Published:Updated:

திருக்கோயில் திருவுலா: நற்றுணையாவது நமச்சிவாயமே!

திருக்கோயில் திருவுலா
பிரீமியம் ஸ்டோரி
திருக்கோயில் திருவுலா

திருப்பட்டூர் காசிவிஸ்வநாதர் தரிசனம்!

திருக்கோயில் திருவுலா: நற்றுணையாவது நமச்சிவாயமே!

திருப்பட்டூர் காசிவிஸ்வநாதர் தரிசனம்!

Published:Updated:
திருக்கோயில் திருவுலா
பிரீமியம் ஸ்டோரி
திருக்கோயில் திருவுலா

பாவ விமோசனம் வேண்டி நான்முகன் தவமிருக்க, ஈசன் மனம் இரங்கவில்லை. ஆனால் இறைவியோ பிரம்மனுக்கு அருள்செய்ய திருவுளம் கொண்டாள். அரூபமாக பிரம்மனுக்கு ஆலோசனை தந்து வழிநடத்தினாள். சக்தியின் திருவுளப்படி சோடஷ லிங்கம் ஒன்றை உருவாக்கி வழிபட ஆரம்பித்தார் பிரம்மன்.

திருப்பட்டூர்
திருப்பட்டூர்
திருப்பட்டூர் காசிவிஸ்வநாதர்
திருப்பட்டூர் காசிவிஸ்வநாதர்


அத்துடன் 12 விசேஷ சிவலிங்கத் திருமேனிகளையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் நான்முகன். எளியோருக்கு எளியோனான ஈசன், நான்முகன் வழிபாட்டுக்கு இரங்கினார். பஞ்சமுக மூர்த்தியாக விண்ணும் மண்ணும் நிறைந்திருக்கும் வண்ணம் காட்சி அளித்தார். அப்போதுதான் பிரம்மனுக்குச் சாப விமோசனமும் எளிதில் யாருக்கும் கிட்டாத அந்த வரமும் கிடைத்தன.

‘படைப்பின் நாயகனான பிரம்மனே, மகிழ்ச்சி! பூவுலகின் தலைசிறந்த தலமாக விளங்கப் போகும் இந்த பூர்வபுரியில், நீ என்னை வழிபட்டு உன் தலைவிதியை மாற்றிக்கொண்டதைப் போல, இங்கு வந்து என்னை வணங்கும் பக்தர்களின் துயர் மிகுந்த தலையெழுத்தையும் மங்கலகரமாக மாற்றுவாயாக’ என்று வாழ்த்தி மறைந்தார்!

அற்புதமான இந்தப் புராணத்தை நெஞ்சில் ஏந்திய வண்ணம், பிரம்மன் உருவாக்கி தவமிருந்த தலத்துக்கு வியாக்ரபாதரும் பதஞ்சலியும் வந்தார்கள். ஈசன் உரைத்த சிறப்பு மிக்க தலம் இதுதான் என்று உணர்ந்து இருவரும் தனித்தனியே தவமிருக்க தொடங்கினர்.

புராணங்கள் தொடர்ந்து வரும்... எத்தனை முறை எத்தனை விதமாகச் சொன்னாலும் திருப்பட்டூரின் பெருமைகளை அறிந்து கொள்ள நீங்களும் ஆவலாக இருப்பீர்கள் என அறிவோம். இப்போது நாம் திருப்பட்டூரின் பெருமைமிகு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருக்கிறோம். அந்த அனுபவத்தை உணர்ந்து கொள்ளலாமா!

திருப்பட்டூர் வரும் அன்பர்கள் அநேகம்பேர் பிரம்மபுரீஸ்வரை தரிசனம் செய்துவிட்டு அப்படியே திரும்பிவிடுகிறார்கள். சிலர் மட்டுமே பிரம்மபுரீஸ்வரர் கோயிலிலிருந்து நடைபயண தூரத்தில் இருக்கும் பெருமை வாய்ந்த காசிவிஸ்வநாதர் ஆலயத்துக்கும் வந்து முழுப் பலன்களையும் பெறுகிறார்கள்.

காசிக்குச் செல்ல முடியாத பலரும் இங்கு வந்து வழிபட்டு காசி தரிசனத்துக்கு நிகரான புண்ணியங்களைப் பெறுகிறார்கள். நீங்களும் இந்த ஆலயத்துக்கு வந்து வியாக்ரபாதர் தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டு, விஸ்வநாதரையும் அன்னை விசாலாட்சியையும் அவசியம் தரிசிக்க வேண்டும்.

அத்துடன் யோக, சூட்சுமக் கலைகளின் பிதாமகரான வியாக்ரபாதரின் அதிஷ்டானம் அருகில் அமர்ந்து கண்மூடி பிரார்த்திக்க, மன நிம்மதியும் தெளிவும் பெறுவீர்கள் என்பது கண்கூடு. ஆம், அங்கிருப்பவர்கள் இதை சத்திய சாட்சியாகவே நம்மிடம் கூறினார்கள்.

பெயர் சொல்ல விரும்பாத அன்பர் ஒருவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட அனுபவம் இது.

திருக்கோயில் திருவுலா: நற்றுணையாவது நமச்சிவாயமே!

‘திருச்சியில் நல்ல பணியில் இருக்கிறேன். இந்த காசிவிஸ்வநாதர் ஆலயத்துக்கு தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக வந்து கொண் டிருக்கிறேன். அதீத அதிர்வும் சாந்நித்தியமும் கொண்டது, வியாக்ரபாதர் அதிஷ்டானம். அவரை மனத்தால் வணங்கி, தியானத்தில் அமரும்போதெல்லாம், வியாக்ரபாதர் இங்கே இன்னும் சூட்சும உருவத்தில் இருப்பதாகவே உணர்கிறேன்.

அவலமான என் வாழக்கையை முற்றிலுமாய் மாற்றி, துன்பங்களை எல்லாம் துடைத்தெறிந்து, என்னை மேம்பட வைத்தவர் இந்த யோகி. வாழவே தகுதியில்லாத நிலைக்கு நான் சென்று கொண்டிருந்தேன். மனைவி, இரண்டு பிள்ளைகள் இருந்தும் மனம் போன போக்கில் திரிந்து மது அருந்துவதும், சீட்டாட்டம் ஆடுவதுமாக என் வாழ்க்கையைத் தொலைத்து வந்தேன். என் குடும்பம் மாமனார் வீட்டு உதவியை எதிர்பார்த்து வாழ, நான் கடன் வாங்குவதும், ஏமாற்றித் திரிவதுமாக கேவல மான வாழக்கையை நடத்தி வந்தேன்.

மனைவியும் பிள்ளைகளும் ஒரு நிலையில் பொறுக்க முடியாமல் மாமனார் வீட்டுக்கே போய்விட்டார்கள். தனியனாக, கவனிக்கவும் ஆள் இன்றி நாயினும் கீழாக திரிந்து வந்தேன்.

‘இவன் வாழ்க்கையே அவ்வளவுதான் என்று எல்லோரும் கை கழுவி விட்டார்கள். ஆனால் எப்போதோ; எங்கோ என் முன்னோர் செய்த தவம்-தானம் கைவிடவில்லை போலும். தெருவில் விழுந்து கிடந்த என்னை என் நண்பன் தூக்கி வந்து ஆதரித்தான்.

தலைவிதி இருந்தால் மட்டுமே வர முடிந்த இந்தத் திருப்பட்டூருக்கு அழைத்து வந்தான். மனமில்லாமல்தான் வந்தேன். தரிசனங்களை முடித்துவிட்டு வியாக்ரபாதர் அதிஷ்டானம் அருகில் அமர்ந்து தியானிக்க முயன்றேன்.

அப்போதும் மதுவைப் பற்றியே மனம் நினைத்தது. ஊருக்குச் சென்றதும் நண்பனிடம் ஏதாவது பொய் சொல்லி பணம் வாங்க வேண்டும் என்று வழக்கம்போல் மனம் திட்டம் போட்டது!

ஆனால் அனைத்தும் சில நொடிகள்தான்...மூடியிருந்த கண்ணுக்குள் ஏதேதோ வண்ணங்கள் தென்பட்டன. ஆழ்ந்த மனநிலைக்கு அந்த வண்ணங்கள் கொண்டு சென்றன. பிறகு என்ன நடந்தது ஒன்றும் தெரியவில்லை.

கொஞ்ச நேரம் கழித்து நண்பன் என்னைத் தட்டி எழுப்பி ஊருக்குக் கூட்டிச் சென்றான். அதன் பிறகு இன்று வரை நான் தீய வழி எதற்கும் சென்றதில்லை. குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்கிறேன். சமூகத்தில் நல்ல பெயரையும் மீட்டுக்கொண்டேன். குறையில்லாத வாழக்கை தொடர்கிறது. எந்த பரிகார பூஜையும் செய்ய வில்லை. இதை கொடுக்கிறேன், அதை கொடுக்கிறேன் என்று எந்த வேண்டுதலும் வைக்க வில்லை. ஏன்... `என்னை சரியாக்கு' என்றுகூட வேண்டவில்லை.

ஏதோ ஒரு சக்தி என்னை முழுவதுமாக மாற்றி விட்டது. பெரும் வெள்ளம் வந்து அசுத்தங்களை எல்லாம் அடித்துக் கொண்டு போவது போல எல்லாம் மாறிவிட்டன. இன்றுவரை என்ன நடந்தது, எப்படி நடந்தது இந்த மாற்றம் என்று ஒன்றும் புரியவில்லை. ஆனால் இந்தச் சித்த புருஷர் என்னைத் தொடர்ந்து வழிநடத்துகிறார் என்பது மட்டும் புரிகிறது.

ஆயுசு இருக்கும்வரை இங்கு வருவேன். எனக்கு எப்போதும் நற்றுணையாக இருப்பது இந்தச் சிவமே. என் குடும்பத்தையே மீட்டுக் கொடுத்த மகா சக்திக்கு இதுதான் என்னால் முடிந்த நன்றி!’ என்று திணறி திணறி உணர்ச்சிப் பெருக்கோடு கூறி முடித்தார் அந்தப் பக்தர்.

அதில் துளியளவும் பொய்யில்லை என்று அறிந்ததும் உறைந்து போனோம். மேலும் அங்கிருந்த வேறுசிலரின் அனுபவங்களைக் கேட்டும் மெய்சிலிர்த்தோம்.

ஒன்றுமே இல்லாத விஷயத்தில் ஆழ்ந்த நம்பிக்கை வராது. சூட்சும சக்திகள் உலவாத இடத்தில் கூட்டமும் குவியாது என்பது ஆன்மிகம் சொல்லும் தத்துவம். திருப்பட்டூரும் அப்படித்தான்... அதிலும் இந்த காசி விஸ்வநாதர், அமர்ந்த இடத்தில் இருந்தே சகலரையும் ஆட்டுவிக்கும் அருள்பெரும் ஜோதி என்று உணர்ந்தோம்!

- உலா தொடரும்...

மகிமைமிகு பிள்ளையார்!

பிள்ளையார்
பிள்ளையார்


தேசியகவி பாரதியார் பாடிய தெய்விகப் பதிகம் விநாயகர் நான்மணி மாலை. புதுவை மணக்குள விநாயகரைப் போற்றும் அந்தப் பதிகத்தில், `மண் மீதுள்ள மக்கள், விலங்குகள், பூச்சிகள் யாவும் இடும்பை தீர்ந்து இன்பமாய் வாழ’ என்று பாடுகிறார்.

அனைத்து வகை ஜீவராசிகளும் நலமுற விநாயகரே அருள்புரிவார்.

எப்படி என்கிறீர்களா?

அவருடைய திருவடிவத்தை ஊன்றிக் கவனித்தால் உண்மை புரியும். விநாயகரின் தலை- யானைத் தலை. அது, மிருகக் கூறு. ஏக தந்தம் உடைய பக்கம் ஆண்; தந்தம் இல்லாத பக்கம் பெண் (பெண் யானைக்கு தந்தம் கிடையாது). ஐந்து திருக்கரங்கள் - தெய்வ லட்சணம். குறுகிய கால்களும், பெருத்த வயிறும்- பூத அம்சம்.

எனவே எல்லாமுமாகி கலந்து நிறைந்தவர் பிள்ளையார். பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர் திணையாய், அஃறிணையாய் தோற்றம் அருள்பவர் விநாயகர்.

அவரை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும்.

- மதி, சென்னை-44

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism