சிறப்புகள் வாய்ந்த திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயில் தெப்போற்சவ விழா! #Tirupati

சிறப்பு வாய்ந்த கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் ஏழுநாள்கள் நடைபெறும் தெப்போற்சவம் திருவிழா சீரும் சிறப்புடன் நடந்து முடிந்தது.
திருப்பதி ரயில் நிலையத்துக்கு அருகிலிருக்கிறது கோவிந்தராஜ பெருமாள் கோயில். உடையவர் என்றழைக்கப்படும் ராமாநுஜர் திருப்பதியில் தங்கியிருந்தபோது, திருவரங்கம் போன்றே இருக்கும் வகையில் இந்தக் கோயிலை ஸ்தாபித்தார்.

இங்குள்ள கோவிந்தராஜப் பெருமாளை `பெரிய அண்ணா', என்றும் `பெத்த பெருமாள்' என்றும் அழைப்பார்கள். திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வரவு-செலவுகள் யாவும் இவரின் மேற்பார்வையில் நடப்பதாக ஐதிகம்.
பொதுவாக, அந்தக் காலத்தில் திருமலைக்கு வருகிறவர்கள் கீழ்த்திருப்பதியில் தங்கி, அலர்மேலு மங்காபுரம், கோவிந்தராஜ பெருமாள் கோயில், சீனிவாசமங்காபுரம் ஆகிய கோயில்களையெல்லாம் தரிசித்த பிறகே மலைக்குச்செல்வார்கள்.

திருமலையில் நடப்பது போன்றே இங்கும் பிரம்மோற்சவம், தெப்போற்சவம் ஆகிய விழாக்கள் நடைபெறுகின்றன. இத்தனை சிறப்பு வாய்ந்த கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் ஏழுநாள்கள் நடைபெறும் தெப்போற்சவத் திருவிழா சீரும் சிறப்புடன் நடந்து முடிந்தது.

தெப்போற்சவ விழாவையொட்டி கோவிந்தராஜப் பெருமாள் கோயில்குளம் சிறப்பான முறையில் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தினமும் விதவிதமான அலங்காரங்களுடன் பெருமாள் சேவை சாதித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.