Published:Updated:

`10 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் பிரமாண்ட விழா!' -தஞ்சை பெரியகோயிலில் குவியும் பக்தர்கள்

மாமன்னன் ராஜராஜசோழன்
மாமன்னன் ராஜராஜசோழன்

அலங்கார விளக்குகள், வண்ணமயமான ஓவியங்கள், கலை நிகழ்ச்சிகள் என தஞ்சாவூர் நகரமே விழாக்கோலத்தில் காணப்படுகிறது. கடந்த ஒரு வாரமாகவே வெளியூர்களிலிருந்து வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை நகரம் தற்போது கோலாகலமாக காட்சி அளித்துக்கொண்டிருக்கிறது. பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறவுள்ள பெரியகோயில் குடமுழுக்கை முன்னிட்டு இப்போதே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. விழாக் கோலத்தில் காட்சி அளிக்கும் பெருவுடையார் கோயிலை தரிசிக்க, வெளியூர்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தஞ்சையில் குவிந்துகொண்டிருக்கிறார்கள்.

விழாக் கோலத்தில் தஞ்சை நகரம்
விழாக் கோலத்தில் தஞ்சை நகரம்

பொதுமக்களின் வசதிக்காக, தஞ்சையின் சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து, ஏராளமான சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்களை இயக்குவதற்குத் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மாமன்னன் ராஜராஜ சோழன், கலைநயத்தோடும் பக்தியோடும் கட்டியெழுப்பிய தஞ்சை பெரியகோயிலைக் கண்டு உலகமே வியக்கிறது. 2010-ம் ஆண்டு நடைபெற்ற இக்கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா, தமிழ்நாட்டின் மிகப்பெரும் விழாவாக அமைந்திருந்தது. அப்போது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் தஞ்சைக்கு வருகை தந்தார்கள். அதன்பிறகு இங்கு நடைபெறக்கூடிய மிகவும் பிரமாண்டமான விழாவாக, பெரியகோயில் குடமுழுக்கு பார்க்கப்படுகிறது.

தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயில்

அலங்கார விளக்குகள், வண்ணமயமான ஓவியங்கள், கலை நிகழ்ச்சிகள் என தஞ்சாவூர் நகரம் விழாக்கோலத்தில் காணப்படுகிறது. கடந்த ஒரு வாரமாகவே வெளியூர்களிலிருந்து வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 11,000 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான யாகசாலையைக் காண பக்திப் பரவசத்துடன் மக்கள் குவிகிறார்கள். குறிப்பாக, பிப்ரவரி 1-ம் தேதி சனிக்கிழமை யாகசாலை பூஜை தொடங்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்தநிலையில், பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து, இன்று முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 8 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன.

அடுத்த கட்டுரைக்கு