Published:Updated:

``இனி சம்பளதாரர் அனைவருக்கும் பி.எஃப் பென்ஷன்" சாதகமான தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்!

சுப்ரீம் கோர்ட்
News
சுப்ரீம் கோர்ட்

மத்திய அரசு ஊழியர் ஒருவர் 10 ஆண்டு பணி முடித்து, அவர் எத்தனை குறைவான சம்பளம் பெற்றவராக இருந்தாலும் குறைந்தபட்ச பென்ஷனாக ( 9000+6840) 15,840 பெறுவார். இதில் 5-ல் ஒரு பங்கான ரூ 3000 கூட குறைந்தபட்ச பென்ஷனாக இல்லை. இதைப் பற்றிய முறையீடும் ஏதுமில்லை.

``இனி சம்பளதாரர் அனைவருக்கும் பி.எஃப் பென்ஷன்" சாதகமான தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்!

மத்திய அரசு ஊழியர் ஒருவர் 10 ஆண்டு பணி முடித்து, அவர் எத்தனை குறைவான சம்பளம் பெற்றவராக இருந்தாலும் குறைந்தபட்ச பென்ஷனாக ( 9000+6840) 15,840 பெறுவார். இதில் 5-ல் ஒரு பங்கான ரூ 3000 கூட குறைந்தபட்ச பென்ஷனாக இல்லை. இதைப் பற்றிய முறையீடும் ஏதுமில்லை.

Published:Updated:
சுப்ரீம் கோர்ட்
News
சுப்ரீம் கோர்ட்

தனியார் நிறுவனங்கள், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள் போன்றவற்றில் பணி புரியும் ஊழியர்களுக்கு பிராவிடண்ட் ஃபண்ட், பென்ஷன், காப்பீடு முதலான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக அமையப் பெற்றதுதான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (Employees Provident Fund Organisation).

பென்ஷன்
பென்ஷன்

சம்பள வரம்பு

இ.பி.எஃப். உறுப்பினராக முக்கிய காரணி சம்பள வரம்பு. நிறுவனம் துவங்கப்பட்ட 1952 -ல் உறுப்பினராகச் சேர்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பள வரம்பு 300 ரூபாய். அது படிப்படியாக வளர்ந்து தற்போது 15,000 ரூபாய் ஆகியுள்ளது. அதாவது ஊழியரின் அடிப்படைச் சம்பளம் + அகவிலைப்படியின் கூட்டுத்தொகை 15,000 ரூபாய்க்குள் இருந்தால், அந்த ஊழியர் தங்கு தடையின்றி இ.பி.எஃப். உறுப்பினராகி விடலாம். பணியில் சேரும்போது உள்ள சம்பளம்தான் ரூ.15,000 க்கு உட்பட்டு இருக்க வேண்டுமே தவிர, அதற்குப் பிறகு எவ்வளவு வேண்டுமானாலும் அதிகரிக்கலாம். இத்தகைய ஊழியருக்கு இ.பி.எஸ் (Employees Pension Scheme) திட்டத்தில் சேர அனுமதி உண்டு. பென்ஷன் பெறலாம்.

15,000 ரூபாய்க்கும் அதிகமான சம்பளத்துடன் பணியில் இணைவோர், இ.பி.எஃப் உறுப்பினராக, அதன் ஆணையரின் இசைவு பெற வேண்டும்.

பென்ஷன் திட்டத்தில் சேர முடியாத நிலை..

பென்ஷன் பெறுவதற்கு ஊழியர் எவரும் 10 ஆண்டு பணியை நிறைவு செய்திருக்க வேண்டும். என்ற அரசு ஊழியருக்கான பென்ஷன் விதி இ.பி.எஃப். ஊழியருக்கும் பொருந்தும். ஆனால், ஓய்வு பெறும்போது ஊழியர் தனது கடைசிச் சம்பளமாகப் பெறும் தொகையின் அடிப்படையிலேயே பென்ஷன் என்கிற அரசு ஊழியருக்கான பென்ஷன் விதி இ.பி.எஃப் ஊழியருக்குப் பொருந்தாது. மாறாக, ஊழியர் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் பெற்றிருந்த சராசரி சம்பளத்தின் அடிப்படையிலேயே பென்ஷன் கணக்கிடப்படும்.

 பென்ஷன்
பென்ஷன்

அது மட்டுமல்ல; மேற்கண்டவாறு 5 வருட சராசரி சம்பளம் ரூ. 20,000 என வந்தாலும், பென்ஷன் 15000 ரூபாய்க்கே கணக்கிடப்படும். காரணம் பென்ஷனுக்கான சம்பள வரம்பு 15,000 ரூபாய் என்பதே.

இத்தகைய நிபந்தனைகளால், தனது கடைசி சம்பளமாக 15,000 பெற்றிருந்த ஒருவர், 33 ஆண்டு பணி நிறைவு செய்திருந்தாலும் ரூ.15,000 - ல் 50% தொகையாக,  உள்ள 7500 ரூபாயை பென்ஷனாக பெற முடியவில்லை. மேலும், சராசரி சம்பளம் 20,000 பணிக்காலம் 33 ஆண்டு என்ற தகுதி உடையவரும் தனது பென்ஷனாக 10,000 ரூபாயைப் பெற முடியாமல் இருந்தது.

பங்களிப்பு பென்ஷன்

இ.பி.எஃப். ஊழியர்கள் பெறுவது 'பங்களிப்பு பென்ஷன்'  அதாவது ஊழியர் தனது சம்பளம் + அகவிலைப்படியில் 12% தொகையை, இ. பி. எஃப். திட்டத்தில் செலுத்துவார். இது மொத்தமும் ஊழியரின் பி.எஃப் கணக்கில் சேர்ந்துவிடும். நிறுவனமும் தனது பங்காக 12% தொகையைச் செலுத்தும். இதில் 8.33% ஊழியரின் பென்ஷன் கணக்கில் சேரும். 3.67% ஊழியரின் பி. எஃப் -ல் சேர்ந்து விடும்.

பென்ஷன் திட்டங்கள்!
பென்ஷன் திட்டங்கள்!

சட்டத்திருத்தம்

1995 - ல் செயலாக்கம் பெற்ற பென்ஷன் திட்டத்தில் 01.09.2014 -ல் சட்டத் திருத்தம் செய்தது இ.பி.எப் அமைப்பு. அதாவது-

  • 16.11.1995 அன்றோ அதன் பிறகோ 15000 ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறும் ஊழியர் (இ.பி.எஸ்) பென்ஷன் திட்டத்தில் சேர  முடியாது.

  • பென்ஷனுக்கான அதிகபட்ச சம்பளம் ரூ 6500 -லிருந்து 15000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

  • பென்ஷன் திட்டத்துக்கு அதிகரித்த பங்களிப்புத் தொகை செலுத்த வகை செய்யும் விதிப்பிரிவு நீக்கப்பட்டு, கூடுதல் பங்களிப்பு செலுத்த ஆறுமாதம் அவகாசம் தரப்பட்டது.

  • சம்பள வரம்பான 15000 ரூபாய்க்கு மேல் ( அதாவது பணியில் சேர்ந்த பிறகு சம்பளம் 15000 க்கு  மேல் உயரும் பட்சத்தில்) சம்பளம் பெறுவோர் பங்களிப்பு திட்டத்துக்கு மேலும் 1.16% சம்பளத்தை செலுத்த வேண்டும் என்பதே சட்டத்திருத்தம்.

  • என்றாலும் முன்னதாக 6500 வரம்புக்கு உட்பட்டு பங்களிப்பு சந்தா செலுத்தியவர்கள், கூடுதல் சந்தா செலுத்த முற்பட்டபோது, காலம் கடந்து விட்டது என்று தெரிவித்து சந்தா செலுத்த அனுமதிக்கப்படவில்லை.

உயர்நீதிமன்றத் தீர்ப்பு

மேற்கண்ட சட்டத் திருத்தங்களை எதிர்த்து ஊழியர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், கேரள உயர்நீதிமன்றம் -2018 ல் மேற்கண்ட இ.பி.எஃப். அமைப்பின் சட்டத்திருத்தம் மற்றும் அதைத் தொடர்ந்து இ.பி.எஃப். அமைப்பு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துத் (set aside) தீர்ப்பளித்தது.

``இனி சம்பளதாரர் அனைவருக்கும் பி.எஃப் பென்ஷன்" சாதகமான தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்!

மேல் முறையீடு

கேரள நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசும், இ.பி.எஃப். அமைப்பும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. 4.11.2022 அன்று உச்சநீதிமன்றம் கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளது.

இ.பி.எஃப். அமைப்பின் 2014 ஆம் ஆண்டு எம்ப்ளாயீஸ் பென்ஷன் திட்டத்தில் செய்யப்பட்ட சட்ட திருத்தம் செல்லும் என்பதை உறுதி செய்கிறது.

அரசமைப்புச் சட்டம் உச்ச நீதிமன்றத்துக்கு பிரிவு 142-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அசாதாரண அதிகாரத்தின், படி அதிகரிக்கப்பட்ட பென்ஷன் பெற உரிய காலக்கெடுவுக்குள் இசைவு தெரிவிக்காதவர்கள், அடுத்த நான்கு மாதத்துக்குள் இசைவு தெரிவிக்கலாம். நிறுவனத்துடன் ஊழியரும் சேர்ந்து இதனைச் செய்யலாம்.

ரூ.15000 -க்கு மேல் சம்பளம் பெறுவோர் தனது சம்பளத்தில் 1.16% தொகையை பென்ஷன் நிதியத்துக்குச் செலுத்த வேண்டும் என்ற இ.பி.எப். அமைப்பின் சட்டத்திருத்தம் விதிமுறை மீறிய செயலாக உள்ளது. என்றாலும், ஊழியர் பங்களிப்புத் தொகைக்குப் பதிலாக சட்டப்படியான மாற்று வருவாயில் ஈடுகட்டலாம். இதனைச் செயல்படுத்திக் கொள்ள தீர்ப்பின் இப்பகுதி ஆறு மாதம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

 என்பிஎஸ் பென்ஷன்
என்பிஎஸ் பென்ஷன்

2014 -ன் சட்டத்திருத்தம், இ.பி.எஃப். அமைப்பிலிருந்து விலக்கு (Exemption) பெற்ற சுமார் 1300 நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

ஊழியரின் கடைசி 60 மாத சம்பளத்தின் சராசரித் தொகையை அடிப்படையாகக் கொண்டு பென்ஷன் கணக்கிடுவதில் குறை சொல்ல ஏதுமில்லை.

01.09.2014 க்கு முன் ஓய்வு பெற்று, இசைவு தெரிவிக்காமல் உள்ளவர்களுக்கு இத்தீர்ப்பின் மூலம் பயன்பெற முடியாது.

இவை அனைத்துக்கும் மேலாக 2014 இ.பி.எஃப் சட்டத்திருத்தத்தின்படி, (EPS) பென்ஷன் திட்டத்தில் சேருவதற்கான சம்பள வரம்பு 15000 ரூபாய் என்பது ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், சம்பள வரம்பின்றி அனைத்து இ.பி.எஃப். உறுப்பினர்களும் (EPS) பென்ஷன் திட்டத்தின் மூலமும் பயன்பெற வழி பிறந்துள்ளது.

சற்றே ஏமாற்றம்

ஊழியரின் கடைசி சம்பளத்துக்கு பென்ஷன் கணக்கிடத் தேவையில்லை. 60 மாத சராசரி சம்பளத்துக்கு பென்ஷன் கணக்கிடுவதில் தவறேதுமில்லை என்ற தீர்ப்பு காரணமாக தனது கடைசி சம்பளமாக 15000 ரூபாய் பெற்றிருந்தவர், 33 ஆண்டு பணி நிறைவு செய்திருந்தாலும் 7500 ரூபாயை பென்ஷனாக பெற முடியாது. பென்ஷன் குறையும்.

பென்ஷனுக்கான சம்பள வரம்பு 15000 என்பதில் மாற்றமில்லை என்பதால் அதிகபட்ச பென்ஷன் இப்போதைக்கு ரூ.7500 க்கு மேல் உயராது.

மத்திய அரசு ஊழியர் ஒருவர் 10 ஆண்டு பணி முடித்து, அவர் எத்தனை குறைவான சம்பளம் பெற்றவராக இருந்தாலும் குறைந்தபட்ச பென்ஷனாக ( 9000+6840) 15,840 பெறுவார். இதில் 5-ல் ஒரு பங்கான ரூ 3000 கூட குறைந்தபட்ச பென்ஷனாக  இல்லை. இதைப் பற்றிய முறையீடும் ஏதுமில்லை.

Pension
Pension

இ.பி.எஃப் சுற்றறிக்கை

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இ.பி.எஃப். அமைப்பு மற்றும் மத்திய அரசு வெளியிடும் அறிக்கைகளை தொடர்ந்து தீர்ப்புகள் அமலாக்கம் பெறக்கூடும். தீர்ப்பில் சொல்லப்படாத இனங்கள் சொல்லப்படலாம். தனிப்பட்ட சந்தேகங்கள் தீர தெளிவுரைகள் கிடைக்கப்பெறலாம். சம்பள வரம்பின்றி எல்லாரும் பென்ஷன் திட்டத்தில் சேரலாம் என்ற தீர்ப்பு சுமார் 6 கோடி  இ.பி.எஃப். உறுப்பினர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும்.

- ப. முகைதீன் சேக்தாவூது