Published:Updated:

திருச்செந்தூர்: 5 மாதத்திற்குப் பின் திறக்கப்பட்ட கோயில்... முதல் நாள் எப்படி இருந்தது?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

ஐந்து மாதங்களுக்குப் பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், ஆர்வத்துடன் அதிகாலை முதலே கோயில் வளாகத்தில் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள்.

கொரோனா வைரஸ் பரவல் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில் அரசு பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது. அதில், இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் குறிப்பிட்ட சில நெறிமுறைகளுடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்திட அனுமதி அளித்துள்ளது.

வரிசையில் நின்ற பக்தர்கள்
வரிசையில் நின்ற பக்தர்கள்

தமிழகத்தின் பிரசித்திபெற்ற பல கோயில்களிலும் அரசின் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் கடற்கரைத் தலமும் ஆனது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். சாதாரண நாள்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விசேஷ, திருவிழா நாள்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்வது வழக்கம்.

கடந்த 5 மாதமாக கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பதால் திருக்கோயில் வளாகம், கடற்கரை ஆகியவை வெறிச்சோடியேக் காணப்பட்டன. இன்று அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காகத் திருச்செந்தூரில் குவிந்தனர். நாள் ஒன்றுக்கு இரண்டாயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச தரிசனமும், 100 ரூபாய் கட்டண வழி தரிசனத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு வெப்பநிலை கண்டறிதல்
பக்தர்களுக்கு வெப்பநிலை கண்டறிதல்

10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் போன்றோர் அனுமதிக்கப்படவில்லை. கோயிலுக்கு தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் முடிக்காணிக்கை மண்டபத்திற்கு எதிரே உள்ள இடத்திலும், கலையரங்கத்தின் அருகிலும் அமர வைக்கப்பட்டனர். அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு 25 நபர்களாக அழைத்துச் செல்லப்பட்டனர். கோயிலின் முன்புற வாசலுக்கு அருகில் பக்தர்களின் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, உடலின் வெப்பநிலை சோதனை செய்யும் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே கோயிலுக்குள் 6 அடி சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர்.

திருக்கோயிலில் சுப்பிரமணியர் மற்றும் சண்முகர் சந்நிதியில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பிராகாரத்தில் உள்ள பிற சந்நிதிகளுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் சண்முகா அர்ச்சனை, அபிஷேகம் செய்தல், பூஜை பொருட்கள் எடுத்து வருதலுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. கடலில் நீராடுதல், நாழிக்கிணற்றில் நீராடுதல், முடிகாணிக்கை செலுத்துதல் காதுகுத்துதல் ஆகியவற்றிற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

கோயில் வளாகம்
கோயில் வளாகம்

திருக்கோயிலின் மூலம் தினமும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம், அன்னதானக்கூடத்தில் பக்தர்கள் அமர வைக்கப்பட்டு பரிமாறப்படாமல் பொட்டலங்களாகவே வழங்கப்பட்டன. இதுகுறித்து பக்தர்கள் சிலரிடம் பேசினோம், “கொரோனாவால் வாழ்வாதாரம் முடங்கியதுடன் கோயில்களில் பக்தர்களின் தரிசனமும் நடைபெறவில்லை. வாரந்தோறும் திருச்செந்தூருக்கு வந்து எம்பெருமான் முருகனை தரிசனம் செய்துவிட்டுச் செல்வோம்.

தஞ்சை பெரிய கோயில் திறப்பு: கொரோனா கால விதிமுறைகள் 
கடைப்பிடிக்கப்படுகிறதா?

கொரோனா ஊரடங்கு நாள்களில் திருச்செந்தூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள பாலத்தின் அருகில் நின்று கோபுர தரிசனம் செய்து விட்டுச் சென்றோம். கோயில்களில் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதாகச் செய்தி கேள்விப்பட்டதுமே மிகுந்த சந்தோஷம் அடைந்தோம். கடந்த 5 மாதங்களாக முருகனைத் தரிசிக்க முடியாமல் தவித்து வந்த நிலையில் இன்று எம்பெருமானின் முகத்தைப் பார்த்து மிகுந்த சந்தோஷம் அடைந்தோம்” என்றனர்.

வெறிச்சோடிய கடற்கரை
வெறிச்சோடிய கடற்கரை

திருக்கோயிலைச் சுற்றியுள்ள கடைவீதிகளைச் சேர்ந்த வியாபாரிகள், ”தேங்காய், பழம், பிரசாதப் பொருட்கள், பூமாலை, ஹோட்டல்கள் ஆகியவற்றின் விற்பனை முழுமையாக பக்தர்களை நம்பியே இருந்தது. கோயில்கள் மூடப்பட்ட நிலையில் எங்களின் வாழ்வாதாரமும் அடியோடு பாதிக்கப்பட்டது. தற்போது கோயில் திறக்கப்பட்டதால் ஓரளவு வியாபாரமும் களைகட்டியுள்ளது” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு