Published:Updated:

`பெருவுடையாரே...!'- விண்ணதிர கோஷங்கள் முழங்க நடைபெற்ற பெரிய கோயில் குடமுழுக்கு

பெரிய கோயில்
பெரிய கோயில்

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து வானுயுயர்ந்த விமான கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. உலகப் பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றாக திகழும் இக்கோயில் தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் உலகப் புகழ் பெற்று விளங்கி வருகிறது. சோழர்களின் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் இருந்துவரும் இக்கோயிலின் கட்டுமானத்தை எண்ணி உலக மக்கள் அனைவரும் அதிசயித்து வியந்து வருகின்றனர். இத்தகைய சிறப்புமிக்க பெரிய கோயில் குடமுழுக்கு 1997-ம் ஆண்டு நடைபெற்றது.

`பெருவுடையாரே...!'-  விண்ணதிர கோஷங்கள் முழங்க நடைபெற்ற பெரிய கோயில் குடமுழுக்கு

அதன்பிறகு கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும் என ஆன்மிக ஆர்வலர்கள், பெரிய கோயிலின் மீது பெரும் மதிப்பு கொண்டவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தனர். அதன்படி 23 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் விமரிசையாக லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.

விழா கோலம் பூண்ட தஞ்சை... பெரியகோவில் குடமுழுக்கு விழா! #TanjoreTemple ஆயிரம் ஆண்டு அதிசயம்... தஞ்சைப் பெரியகோயில் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்! http://bit.ly/2tqCIvU

Posted by Vikatan EMagazine on Tuesday, February 4, 2020

இதற்காக தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டதுடன், பாதுகாப்பு கருதி காவல்துறை கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டு வரப்பட்டது. 110 யாக குண்டங்களுடன் 11,900 சதுர பரப்பளவில் கோயிலுக்கு வெளியே வலதுபுறத்தில் அமைக்கப்பட்ட யாகசாலை பந்தலில் கடந்த 1-ம் தேதி குடமுழுக்கிற்கான யாக பூஜை நடைபெற்றன. 8 காலங்களாக நடைபெற்ற இந்த யாகத்தில் சுமார் 300 சிவாச்சார்யர்கள், தமிழ் ஓதுவார்கள் 80 பேர் கலந்துகொண்டனர். 2,600 கிலோ எடை கொண்ட 124 வகையான மூலிகைப் பொருள்கள் இந்த யாக பூஜைக்குப் பயன்படுத்தப்பட்டன.

`பெருவுடையாரே...!'-  விண்ணதிர கோஷங்கள் முழங்க நடைபெற்ற பெரிய கோயில் குடமுழுக்கு

இந்த நிலையில், குடமுழுக்கு தினமான இன்று அதிகாலை முதலே பக்தர்கள் வரத்தொடங்கினர். கோயிலுக்கு உட்பகுதியில் பெயரளவுக்கு மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், வி.ஐ.பி, வி.வி.ஐ.பிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அவர்களுக்கு என தனி இடம் ஒதுக்கப்பட்டு அமரவைக்கப் பட்டனர் என பக்தர்கள் புலம்பியதையும் கேட்க முடிந்தது.

இதையடுத்து மேள தாளங்கள் முழங்க, மலர்கள் தூவ கோபுர கலசங்களுக்கு ஊற்றப்படும் புனித நீரை சரியாக 7.45 மணிக்கு யாகசாலைப் பந்தலில் இருந்து சிவாச்சார்யர்கள் கோயிலுக்குள் எடுத்து வந்தனர். பின்னர் 216 அடி உயரம் கொண்ட பெருமைமிகு விமான கோபுரத்தின் மீது சிவாச்சார்யர்கள் புனித நீருடன் காலை 8.10 மணிக்கெல்லாம் ஏறிவிட்டனர்.

`பெருவுடையாரே...!'-  விண்ணதிர கோஷங்கள் முழங்க நடைபெற்ற பெரிய கோயில் குடமுழுக்கு

அதன் பிறகு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு விமான கோபுரம் உட்பட அனைத்துக் கோபுரங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் பெருவுடையாரே என்றும் சிவ சிவ என்றும் விண் அதிர கோஷங்கள் எழுப்பினர்.

`பெருவுடையாரே...!'-  விண்ணதிர கோஷங்கள் முழங்க நடைபெற்ற பெரிய கோயில் குடமுழுக்கு

குடமுழுக்கு விழாவுக்காக கலெக்டர் கோவிந்த ராவ் மேற்பார்வையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. லட்சக்கணக்கான பொதுமக்கள், ஆன்மிக ஆர்வலர்கள் என பலர் இதில் கலந்துகொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு