Election bannerElection banner
Published:Updated:

கொரோனா: `டிரை ஓஸோன் ஸ்பிரே!’ -திருப்பதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி

கோயிலையொட்டியுள்ள காம்ப்ளெக்ஸ் பகுதியில் இருந்து கோயிலுக்குள் செல்லும் இடம்வரையிலும் பணியாளர்கள் பயோ மெட்ரிக் வைக்கும் இடத்திலிருந்து கோயிலுக்குள் செல்லும் வழிகளிலும் இந்த டிரை ஓஸோன் ஸ்பிரே செய்யப்படுகிறது.

கடந்த வாரம் திருமலை திருப்பதியில் பணிபுரியும் ஊழியர்கள் 50 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டதையொட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தானம் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளது. 

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த வழிபாட்டுத் தலங்கள் அனைத்தையும் மத்திய அரசு ஜூன் 8 முதல் திறக்க அனுமதியளித்தது. இதையொட்டி திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஜூன் 10 முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்தது. கொரோனா பரவலைத் தடுக்க தேவஸ்தானத்தின் சார்பில், தெர்மல் பரிசோதனை, சானிடைஸர் பயன்பாடு, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றை மிகவும் தீவிரமாகப் பின்பற்றியதோடு வெப்பநிலை மாறுபாடு மற்றும் பிற அறிகுறிகள் உள்ளவர்களுக்கு கோவிட் பரிசோதனையும் செய்து வந்தது.

டிரை ஓஸோன் ஸ்பிரே
டிரை ஓஸோன் ஸ்பிரே
TTD_PHOTO

இந்நிலையில் கடந்தவாரம் ஊழியர்கள் ஒருசிலருக்கு உடல் நலக்கோளாறும் நோய் அறிகுறிகளும் தென்பட உடனே அவர்களைத் தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொண்டது. இதில் பாதுகாப்புப் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பிற துறை சார்ந்த ஊழியர்கள் 50 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. கோயிலில் பக்தர்கள் வந்துபோகும் பகுதிகள், லட்டு கவுன்ட்டர், அன்னதானம் நடைபெறும் இடம் ஆகியன சானிடைஸ் செய்யப்பட்டன. மேலும், கூடுதல் பாதுகாப்பாக  டிரை ஓஸோன் ஸ்பிரேயிங் சிஸ்டத்தைத் தற்போது நிறுவியுள்ளது.

`தமிழக பக்தர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்!’ - 79 நாள்களுக்குப் பிறகு காட்சி தந்தார் திருப்பதி ஏழுமலையான்

டிரை ஓஸோன் ஸ்பிரேயிங்:

கோயிலையொட்டியுள்ள காம்ப்ளெக்ஸ் பகுதியில் இருந்து கோயிலுக்குள் செல்லும் இடம்வரையிலும் பணியாளர்கள் பயோ மெட்ரிக் வைக்கும் இடத்திலிருந்து கோயிலுக்குள் செல்லும் வழிகளிலும் இந்த டிரை ஓஸோன் ஸ்பிரே செய்யப்படுகிறது. இது ஹைட்ராக்ஸி ரேடிகல் ஐயன் (hydroxyl radical ions) என்னும் கிருமிநாசினி கெமிக்கலை பனி வடிவில் ஸ்பிரே செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பனிபோல பீய்ச்சியடிக்கப்படும் இந்த ஸ்பிரே நுண்கிருமிகளைக் கொல்லும் என்கிறார்கள். இதன்மூலம் கோயில் சுற்றுப்பகுதியில் கொரோனா தொற்றைத் தடைசெய்ய முடியும் என்கிறார்கள் அதிகாரிகள்.

டிரை ஓஸோன் ஸ்பிரே
டிரை ஓஸோன் ஸ்பிரே
TTD_PHOTO

ஸ்ரீ சுந்தரராஜ சுவாமி அவதாரோத்சவம்

தற்போது நிலவும் அசாதாரண சூழல் விரைவில் அகல வேண்டும் என்று நேற்று திருமலை கோயிலுக்கு எதிரேயுள்ள நாத நிரஞ்சனம் அரங்கில் சுந்தரகாண்ட பாராயணம் நடைபெற்றது. இதில் 108 வேத விற்பனர்கள் கலந்துகொண்டு சுந்தரகாண்ட பாராயணம் செய்தனர். இதில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஏ.வி. தர்ம ரெட்டி கலந்துகொண்டார். 

மேலும், வரும் ஜூலை 9 முதல் 11 ம் தேதி வரை திருச்சானூர் பத்மாவதி தாயார் திருக்கோயிலில் ஸ்ரீ சுந்தரராஜ சுவாமி அவதாரோத்சவம் நடைபெற இருக்கிறது. இந்த வைபவம் நடைபெறும் மூன்றுநாள்களும் உற்சவ மூர்த்திகள் ஸ்ரீ கிருஷ்ண முக மண்டபத்தில் எழுந்தருள்வர். அங்கு ஸ்நபன திருமஞ்சனமும் ஊஞ்சல் சேவையும் நடைபெறும். இந்த உற்சவ காலத்திலும் கோவிட் கட்டுப்பாடுகள் மிகவும் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு