
ராணி கார்த்திக்
பணியாளர் பற்றாக்குறையாலும், பாதுகாப்பு அலட்சியத்தாலும் மின்வாரிய ஊழியர் சிவசங்கரன் என்பவர் டிரான்ஸ்ஃபார்மரிலேயே எரிந்து கருகி, பலியான சோகம் பலரையும் பதறவைத்திருக்கிறது. சிவசங்கரனின் மரணத்தை வைத்தே இந்த அரசு மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து எவ்வளவு அலட்சியமாகச் செயல்படுகிறது என்பதைச் சொல்லிவிடலாம்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை மின்வாரியத்தில் கேங்மேனாகப் பணிபுரிந்துவந்தவர் சிவசங்கரன். அதாவது, புதிய மின்கம்பங்கள் அமைப்பது உள்ளிட்ட தளவாடங்களைக் கையாளும் பணிகளை மேற்கொள்பவர் அவர். ஆனால், ஆள் பற்றாக்குறை காரணமாக, சம்பவத்தன்று விதிமுறையை மீறி கேங் மேனான சிவசங்கரன் டிரான்ஸ்ஃபார்மரில் பழுதுநீக்க அனுமதிக்கப்பட்டி ருக்கிறார். அந்த நேரத்தில், டிரான்ஸ்ஃபார்மருக்குக் கீழிருந்து மின் இணைப்பைத் துண்டிப்பதற்காக லீவரை இயக்கியிருக்கிறார்கள் மின்வாரிய ஊழியர்கள். அது சரிவர இயங்காத காரணத்தால், மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் சிவசங்கரனின் உயிர்் பறிபோய்விட்டது.

இது தொடர்பாக, பாரதிய மின் பொறியாளர் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் நடராஜன் பேசும்போது, “உங்களுக்கு இது ஒரு சாவு... ஆனால், கடந்த ஓராண்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கேங்மேன்கள் இப்படி இறந்திருக்கிறார்கள். இத்தனை உயிரிழப்புகளுக்குப் பணி அழுத்தமும், ஆள் பற்றாக்குறையுமே காரணம். 40 சதவிகிதம் வரை ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. ஹெல்பர், வயர்மேன், லைன் இன்ஸ்பெக்டர் எனக் களத்தில் பணியாற்ற வேண்டியவர்கள் தொடங்கி உதவிப் பொறியாளர்கள் வரை காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேயில்லை. ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு காலாவதி தேதி உண்டு. ஆனால், தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான டிரான்ஸ்ஃபார்மர்கள் காலாவதியாகிப் பல ஆண்டுகள் கடந்தும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சிவசங்கரனின் உயிரிழப்புக்குக் காரணமும் அதுதான். இப்படி இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததும், சொற்பமான அந்த இழப்பீட்டுத் தொகையைப் போராடிப் பெறுவதும் தனிக்கதை” என்றார் ஆற்றாமையுடன்.

இது குறித்து விளக்கம் கேட்டு மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானியிடம் பேசினோம். “உயிரிழப்புகளுக்கான காரணம் குறித்து விசாரித்துவருகிறோம். கூடிய மட்டும் பாதுகாப்பு உபகரணங்களைச் சரிவரப் பயன்படுத்த அறிவுறுத்துகிறோம்” என்றார் சுருக்கமாக.
“கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 9,000 கேங்மேன்கள் பணியமர்த்தப்பட்ட நிலையில், தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, `5,000 கேங்மேன்களை பணியமர்த்துவோம்’ என்று உறுதியளித்தது. ஆனால், அந்த வாக்குறுதி இன்னும் நிலுவையிலேயே இருக்கிறது. மேலும், TNPSC மூலமாக ஹெல்பர்கள் முதல் உதவிப் பொறியாளர்கள் வரையிலான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என ஆறு மாதங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிவிப்பிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. போராட்டம் நடத்தி கோரிக்கைகளை முன்வைத்தால், நீதிமன்றத்தின் மூலம் தடுக்கிறார்கள்” என்கின்றனர் மின்வாரிய ஊழியர்கள்.
வழக்கு நேரத்தில் அரசுத் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, ஆவின் பால் விநியோகம் உள்ளிட்ட அனைத்துச் செயல்பாடுகளும் முடங்கும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். அவ்வளவு முக்கியத்துவம்கொண்ட மின்துறைப் பணியாளர்களின் உயிர்களுக்கும் கோரிக்கைக்கும் செவிசாய்க்கலாமே அரசு!