Published:Updated:

` முன்னறிவிப்பில்லாத மேம்பாலப்பணி' - அத்திவரதர் தரிசனத்தில் அலைக்கழிக்கப்பட்ட பக்தர்கள்!

பக்தர்கள் கூட்டம்
News
பக்தர்கள் கூட்டம்

அத்திவரதர் தரிசனத்தில் கடந்த சில நாள்களாகவே கட்டுக்கடங்காத கூட்டம் இருந்துவருகிறது. அதிகாலையிலேயே அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு வேலைக்குச் சென்றுவிடலாம் என்று பக்தர்கள் வந்தனர். ஆனால், மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்றதால் 12 மணி நேரம் காக்க வைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

அத்திவரதர் வைபவத்தில் கடந்த 7 -ம் தேதி வி.ஐ.பி-க்கள் செல்லும் பாதையில் ஸ்பீக்கருக்குச் செல்லும் மின்கம்பி அறுந்து விழுந்ததில் சிலருக்கு ஷாக் அடித்தது. இதனால் பக்தர்கள் அலறியடித்து ஓடினார்கள். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 15-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து வி.ஐ.பி மற்றும் வி.வி.ஐ.பி தரிசன வழியில் ஒரு கிலோ மீட்டர் அளவுக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டது. இரவு முழுவதும் செல்போனின் டார்ச் வெளிச்சத்தைப் பயன்படுத்தியே பக்தர்கள் தெருக்களிலும் வரிசையிலும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஜெனரேட்டர் வசதியைச் செய்யாததால் பக்தர்கள் பெறும் சிரமத்தை சந்திக்க நேர்ந்தது.

பாலம் அமைக்கும் பணி
பாலம் அமைக்கும் பணி

நேற்று அதிகாலை 4 மணியில் இருந்தே தரிசனத்துக்கு பக்தர்கள் வரத் தொடங்கினார்கள். `உள்ளே வெல்டிங் வொர்க் நடைபெறுகிறது. ஒரு மணி நேரம் தாமதமாகும்' என காவல்துறையினர் அப்போது அறிவித்திருந்தனர். 7 மணியளவில், ` திரும்பவும் ஒரு மணி நேரம் ஆகும்' எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். இப்படியே அதிகாலையில் இருந்து மதியம் ஒரு மணிவரை காவல்துறையினர் தெரிவித்துக்கொண்டே இருந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உயர்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள், உயர் பதவிகளில் இருப்பவர்கள், திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு துறைகளின் முக்கியப் பிரமுகர்களும் வி.வி.ஐ.பி வரிசையில் காத்துக்கிடந்தனர். ஒரு சில வி.வி.ஐ.பி-க்கள் அருகில் உள்ள வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். `அதிகாலை 5 மணிக்கே தரிசனத்தை முடித்துவிடலாம்' என்று வந்தவர்களுக்கு நேற்றைய தினம் பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது. அறிவிக்கப்படாத இந்த மேம்பாலப் பணியால் பொது தரிசனத்தில் காத்திருந்த பக்தர்களின் நிலை இன்னும் மோசம்.

` முன்னறிவிப்பில்லாத மேம்பாலப்பணி' - அத்திவரதர் தரிசனத்தில் அலைக்கழிக்கப்பட்ட பக்தர்கள்!

அங்கிருந்த பக்தர் ஒருவரிடம் பேசினோம். ``நான் தேனியில் இருந்து வருகிறேன். காலையில் நான்கு மணிக்கெல்லாம் இங்கே வந்துவிட்டோம். மதியம் ஒரு மணி ஆகிவிட்டது. இன்னும் நாங்க சாப்பிடவில்லை. எத்தனை மணிக்கு பக்தர்களை அனுப்புவோம் என்றும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. உள்ளே வேலை நடப்பதாக ஒவ்வொரு மணிநேரமும் நேரத்தை தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எப்போதுதான் சாமியைப் பார்ப்போம் எனவும் தெரியவில்லை. இவ்வளவு நேரம் தரிசனம் ரத்து என முன்கூட்டியே சொல்லியிருந்தால் நாங்கள் சாப்பிட்டுவிட்டாவது வந்திருப்போம். எந்தவித வசதியும் செய்யாமல் எல்லோரையும் இங்கே நிற்க வைத்துவிட்டார்கள். எந்தவொரு கேள்விக்கும் அவர்களிடம் சரியான பதிலே இல்லை. நாங்க திரும்பி ஊருக்கே போகிறோம்” என கொந்தளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடுமையான வெயில். அதிகாலையில் இருந்தே தண்ணீர், உணவு கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இயற்கை உபாதையைக் கழிப்பதற்கு வசதியாக வி.வி.ஐ.பி வரிசையில் நின்றவர்களுக்கும் கழிவறைகள் இல்லை. இதனால் பெண்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். சிலருக்கு கையில் கொண்டுவந்த குடையே நிழல் தந்தது. பெரும்பாலானவர்கள் நிற்க முடியாமல் தரையிலேயே அமர்ந்துவிட்டார்கள். அவர்கள் அமர்ந்திருந்த சிமென்ட் தரையும் சுடச்சுட இருந்தது. பெண்கள் முந்தானையை தலையில் போட்டுக்கொண்டார்கள். துண்டு வைத்திருந்த ஆண்கள் தலையில் துண்டை போட்டுக்கொண்டார்கள். ஆங்காங்கே சிலர் நம் கண்ணெதிரிலேயே மயக்கமுற்றதைப் பார்க்க முடிந்தது. அவர்களை அருகில் உள்ள மருத்துவ முகாமுக்கு அனுப்பிவைத்தோம்.

