Published:Updated:

`பட்டா இருக்கு…நிலத்தைக் காணோம்!' - தேனி ஆட்சியரை அதிரவைத்த 3 கிராம மக்களின் புகார்

பட்டா வழங்கப்பட்டு சுமார் 12 ஆண்டுகள் ஆன நிலையில், இன்றுவரை அதற்கான இடம் கொடுக்கப்படவில்லை என்கின்றனர் கிராம மக்கள்.

கிராம மக்கள்
கிராம மக்கள்

அரசு அறிவித்த இலவச வீட்டுமனைக்கான பட்டா வழங்கப்பட்டும், அதற்கான நிலம் இன்னும் கிடைக்கவில்லை எனக் கூறி மூன்று கிராம மக்கள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட அழகாபுரி, காமாட்சிபுரம், எரக்கோட்டைப்பட்டி ஆகிய மூன்று கிராமத்தைச் சேர்ந்த 152 நபர்களுக்கு கடந்த 2007ம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இரண்டு சென்ட் நிலம் வீதம் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது.

ஆறுமுகம்
ஆறுமுகம்

பட்டா வழங்கப்பட்டு சுமார் 12 ஆண்டுகள் ஆன நிலையில், இன்றுவரை அதற்கான இடம் கொடுக்கப்படவில்லை என்கின்றனர் கிராம மக்கள்.

Vikatan

இது தொடர்பாக நம்மிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமனூர் ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், ``கடந்த 2007ம் ஆண்டு அப்போதைய மாவட்ட கலெக்டராக இருந்த முத்துவீரன், ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலங்களை மீட்டு, வீடுகள் இல்லா ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கியுள்ளார். அதன்படி சீபாலக்கோட்டையில் வைத்து 152 ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கியிருக்கிறார். பட்டா கிடைக்கப்பெற்ற ஏழைகளுக்கு இதுதான் இடம் என்று குறிப்பிட்டுக் காட்ட அதிகாரிகள் முன்வரவில்லை.

கிராம மக்கள்
கிராம மக்கள்

ஏன் எனக் கேட்டபோது, `சம்பந்தப்பட்ட இடம் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு விரைவில் இடத்தை ஒப்படைக்கிறோம்’ என்று கூறியுள்ளனர். ஒரு வருடம் இரண்டுவருடம் இல்லை. சுமார் 12 வருடமாக இதே கதையைக் கூறியிருக்கிறார்கள். வெறும் பட்டாவை மட்டும் வைத்துக்கொண்டு வீடு கட்ட முடியாமல் தவிக்கின்றனர் ஏழைகள். திரைப்படத்தில் வரும் காமெடி காட்சி போல, `பட்டா இருக்கு நிலத்தைக் காணோம்..’ என்ற கதையாக இருக்கிறது” என்றார்.

இது தொடர்பாக உத்தமபாளையம் வட்டாட்சியரிடம் பேசிய போது, ``நான் உத்தமபாளையம் வட்டாட்சியராகப் பதவியேற்று ஒரு வருடம்தான் ஆகிறது. எனவே, அம்மக்களை என்னிடம் வரச்சொல்லுங்கள். விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன். அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களை விசாரிக்கச் சொல்கிறேன்” என்றார்.

அடிப்படை வசதிகளற்ற போடி பகுதி
அடிப்படை வசதிகளற்ற போடி பகுதி

இதேபோல, போடி வலசைத்துறை சாலை, புதூர் 1வது வார்டு, தேவர் சிலை அருகே வசிக்கும் 180 குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படாததால், மின்சாரம், தண்ணீர், கழிப்பிட வசதி என எந்தவித அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் சிரமப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிட வந்தனர். உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நிறுத்தப்பட்டது. எனவே, கோரிக்கை மனுவை, அங்கிருந்த மனுப்பெட்டியில் போட்டுவிட்டுச் சென்றனர். இது தொடர்பாக விளக்கம் பெற போடி வட்டாட்சியரை தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். ஆனால், அவரது செல்போன் எண், தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக பதில் கிடைத்தது.