Published:Updated:

`கும்பகோணம் மகாமகம் டு பெரியகோயில் குடமுழுக்கு!' - தஞ்சை கலெக்டரின் நாஸ்டால்ஜியா

பெரியகோயிலில் கலெக்டர்
பெரியகோயிலில் கலெக்டர் ( ம.அரவிந்த் )

பெரிய கோயில் குடமுழுக்குப் பணிகளை சிறப்பாகச் செய்துவரும் கோவிந்தராவ், ஏற்கெனவே 2016-ம் ஆண்டு மகாமகம் விழாவை மிகச் சிறப்பாக நடத்தினார். அப்போது அவர், கும்பகோணத்தில் சப்-கலெக்டராக இருந்தார்.

தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுகுக்கு, நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில்,`கடந்த 2016ல் மகாமகம் விழாவை சிறப்பாக நடத்தியதுபோல், குடமுழுக்கு விழாவையும் சிறப்பாக நடத்தி முடிப்பார், தஞ்சையின் கலெக்டர் கோவிந்தராவ்' என சமூக ஆர்வலர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துவருகின்றனர்.

பெரியகோயில்
பெரியகோயில்

தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெற உள்ளது. இதற்காக, யாகசாலை பூஜைகள் கடந்த 1-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதற்குமுன் குடமுழுக்கு விழாவில் எந்த விதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க வேண்டி, கோயில் வளாகத்திற்குள் அஸ்திர மகா யாக பூஜை நடைபெற்றது.

கடந்த 1997-ம் ஆண்டு, தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கின் போது, யாகசாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 48 பேர் உயிரிழந்தனர். தற்போது நடைபெற உள்ள குடமுழுக்குத் தேதி அறிவிக்கப்பட்டதுமே, கடந்த முறைபோல் எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பது பக்தர்களின் கவலையாக இருந்தது.

பெரியகோயிலில் கலெக்டர்
பெரியகோயிலில் கலெக்டர்

இதையடுத்து, தஞ்சையின் புதிய கலெக்டராகக் கடந்த டிசம்பர் மாதம் கோவிந்தராவ் பொறுப்பேற்றார். அவர் பணிக்கு வந்த சில தினங்களிலேயே பெரியகோயிலுக்குச் சென்று பார்வையிட்டதுடன், குடமுழுக்கிற்கு எப்படியெல்லாம் திட்டமிடலாம் எனவும் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில், கோயில் குடமுழுக்கில் எந்தவித சிறு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்கப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கலெக்டர் கோவிந்தராவின் நேரடிப் பார்வையில் பணிகள் அனைத்தும் நடைபெற்று, குடமுழுக்கு நடைபெற உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலரும் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவருமான பாலா கூறுகையில், ``தற்போதைய தஞ்சை கலெக்டராக இருந்து பெரிய கோயில் குடமுழுக்கு பணிகளை சிறப்பாகச் செய்துவரும் கோவிந்தராவ், ஏற்கெனவே 2016-ம் ஆண்டு தென்னகத்து கும்பமேளா என அழைக்கப்படும் மகாமகம் விழாவை மிகச் சிறப்பாக நடத்தினார். அப்போது அவர், கும்பகோணத்தின் சப்-கலெக்டராக இருந்தார்.

பெரியகோயில்
பெரியகோயில்

மூன்று நாள்களாக இருந்த மகாமகம் விழாவை 30 நாள்களாக மாற்றி, அந்த நாள்களில் பக்தர்கள் புனித நீராடலாம் என அறிவித்து, அதற்கு ஏற்ற முறையில் பலவகையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தார். அதனாலேயே, மொத்தம் 50 லட்சம் பக்தர்கள் வரை கலந்துகொண்ட அந்த விழாவில் எந்தவிதமான அசம்பாவிதமும் இல்லாமல் சிறப்பாக நடந்து முடிந்தது. அப்போதே, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிந்தராவின் செயலைப் பாராட்டி வாழ்த்தினார்கள்.

அதேபோல், அவர் தஞ்சை கலெக்டராகப் பொறுப்பேற்றதுமே, `பெரிய விமானக் கோபுரம் கொண்ட பெரியகோயில் குடமுழுக்கு விமரிசையாகவும் எந்தவிதமான அசம்பாவிதம் ஏற்படாமலும் சிறப்பாக நடைபெறும்' எனப் பலர் பேசுவதைக் கேட்க முடிந்தது. அதற்கு ஏற்றாற்போல் யாகசாலைப் பந்தலை கோயில் வளாகத்திற்குள் அமைக்காமல் வெளியே அமைத்துள்ளார். அத்துடன், உள்ளே செல்வதற்கும் வெளியே வருவதற்கும் ஒரே பாதை பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில், பல வழிகளை அமைத்துள்ளார். இது, பரவலாகப் பாராட்டைப் பெற்றுள்ளது.

கலெக்டர் கோவிந்தராவ்
கலெக்டர் கோவிந்தராவ்

யாகசாலை தீப்பிடிக்காத வகையிலான பெயின்ட் பந்தலில் அடிக்கப்பட்டுள்ளது. புகைபோக்கும் இயந்திரம் அமைக்கப் பட்டுள்ளது. 300 அடி உயரம் செல்லக்கூடிய ஹைட்ராலிக் வசதி கொண்ட நவீன தீயணைப்பு வாகனம், விமானக் கோபுரத்தின் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கூட்டத்திற்குத் தகுந்தாற்போல் எப்படி கோயிலுக்கு உள்ளே அனுமதிப்பார்களோ அந்த முறையில், இங்கும் மக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பெரிய மகாமகம் சிறப்பாக நடைபெற என்னென்ன வழிமுறைகளை அவர் கடைபிடித்தாரோ அதையே பெரிய கோயில் குடமுழுக்கிலும் கடைபிடித்து வருகிறார். அதனால் நிச்சயம் எந்த அசம்பாவிதமும் நடக்காத வகையில் பெருவுடையாருக்கான விழா சிறப்பாக நடைபெறும்.

`சோழர் காலத்துக்கே அழைத்துச் செல்கிறது!'- சுவர் ஓவியங்களால் நெகிழும் தஞ்சை மக்கள் #Video

அவர், தஞ்சை கலெக்டராகப் பொறுப்பேற்று இரண்டு மாதம்தான் ஆகிறது. குறைந்த நாள்களிலேயே சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ள அவர், குடமுழுக்கு விழாவை சிறப்பாக நடத்தி முடிப்பார்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு