்குக் காரணம். பொதுவாக சுவாமியின் கிரீடம் கீழே விழக்கூடாது எனச் சொல்வார்கள்” என்றார்.

” `திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்' எனச் சும்மாவா சொன்னார்கள். செந்தூரை அரசாளும் முருகப் பெருமானின் விக்ரகத்தின் கிரீடம் கீழே விழுந்தது என்பதே அபச குணமாகும். செந்தூரை அரசாளும் குமரனின் கிரீடம் விழுந்ததால் ஆட்சிக்கு ஆபத்து எனவும் பெரியவர்கள் சொல்வார்கள்” என்றனர் சிலர்.

உள் மண்டபத்திற்குச் செல்லும் வழி
உள் மண்டபத்திற்குச் செல்லும் வழி

நாளை வெள்ளிக்கிழமை (22.11.19) நெல்லை மாவட்டத்திலிருந்து தென்காசியைத் தனிமாவட்டமாகத் தொடங்கிவைக்கும் விழாவில் கலந்து கொள்ள 21.11.19 மாலை தூத்துக்குடி வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சுவாமியின் கிரீடம் விழுந்ததால், ஆட்சிக்கு ஆபத்தாகுமோ எனப் பரவலாகப் பேச்சு எதிரொலிக்கிறது. இச்சம்பவம் திருச்செந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.