Published:Updated:

`4.25 கி.மீ தூரம்; படகு சவாரி!' - ரூ.180 கோடியில் புதுப்பொலிவு பெறும் தஞ்சை பெரியகோயில் அகழி

தஞ்சாவூர் பெரியகோயிலைச் சுற்றியுள்ள அகழி ரூ 180 கோடியில் தூர்வாரி புதுப்பிக்கபட உள்ளது. இதனால் அகழி புது பொழிவு பெற இருக்கிறது.

பெரிய கோயில்
பெரிய கோயில் ( ம.அரவிந்த் )

தஞ்சைப் பெரியகோயிலை ஒட்டியுள்ள அகழி மற்றும் அதனை தொடர்ந்து நகர பகுதிக்குள்ளும் செல்லும் அகழி புனரமைக்கப்பட்டு புதுப் பொலிவு பெற இருக்கிறது. அத்துடன் அதில் படகு சவாரியும் விடப்பட உள்ளது. இதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.180 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெரிய கோயில் அகழி
பெரிய கோயில் அகழி

தஞ்சாவூர் பெரியகோயில் உலகப் புகழ்பெற்று விளங்கி வருகிறது. உலகப் பாரம்பர்யச் சின்னங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. தஞ்சை சுற்றுலாத் தலமாக விளங்கி வருவதால் இங்குள்ள பெரியகோயில், அரண்மனை, அருங்காட்சியகம் மற்றும் சரஸ்வதி மஹால் நூலகம் ஆகியவற்றைக் காண இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டினரும் வந்து செல்கின்றனர். குறிப்பாகப் பெரிய கோயிலைக் காண தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் மாமன்னன் ராஜராஜசோழனின் கட்டடக்கலையைப் பார்த்து வியந்து போற்றி செல்கின்றனர்.

Vikatan

இந்த நிலையில் பெரியகோயில் பல இடங்களில் சிதிலமடைந்து வந்தது. இதையடுத்து சிதிலமடைந்த பகுதியை மட்டுமல்லாது கோயில் முழுவதும் புனரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கோயிலில் கும்பாபிஷேம் நடத்துவதற்காகப் புனரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கோயிலைச் சுற்றியுள்ள கருங்கற்களான சுற்றுச்சுவர் பல இடங்களில் இடிந்து விழுந்து வருகிறது. மேலும், கோயிலைச் சுற்றி நான்கு புறமும் உள்ள அகழி புதர் மண்டி உள்ளதுடன் கிட்டதட்ட அகழி இருந்த அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிக் கிடக்கிறது.

பெரிய கோயில் அகழி
பெரிய கோயில் அகழி

இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மத்திய அரசு சுமார் 900 கோடி ஒதுக்கிய நிலையில் தஞ்சாவூர் நகரப் பகுதியில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது மாநகராட்சி நிர்வாகம். குறிப்பாகக் குடிநீர் வசதி, சாலை அழகுபடுத்துதல், பூங்கா பராமரிப்பு, எனப் பல பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு கட்டமாகத் தஞ்சைப் பெரியகோயிலை ஒட்டிச் சுற்றியுள்ள அகழியைத் தூர்வாரிச் சுத்தம் செய்து தண்ணீர் இருக்கும் வகையில் புதுப்பிக்க உள்ளனர். இதற்காக ரூ.180 கோடி ஒதுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Vikatan

இதுகுறித்து மாநகராட்சித் தரப்பில் கூறுகையில், பெரியகோயில் தெற்குச்சுவர் பகுதியை ஒட்டிக் கல்லணை கால்வாய் எனப்படும் காவிரிக் கிளை ஆறு பாய்ந்து செல்கிறது. கோயில் பின்பகுதியில் கல்லணைக்கால்வாயின் கரையில் இருந்து அகழி தொடங்கி வடக்கு மற்றும் கிழக்கு கோயில்பகுதி பெரியகோயிலின் வடக்குப் பகுதி மற்றும் பெரியகோயிலின் முன் பகுதி வரை செல்கிறது. அகழியின் மொத்த தூரம் 4.25 கி.மீ உள்ளது.

பெரிய கோயில்
பெரிய கோயில்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அகழி மன்னர் காலத்தில் இருந்தது போல் புதுப்பிக்கப்படுகிறது. அகழியில் தண்ணீர் நிரம்பி, பெரிய கோயிலைப் பார்த்தால் அதன் அழகு இன்னும் பல மடங்கு கூடும். இதற்குக் கல்லணைக்கால்வாயில் இருந்து தண்ணீர் வரும். 6 மாதத்திற்குத் தண்ணீர் இருப்பது போல் பணிகள் நடைபெறுகிறது. மேலும், இருபுறமும் நடைபாதைகள் அமைக்கப்படுவதுடன் அதில் புல்தரைகள், படித்துறைகள் போன்ற சீரமைப்பு பணிகளும் நடைபெற உள்ளன. அகழி சுத்தம் செய்து புனரமைக்கப்பட்டுப் பிறகு படகு சவாரியும் தொடங்க இருக்கிறது. மொத்தத்தில் பெரிய கோயில் அகழி புதுப்பொலிவு பெற இருக்கிறது. இதனால் தஞ்சாவூரின் பெருமையும் அழகும் இன்னும் பல மடங்கு கூடும்'' என்றனர்.