திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

‘ஆக்கிரமிப்பில் ஆலயச் சொத்துக்கள்!'

நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா

நாரதர் உலா

ழை தூறும் மாலைப்பொழுதில் வந்து சேர்ந்தார் நாரதர். சூடாக வெல்லம் கலந்த சுக்கு பானம் பருகக் கொடுத்தோம். பருகி முடித்து, சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டவர் தகவல்களைப் பகிரத் தொடங்கினார். ``அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் அர்ச்சகர்கள் நியமனம், ராஜேந்திர சோழனின் பிறந்த நாளாகிய ஆடி மாதம் திருவாதிரை நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் எனும் அறிவிப்பு... தமிழக அரசின் அதிரடிகள் தொடர்கிறது கவனித்தீரா?’’

பனங்காட்டீசர்
பனங்காட்டீசர்

``ஆமாம்... அறிவிப்புகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி?’’

``ஒருபுறம் பாராட்டுகள் குவிந்தாலும் சர்ச்சைகளும் தொடர்கின்றன. அர்ச்சகர்கள் நியமனம் குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ள விவரத்தையும் நீர் அறிவீர்தானே...’’

நாம் தலையசைத்து ஆமோதிக்க, நாரதர் தாம் கொண்டுவந்த தகவலைப் பகிரத் தொடங்கினார்.

``மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப் படும் என்ற தமிழக அரசின் உத்தரவு மகிழ்ச்சிக்குரியது. அதேபோல், ராஜேந்திர சோழன் திருப்பணி செய்த ஆலயங் களையும் ராஜேந்திர சோழன் குறித்த வரலாற்றுச் சுவடுகளையும் பாதுகாக்க வேண்டியதும் தமிழக அரசின் பொறுப்பு அல்லவா?’’

மெய்யாம்பிகை
மெய்யாம்பிகை


``எந்தக் கோயிலில் என்ன பிரச்னை?’’

``தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் மானம்பாடி கிராமத்தில் உள்ளது அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில். இங்கு, வேறெங்கும் காண்பதற்கரிய ராஜேந்திரச் சோழனின் கருங்கல் புடைப்புச் சிற்பம் இங்கு உண்டு.

இந்து சமய அறநிலைத்துறை மூலம் திருப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கி, இக்கோயில் முழுவதும் பிரித்தெடுக் கப்பட்டது. ஆனால் தற்போது திருப்பணியில் தொய்வு. சிற்பங்களும் கட்டுமானங்களும் சிதறிக் கிடக்கின்றன.

இந்தத் திருக்கோயில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப் பாட்டிலும், தமிழ்நாடு தொல்லியல் துறையின் பாதுகாக் கப்பட்ட சின்னங்கள் பட்டியலிலும் உள்ளது. இப்போது, இக்கோயிலை யார் திருப்பணி செய்வது என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்தப் பிரச்னையில், ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட பணம் திருப்பி அனுப்பப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

பனங்காட்டீசர் திருக்கோயில்
பனங்காட்டீசர் திருக்கோயில்

பக்தர்கள் தரப்பில் சிலரிடம் பேசினோம். `இந்து சமய அறநிலையத் துறை மூலம் இக்கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்ள முடியாது என்ற நிலையில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைதான் பணிகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பில் உள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல் மூலம், ஒரு மாதத்துக்கு முன்புதான் இந்தக் கோயிலுக்குத் திருப்பணி செய்ய தொல்லியல் துறைக்கு இந்து சமய அறநிலையத்துறை பரிந்துரை செய்துள்ளதாக அறிகிறோம்’ என்கிறார்கள். சம்பந்தப்பட்ட துறையினர், கால விரயம் செய்யாமல் தெய்வாம்சம் பொருந்திய இக்கோயிலில் திருப்பணிகளை நிறைவேற்றி, விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான் ஆன்மிக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.’’

நாரதர் கூறி முடிக்கவும், `‘விழுப்புரம் ராஜேந்திரன் கட்டிய கோயில் ஒன்றின் சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகத் தகவல் என்றீரே...’’ என்று நினைவூட்டினோம்.

`‘ஆம்! விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பனையபுரத்தில் அமைந்துள்ளது புறவார்ப் பனங்காட்டீசர் திருக்கோயில்.

புராதனமான இந்தக் கோயிலின் சொத்துக்கள் பலவும் தனியார் ஆக்கிரமிப் பில் உள்ளனவாம்.

கோயில் எதிரில் பசு மடமாகவும், சுண்ணாம்பு அரவை இடமாகவும் இருந்த இடங்கள், இன்று தனி நபர்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அங்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளனவாம். சுவாமி வீதியுலா வரும் பாதைகளும் ஆக்கிரமிப் புகளால் குறுகிவிட்டன. இக்கோயிலுக்கு விளக்கெரிக்க தரப்பட்ட இரண்டு இலுப்பை தோப்புகளும் ஆக்கிரமிப்புக்கு ஆளாகி விட்டனவாம். மட்டுமன்றி, கோயிலின் மண்டபங்களும் தீர்த்தங்களும் சீர்கெட்டு குடமுழுக்கு நடைபெறாமல் பாழ்பட்டு வருகின்றன. எனவே, அரசு இந்த ஆலயத்தை மீட்டெடுத்துப் புனரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.’’

பேச்சை சற்று நிறுத்தி நீர் பருகி தாக சாந்தி செய்துகொண்ட நாரதர், மீண்டும் தொடர்ந் தார். ``வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை களில் ஆலயங்களில் தரிசனம் செய்வதில் உள்ள கட்டுப்பாடுகளையும் அரசு தளர்த்த வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கை வலுத்து வருகிறது.

அதேபோல், இனி, அறநிலையத் துறைக்கு உட்பட்ட எந்தக் கோயிலில் உழவாரப் பணி செய்வதாக இருந்தாலும் ஆன்லைனில் விண்ணப்பித்து அனுமதி வாங்கவேண்டும் என்று ஆணை வெளியிட்டுள்ளார்களாம்.

`இது அடியார்களின் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் குறைக்கும் செயல். ஆன்லைன் விண்ணப்பம் போன்ற நடைமுறைகள் எளிய வர்களுக்குச் சிரமமான ஒன்று. இதுகுறித்து அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்’ என்கிறார்கள் பக்தர்கள் தரப்பில். அரசு விரை வில் நல்ல பதில் அளிக்கட்டும்’’ என்றபடியே நம்மிடம் விடைபெற்றுக் கொண்டார்.

- உலா தொடரும்...