Published:Updated:

`போட்டோ எடுக்கக் கூடாது!' - ஹைதராபாத் தம்பதியால் ஏற்பட்ட தஞ்சை பெரிய கோயில் சர்ச்சை

கைது செய்யப்பட்ட தம்பதி
கைது செய்யப்பட்ட தம்பதி

பணியில் இருந்தவர்கள் சுந்தர்சர்மாவை தள்ளியதுடன் மஞ்சுவை கையைப் பிடித்து இழுத்து தள்ளியுள்ளனர். இதில் கோபம் அடைந்த மஞ்சு என் கையை ஏன் பிடித்தீர்கள் என நாடிமுத்துவின் மூக்கில் குத்துவிட்டார்.

தஞ்சாவூர் பெரியகோயிலில் பணியில் இருந்த ஊழியர்கள் போட்டோ எடுப்பதைத் தடுத்தபோது ஏற்பட்ட வாக்கு வாதத்தால் சுற்றுலா வந்த வெளிமாநில தம்பதியர் அந்த ஊழியர்களைத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காயம்பட்டவர்
காயம்பட்டவர்

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இதேபோல் இன்று தெலங்கான மாநிலம் ஹைதராபாத் பகுதியிலிருந்து ஒரு தம்பதியர் பெரியகோயிலை காண்பதற்கு வந்தனர். கோயிலின் அழகைக் கண்டு ரசித்த அந்தத் தம்பதி தங்களுடைய கேமராவில் போட்டோ எடுத்துக் கொண்டும் இருந்தனர்.

பின்னர், அவர்கள் கும்பாபிஷேகத்துக்காக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ள ராஜா மண்டபத்தில் உள்ள ஓவியங்களை போட்டோ எடுத்தனர். இதை அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் தடுத்துள்ளனர். இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்தத் தம்பதியர் பணியில் இருந்த ஊழியர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் கூட்டம் கூடியதால் கோயில் வளாகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

கோயில் ஊழியர்கள்
கோயில் ஊழியர்கள்

இதுகுறித்து கோயில் வட்டாரத்தில் விசாரித்தோம். ``வரும் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி பெரிய கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது .இதற்காகக் கோயில் வளாகம் முழுவதும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் கும்பாபிஷேகப் பணிகளைக் கவனிப்பதற்காக சிறப்பு அலுவலகம் ஒன்றை பெருவுடையார் சந்நிதிக்கும், முருகன் சந்நிதிக்கும் இடையே உள்ள ராஜா மண்டபத்தில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அந்த அலுவலகத்தில் உதவி ஆணையர் கிருஷ்ணன், கோயில் திருப்பணி மற்றும் வழக்கு அதிகாரி நாடிமுத்து, காவலாளிகள் ராஜ்குமார், விஜய் உள்ளிட்டவர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது வெளிமாநில தம்பதியரான சீனிவாஸ் என்கிற சுந்தர்சர்மா மற்றும் அவருடைய மனைவி மஞ்சு ஆகியோர் அலுவலகத்துக்குள் வந்ததுடன், அங்கிருந்த ஓவியங்களையும் புகைப்படம் எடுக்க முயன்றனர்.

கைது செய்யப்பட்ட தம்பதி
கைது செய்யப்பட்ட தம்பதி

அப்போது கோயில் காவலாளி ராஜ்குமார், அதிகாரி நாடிமுத்து ஆகியோர் இங்கு படம் எடுக்கக் கூடாது எனக் கூறி தடுத்தனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதில் நாடிமுத்து, ராஜ்குமார் ஆகிய இருவரும் தாக்கப்பட்டனர். இதில் நாடிமுத்துவின் கண்ணாடி உடைந்ததால் அவருக்கு கண் பகுதியில் காயம் ஏற்பட்டது. அத்துடன் உதவி ஆணையர் கிருஷ்ணனையும் அவர்கள் தாக்கினர். பின்னர் காயம் அடைந்த ராஜ்குமார் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, கோயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்ததுடன் நாடிமுத்து கொடுத்த புகாரின் பேரில் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் சுந்தர்சர்மா ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது தெரிய வந்தது'' என்றனர்.

பெரியகோயில்
பெரியகோயில்

என்ன நடந்தது என அங்கிருந்த சிலரிடம் பேசினோம். ``ஓவியங்களை போட்டோ எடுக்கும்போதே, `என்ன சிறப்பு வாய்ந்த இந்த ஓவியங்களை பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைய விட்டிருக்கிறார்களே?' என அவர்களுக்குள் பேசிக்கொண்டே அந்தத் தம்பதியினர் போட்டோ எடுக்க முயன்றுள்ளனர். இதைக் காதில் வாங்கிய பணியில் இருந்தவர்கள், `இது அலுவலகம் இங்கு போட்டோ எடுக்கக் கூடாது' என தடுத்தனர். `இந்த இடத்தில் ஏன் அலுவலகம் அமைத்தீர்கள். இது சுற்றுலாப் பயணிகள் பார்க்கும் இடம் தானே?' என அந்தத் தம்பதியினர் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து பணியில் இருந்தவர்கள் சுந்தர்சர்மாவை தள்ளியதுடன் மஞ்சுவை கையைப் பிடித்து இழுத்து தள்ளியுள்ளனர். இதில் கோபம் அடைந்த மஞ்சு, `என் கையை ஏன் பிடித்தீர்கள்?' என நாடிமுத்துவின் மூக்கில் குத்துவிட்டார். கொஞ்சம் கடினமாக நடந்துகொண்டதே பிரச்னைக்குக் காரணம் கனிவுடன் சொல்லியிருந்தால் இது நடந்திருக்காது'' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு