Published:Updated:

சீனத்து தமிழ்க் கோயில்!

கையுவான் பௌத்த கோயில்
பிரீமியம் ஸ்டோரி
கையுவான் பௌத்த கோயில்

வரலாறு

சீனத்து தமிழ்க் கோயில்!

வரலாறு

Published:Updated:
கையுவான் பௌத்த கோயில்
பிரீமியம் ஸ்டோரி
கையுவான் பௌத்த கோயில்

நமக்குப் பக்கத்திலேயே இருந்தாலும் மனதளவில் வெகு தூரத்தில் இருக்கும் நாடு சீனா. எல்லை உரசலால் இந்த இடைவெளி அதிகமாகிவிட்டது. ஆனால், ஒரு காலத்தில் தமிழகத்துடன் சீனாவுக்கு நெருங்கிய உறவு இருந்தது. பல்லவர்கள் மற்றும் சோழர்கள் ஆட்சிக்காலத்தில், தமிழ் வணிகர்கள் சீனா சென்று தங்கி வியாபாரம் செய்தார்கள்.

ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் வங்காள விரிகுடாவை `சோழர் ஏரி' என்றே அழைத்தார்கள். கடல் கடந்து சென்று நாடுகளைப் பிடித்ததுடன், வாணிபத்தையும் செழிக்கவைத்தார்கள். சீனாவின் கடற்கரைப் பகுதியான குவாங்சோ நகரைச் சுற்றிலும் பல பகுதிகளில் தமிழர் குடியிருப்புகள் அமைந்திருந்தன. பத்தாம் நூற்றாண்டிலிருந்து சுமார் 400 ஆண்டுகள் தமிழ் வணிகர்கள் சீனாவில் குடியிருந்ததற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

தாங்கள் சென்று தங்கும் மண்ணில் தங்கள் கடவுள்களையும் குடியேற்றுவது பண்பாட்டு மரபு. அந்த வகையில், இந்தப் பகுதியில் 12 கோயில்கள் இருந்ததாகச் சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அவற்றில் இரண்டு கோயில்கள் தமிழகக் கோயில்கள் போலவே பிரமாண்டமாக இருந்துள்ளன. இவற்றில் திருக்கானீஸ்வரம் சிவன் கோயில் ஒன்று. ராஜராஜேச்சுரம், ராஜேந்திர சோழீச்சுரம் என மன்னர்கள் பெயரில் ஆலயங்கள் எழுப்புவது நம் மரபு. சீனாவை ஆண்ட செகாச்சி கான் என்ற மன்னர் இந்த ஆலயத்துக்காக இடம் அளித்திருந்தார். இவர் மங்கோலிய மரபில் வந்த குப்ளாய் கானின் மகன். கான் அளித்த இடத்தில் உருவானது என்பதால், இது திருக்கானீஸ்வரம் ஆனது. கி.பி 1281-ம் ஆண்டில், தவச்சக்கரவர்த்தி என்கிற சம்பந்தப் பெருமாள் எனும் தமிழ் வணிகர் இந்தக் கோயிலைக் கட்டியதாக ஆறு வரிகளில் ஒரு தமிழ்க் கல்வெட்டு கிடைத்திருக்கிறது.

கல் மூங்கில் பூங்கா
சிவலிங்கம் - குவாங்சோ அருங்காட்சியக மண்டபம்
கல் மூங்கில் பூங்கா சிவலிங்கம் - குவாங்சோ அருங்காட்சியக மண்டபம்

13-ம் நூற்றாண்டு வரை, தமிழகத் துறைமுக நகரங்கள் போலவே சீனாவின் குவாங்சோ நகரும் பரபரப்பான வணிக மையமாக இருந்தது. சீனாவுக்கு வந்த ஐரோப்பிய வணிகர்கள், அங்கு வாழ்ந்த தமிழ் வணிகர்கள் பற்றி எழுதியுள்ளனர். `இவர்களை எளிதாக அடையாளம் கண்டுபிடிக்கலாம். ஆண்களும் பெண்களும் மிகுந்த செல்வச் செழிப்புடன் வாழ்கிறார்கள். சீனர்கள்போல இறைச்சி உண்ணாமல், தமிழ் வணிகர்கள் அரிசி, காய்கறிகள், பால் என சைவ உணவுகளை உண்கிறார்கள்' என்று ரோம் வணிகர் ஒருவர் வரலாறு எழுதி வைத்திருக்கிறார்.

காலப்போக்கில் அங்கிருந்த தமிழ் வணிகர்கள் வெளியேறிவிட்டனர். வழிபடவும் பராமரிக்கவும் யாருமில்லாத சூழ்நிலையில் இந்தக் கோயில்கள் சிதைந்துபோயிருக்கின்றன. நூறு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் நிலையான அரசு அமைந்தபிறகு, அங்கிருந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குவாங்சோ நகரின் பாரம்பரியத்தைத் தேட ஆரம்பித்தனர். தமிழர்களின் பழம்பெருமை அப்போதுதான் வெளிப்பட ஆரம்பித்தது.

சீனாவில் தமிழர்கள் கட்டிய கோயில்களில் ஒன்றுகூட மிஞ்சவில்லை என்றாலும், அவற்றில் ஒரு கோயில் இப்போதும் வழிபடப்படுகிறது. ஆனால், வேறு காரணங்களுக்காக!

குவாங்சோ நகரின் மையத்தில் இருக்கிறது கையுவான் பௌத்த கோயில். நகரிலேயே மிகப் பெரிய, பழைமையான கோயில் இதுதான். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள். ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலின் ஒரு பகுதி, அப்படியே இந்துக் கோயிலின் அடையாளங்களுடன் இருக்கும். கோயிலின் அடித்தளமாக இருக்கும் கல் கட்டுமானங்களில் இந்துக் கோயில்களில் இருப்பதுபோலவே கரணச் சிற்பங்கள் உள்ளன. கோயிலின் மையமாக இருக்கும் புத்தர் சிலையை வழிபடப்போகும் வழியில் ஒரு பகுதியில் அழகிய சிற்பத் தூண்களும் இருக்கின்றன. இவற்றில் நரசிம்மர் சீற்றம் கொண்டு இரண்யனை வதம் செய்கிறார். ஒரு யானை பூமாலையை சிவலிங்கத்துக்கு அணிவிக்கிறது. என்ன என்று தெரியாமலே, இவற்றையும் சீனர்கள் வணங்குகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மகாவிஷ்ணு சிலை
மகாவிஷ்ணு சிலை

புத்தர் கோயிலில் இவை எப்படி வந்தன? `பழைமையான இந்துக் கோயில் ஒன்றிலிருந்து தூண்களையும் கட்டுமானங்களையும் எடுத்துவந்து இங்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். அல்லது இந்துக் கோயிலே பௌத்த ஆலயத்துடன் இணைக்கப்பட்டிருக்கலாம்' என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்தக் கையுவான் கோயிலுக்குச் சற்று தூரத்தில் கல் மூங்கில் பூங்கா என்ற பெயரில் ஒரு பூங்கா இருக்கிறது. இந்தப் பூங்காவுக்கு இப்படிப் பெயர் வரக் காரணம், மையத்தில் இருக்கும் நீளக்கல். கல்லால் உருவான மூங்கில் என இதைச் சீன மக்கள் வியந்து பார்க்கிறார்கள். ஆனால், இது ஆவுடை இல்லாத சிவலிங்கம்.

இப்படி குவாங்சோ நகரைச் சுற்றி ஆங்காங்கே கிடைத்த சுமார் 300 தமிழ்க் கோயில் சிற்பங்களைச் சீனத் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சிலவற்றை பணக்காரர்கள் சிலர் தங்கள் வீடுகளில் அலங்காரப் பொருளாக வைத்துள்ளனர். குவாங்சோ தொழிலதிபர் ஒருவரின் வீட்டுச் சுற்றுச்சுவரில் அழகிய நந்தி சிலை பதித்து வைக்கப்பட்டிருக்கிறது.

கையுவான் பௌத்த கோயில்
கையுவான் பௌத்த கோயில்

இப்படி வீடுகளில் இல்லாமல், தனியாக இருந்த சிற்பங்களை மட்டும் சேகரித்து குவாங்சோ கடல் வாணிப அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்துள்ளனர். நான்கு கரங்களுடன் மகாவிஷ்ணு, ஒரு கோயிலின் வாசல் தூண், நீண்ட சிற்ப மண்டபம், தமிழ்க் கல்வெட்டு என எல்லாமே நம் முன்னோர்கள் கடல் கடந்து தமிழர் பெருமையை நிலைநாட்டிய வரலாற்றைச் சொல்கின்றன.

சீனாவுடன் இணைந்து தமிழகத் தொல்லியல் துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டால், ஒரு வரலாறு மீட்கப்படலாம்.

சீனத்து தமிழ்க் கோயில்!

குவாயின் அம்மன்!

குவாங்சோ நகரின் அருகிலேயே இருக்கிறது ஜின்ஜியாங். உலகிலேயே காலணிகள் அதிகம் உற்பத்தியாகும் இந்த நகரை `உலகின் ஷூ ஃபேக்டரி' என்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக உள்ள சேடியன் கிராமத்தின் மையத்தில் ஒரு பெண் தெய்வச் சிலை இருக்கிறது. பௌத்தக் கடவுள்களை போதிசத்வரின் அம்சமாக வழிபடும் சீனர்கள், இந்த தெய்வத்துக்கு `குவாயின்' எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால், இது நான்கு கரங்களுடன் மகிஷனை வதம் செய்யும் அம்பிகைபோல உள்ளது. பக்கத்திலேயே காவல் தெய்வங்களாக இரண்டு பெண் தெய்வங்கள் உள்ளன. ஆக்ரோஷமும் புன்னகையும் கலந்த முகத்துடன் இருக்கும் அம்மனை தினமும் காலையில் சீனர்கள் வழிபடுகிறார்கள். அநேகமாக சீனாவில் வழிபடப்படும் ஒரே இந்துக் கடவுள் இவராகத்தான் இருக்கும். எந்தப் பெயரில் இருந்தால் என்ன, தெய்வம் தெய்வம்தான்!