Published:Updated:

தஞ்சை பெரிய கோயில் திறப்பு: கொரோனா கால விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா?

தஞ்சை பெரியகோயில்
தஞ்சை பெரியகோயில்

பக்தர்கள் சிலர் கோயில் கருவறைக்குள்ளேயே செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். சமூக இடைவெளியும் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை. சாமியைத் தரிசிக்கும் போது, பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் நெருக்கியடித்து கொண்டு நின்றார்கள்.

கொரோனா ஊரடங்கினால் மூடப்பட்ட தஞ்சைப் பெரியகோயில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு இன்று காலை திறக்கப்பட்டது. இதனால் தஞ்சை மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். இன்று காலையிலிருந்தே ஏராளமான பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடனும், பக்திப் பரவசத்துடனும் கோயிலுக்குள் வரத் தொடங்கினார்கள்.

கொரோனா தொற்று பரவமால் தடுக்க, வழிப்பாட்டுத் தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தமிழக அரசு பலவிதமான வழிகாட்டும் நெறிமுறைகளை அறிவித்துள்ள நிலையில், இவை தஞ்சைப் பெரியக்கோயிலில் எந்தளவிற்கு முறையாக கடைப்பிடிக்கப்படுகின்றன?
தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயில்

தமிழர்களின் மிகச் சிறந்த கட்டடக்கலை நுட்பத்திற்கும், கலைநயத்திற்கும் சான்றாக திகழ்வது தஞ்சைப் பெரியகோயில். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த நிலையிலும்கூட இன்றளவும் கம்பீரமாகக் காட்சி அளித்துக்கொண்டிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலமாகவும், வரலாற்றுப் பாரம்பர்யம் மிக்க சின்னமாகவும் இக்கோயில் திகழ்வதால், இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்திருப்பது வழக்கம். இந்நிலையில்தான் கடந்த பிப்ரவரி மாதம் இக்கோயிலின் குடமுழுக்கு விழா, பக்திப் பரவசத்துடனும் மிகுந்த பிரமாண்டமாகவும் நடைபெற்றது. இதனால் இக்கோயிலை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலுடன் உலகம் முழுவதில் இருந்தும் மக்கள் கூட்டம் குவியத் தொடங்கிய நிலையில், கொரோனா அச்சத்தின் காரணமாக மார்ச் 18-ம் தேதி இக்கோயில் மூடப்பட்டது.

ஐந்து மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தஞ்சைப் பெரிய கோயில் திறக்கப்பட்டதால், தஞ்சை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். இன்று காலையில் இருந்தே மக்கள் மிகுந்த ஆவலோடு வரத் தொடங்கினார்கள். தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைப்படி பக்தர்கள் அனைவரும் முகக்கவசத்துடன் வந்திருந்தார்கள். கோயிலின் வாயிலில், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்ப்பட்டது. சானிடைசரால் கைகளைக் கழுவ வேண்டும் என்பதும் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டது. கோயிலுக்குள் வரும் பக்தர்களின் பெயர், முகவரி, செல்போன் நம்பர் உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டன. கைப்பைகள் பரிசோதிக்கப்பட்டன. லேப்-டாப் வைத்திருப்பவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தஞ்சைப் பெரியகோயில்
தஞ்சைப் பெரியகோயில்

தேங்காய், பழம், மாலைகள் கொண்டு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. அர்ச்சகர்கள் நேரடியாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால், கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதிமுறை பின்பற்றப்படவில்லை. பக்தர்கள் சிலர் கோயில் கருவறைக்குள்ளேயே செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். சமூக இடைவெளியும் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை. சாமியைத் தரிசிக்கும்போது, பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் நெருக்கியடித்துக் கொண்டு நின்றார்கள்.

இவற்றைக் கண்காணிக்கவும், சரி செய்யவும் கோயிலின் உள்ளே போதுமான அளவுக்கு ஊழியர்களோ, காவல்துறையினரோ இல்லாதது பெரும் குறை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். தஞ்சை மக்களின் ஏக்கத்தைப் போக்கும் விதமாக இக்கோயில் மீண்டும் திறக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். ஆனால் அதேசமயம், பொதுமக்களின் நலன் கருதி, கொரோனா விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியமானது. விதிமுறைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு