முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விஷேச நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர்.
கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம் போன்ற முக்கிய விரத நாள்களில் லட்சக் கணக்கான பக்தர்களும் திருச்செந்தூரில் குவிகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வருகை தருகிறார்கள்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம், ’ஆனி வருஷாபிஷேகம்’ நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு வருஷாபிஷேகம் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட கும்பங்கள், விமானத் தளத்திற்கு எடுத்து வரப்பட்டு வருஷாபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட கும்பங்கள், விமானத் தளத்திற்கு எடுத்து வரப்பட்டு வருஷாபிஷேகம் செய்யப்பட்டது. முதலில் மூலவர் சுப்பிரமணியர், வள்ளி- தெய்வானை சந்நிதிகளின் விமானக் கலசங்களுக்கு போத்திகளும், சண்முகர் விமானக் கலசத்திற்கு சிவாச்சார்யரும், பெருமாள் விமானக் கலசங்களுக்கு பட்டாச்சார்யர்களும் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பின்னர் மூலவர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது.

கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டாக பக்தர்கள் கலந்து கொள்ளாத நிலையில், இந்த ஆண்டு ஆனி வருஷாபிஷேகம் சிறப்பாக நடந்தது. இக்கோயிலுக்கு பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வதால், பக்தர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.
இங்கு முன்பு பொதுதரிசனம் தவிர ரூ.20, ரூ.100, ரூ.250 ஆகிய கட்டண தரிசன வரிசைகள் இருந்தன. இந்த நிலையில், கடந்த மார்ச் 9-ம் தேதியில் இருந்து சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையின் உத்தரவின்படி, இலவச தரிசன வரிசை மற்றும் ரூ.100 கட்டண தரிசன வரிசை ஆகிய இரண்டு வரிசைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பக்தர்கள் 5 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர். இதில், கைக்குழந்தைகள், சிறுகுழந்தைகளுடன் வருபவர்கள், முதியவர்கள், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டோர் உள்ளிட்டோர் மிகவும் சிரமப்பட்டனர்.

சுவாமி தரிசனத்திற்காக நின்ற நீண்ட வரிசையைப் பார்த்துவிட்டுப் பலரும் சுவாமி தரிசனம் செய்யாமலேயே வாசலில் நின்றும், ராஜகோபுரத்தை நோக்கியும் கும்பிட்டுவிட்டு ஊர்களுக்குத் திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சர் சேகர்பாபு, இக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டபோது பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் ஏற்படும் சிரமத்தை எடுத்துக் கூறினார்கள்.
இதனையடுத்து 60 வயதைக் கடந்த முதியவர்கள் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்ல தனிப்பாதை அமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. கொடிமரம் அருகில் உள்ள சண்முகவிலாச மண்டபத்தில் துலாபாரம் வாசலின் அருகில் முதியவர்கள் சுவாமி தரிசனத்திற்காக தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டு தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு முதியவர்கள் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தனி தரிசனப்பாதை இன்று முதல் பக்தர்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 60 வயதினைக் கடந்த முதியவர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் அசல் அட்டையைக் கண்காணிப்பாளரிடம் காட்டிவிட்டு இந்தப் பாதையில் தரிசனத்திற்காகச் செல்லலாம்.
முதியவருடன் உதவிக்கு ஆள் தேவை என்றால், உடன் ஒருவரை மட்டும் அழைத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போல, மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி தகவல் மையத்தில் சக்கர நாற்காலி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருக்கோயிலின் வடக்கு வாசல் வழியாக மாற்றுத்திறனாளிகளுக்கு என அமைக்கப்பட்டுள்ள மரப்பலகையினாலான ரேம்ப் வழியாக பக்தர்கள் வெளியேறும் வழியில் சண்முகர் சந்நிதி வழியாகக் கட்டணமின்றி நேரடியாகச் சென்று மூலவரை தரிசனம் செய்யும் வசதியும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதே போல, வள்ளிகுகைக்குள் சென்று வள்ளி அம்பிகையை தரிசனம் செய்வதற்கும், நாழிக்கிணறு சென்று குளிப்பதற்கும் கட்டணம் ரத்து செய்யப்பட்டு இன்று முதல் பக்தர்கள் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள திருக்கோயில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, பக்தர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.