``காலையில் இருந்தே சாப்பிடவில்லை. பிஸ்கட் மட்டுமே சாப்பிட்டு பசியைப் போக்கிக் கொண்டிருந்தோம். சரியான அறிவிப்பு செய்திருந்தால் நாங்கள் வந்திருக்கவே மாட்டோம்” என ஆதங்கப்பட்டார் மயக்கமுற்றவரின் உறவினர் ஒருவர்.

மயக்கமுற்ற பெண்மணி
மயக்கமுற்ற பெண்மணி

``முன்தினம் இரவு பத்து மணிக்கே பாலம் அமைப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், பொதுமக்களுக்கு எந்த அறிவிப்பையும் விழாக் குழுவினர் தெரிவிக்கவில்லை. காவல்துறையினர் பேட்டி அளிக்கவில்லை இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் எங்களுக்குத் தகவலே தெரியாது என்கிறார்கள். மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், ஒரு பெரிய நிறுவனத்தை வைத்து பெரிய வேலை செய்யும்போது இவ்வளவு நேரம் தாமதம் ஆகும் என்பது கூடவா அதிகாரிகளுக்கு தெரியாது. முன்கூட்டியே அதை அறிவிப்பாக கொடுத்திருந்தால் பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டிருக்காது'' என அங்கிருந்த பக்தர்கள் சொல்வதைக் கேட்க முடிந்தது.

``மாவட்ட நிர்வாகம் என்ன வேலை செய்யப் போகிறது என எங்களுக்கு தகவல் அளிப்பதில்லை. பொதுமக்கள்தான் எங்களிடம் சரமாரியான கேள்விகளை எழுப்புகிறார்கள்” என பணியில் இருக்கும் காவல்துறையினர் புலம்புகின்றனர்.

இவ்வளவு கொடுமைகளையும் தாங்கமுடியாமல் அத்திவரதரை தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் பலரும் திரும்பிச் சென்றுவிட்டனர். நேற்று மதியம் 2 மணிக்குப் பிறகுதான் பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களின் நிலையோ இன்னும் பரிதாபமாக இருந்தது.

` முன்னறிவிப்பில்லாத மேம்பாலப்பணி' - அத்திவரதர் தரிசனத்தில் அலைக்கழிக்கப்பட்ட பக்தர்கள்!

வி.வி.ஐ.பி க்யூவில் சென்ற பக்தர் ஒருவரிடம் பேசினோம், ``இரவு 8 மணிக்கு வி.வி.ஐ.பி வரிசையில் கோயிலின் உள்ளே சென்றோம். வழியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு பக்தர்களை மதிக்கக்கூடத் தெரியவில்லை. இதுவரை பார்க்க முடியாத கொடுமையான தரிசனத்தை நேற்று பார்க்க முடிந்தது. பொது தரிசனத்தைவிட மோசமான தரிசனமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் அவற்றை ஒழுங்குபடுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். இதனால் வெளியே போனவர்கள் உள்ளே வரமுடியவில்லை. உள்ளே சென்றவர்கள் வெளியே வரமுடியவில்லை.

இவ்வளவு கொடுமையிலும் வி.வி.ஐ.பி தரிசன வழியாக சென்ற காவல் உயர் அதிகாரிகள் அங்கே அத்திவரதர் முன்பு நின்று செல்போனில் காவலர்களை வைத்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். வி.வி.ஐ.பி பாஸ் வைத்திருந்தவர்களை வசந்த மண்டபத்தின் உள்ளே விடாமல், வசந்த மண்டபத்தின் வாயிலில் வெளியில் நின்றே தரிசனம் செய்ய வைத்து அனுப்பிவிட்டார்கள். ஆனால், தங்களுக்குத் தேவையான அரசியல் பிரமுகர்களை அத்திவரதர் முன்பு அமர வைத்து உபசரித்துக்கொண்டாடினார்கள். கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களுக்கும் ரவுடிகளுக்கும் கொடுக்கும் மரியாதைகூட சில பக்தர்களுக்கு கிடைக்கவில்லை என்பது சோகம்” என்றார் வேதனையோடு.