Published:Updated:

புதிய சுற்றுலா கையேடு - தாஜ் மஹாலை நீக்கிய உ.பி அரசு!

புதிய சுற்றுலா கையேடு - தாஜ் மஹாலை நீக்கிய உ.பி அரசு!
புதிய சுற்றுலா கையேடு - தாஜ் மஹாலை நீக்கிய உ.பி அரசு!

புதிய சுற்றுலா கையேடு - தாஜ் மஹாலை நீக்கிய உ.பி அரசு!

ஐ.நா சபையின் 'கல்வி, அறிவியல் மற்றும் கலாசார' நிறுவனம் யுனெஸ்கோ. இந்த அமைப்பு ஒவ்வொரு நாட்டில் உள்ள பாரம்பர்ய சுற்றுலா இடங்களைத் தேர்வுசெய்து பட்டியல் வெளியிடும். இந்தப் பட்டியல் என்பது கண்டிப்பாகத் தவறவிடாமல் பார்க்க வேண்டிய இடங்கள் என்று குறிப்பிடுவதற்காகத்தான். அண்மைக்காலமாக இணைய வழி ஓட்டெடுப்பின் வழியாகத் தேர்வாகும் இடங்களைப் பட்டியலில் வெளியிடுகிறது. அதில் எப்போதுமே இடம் பெறும் பெயர் 'தாஜ்மஹால்.'  ஆம், உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை இந்தியாவுக்குச் சுற்றுலா வரும் வெளிநாட்டினர் பார்க்காமல் போவது அந்தப் பயணமே வீணாகப்போனது போன்றதுதானே. அப்படியான உலகப்புகழ் பெற்ற வரலாற்றுச் சின்னமான தாஜ்மஹாலைச் சுற்றுலா இடங்களின் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது உத்தரப்பிரதேச அரசு. 

தற்போது அங்கு பாரதிய ஜனதாவின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராகத் தீவிர ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான யோகி ஆதித்யநாத் உள்ளார். அவர் ஆட்சிக்கு வந்த நாள் முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். அவரது நடவடிக்கைகள் பல்வேறு தரப்பிலும் விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் உருவாக்கி வருகிறது. தாஜ்மஹாலுக்கு எதிரான கருத்துகளை உ.பி அரசின் சார்பில் முதல் முதலில் தெரிவித்தவர் அதன் துணை முதல்வரான தினேஷ் சர்மா. கடந்த இருவாரங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, "முகலாயர்கள் வரலாற்றை மாணவர்களுக்குச் சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன். காரணம் அவர்கள் அனைவரும் கொள்ளையர்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வாக சிப்பாய்க்கலகத்தைத் துவக்கிய மங்கள் பாண்டேவுக்கு கர்னல் பகதூர் ஷா துணையாக இருந்தார் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்கள் செய்யவில்லை. அதேநேரம் அப்துல் கலாம் போன்ற இஸ்லாமியர்களை மதிக்கிறோம். இந்தியா அணுகுண்டு சோதனை செய்ய மகத்தான உதவியை அவர் செய்திருக்கிறார். அதே போன்று இந்தியாவின் கலாசாரத்தைப் பாடமாகச் சொல்லிக்கொடுக்கும்போது தந்தையைப் பதவிக்காக மகன் கொல்வதும் கலைநுணுக்கம் மிகுந்த தாஜ் மஹால் கட்டடத்தைக் கட்டிய கலைஞர்களின் கரங்களை வெட்டிய வரலாற்றைச் சொல்லிக்கொடுக்க விரும்பவில்லை" என்று தெரிவித்திருந்தார். உ.பி துணை முதல்வரான தினேஷ் சர்மாதான் அம்மாநிலத்தில் கல்வித்துறையையும் கையில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில்தான் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், "இந்தியாவின் கலாசாரங்களைப் பிரதிபலிப்பது என்றால் அது ராமாயணமும் பகவத் கீதையும்தான். தாஜ்மஹால் அல்ல. ஒவ்வொரு நாட்டுக்கும் செல்லும்போதும் அந்த நாட்டின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் ஒன்றைப் பரிசளிப்பார்கள். ஆனால், நமது இந்தியாவில் மட்டும்தான் அரசு விருந்தினர்களுக்கு நமது நாட்டுக் கட்டடக்கலைகளில் இல்லாத, எந்தவிதத்திலும் இந்தியாவைப் பிரதிபலிக்காத மினார் வடிவ தாஜ்மஹாலைப் பரிசளிக்கிறோம். அந்நிலை தற்போது பிரதமர் மோடி வந்த பிறகுதான் மாறியுள்ளது. அவர் தமது விருந்தினர்களுக்கு ராமாயணத்தைப் பரிசளிக்கிறார். அது மிதிலை நகரையும், பீகார்  மாநிலத்தையும் பிரதிபலிக்கிறது" என்று தெரிவித்திருந்தார். அவரின் இந்தக் கருத்துக்குப் பிறகே உ.பி அரசின் சுற்றுலா இடங்களின் பட்டியலிலிருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்டிருக்கிறது. இதுவரை உத்தரப்பிரதேச அரசின் இணையத்தில் இந்த மாற்றம் இடம்பெறவில்லை என்ற போதிலும், அதன் சுற்றுலாத்துறையின் சார்பில் கடந்த வாரம் வெளியிடப்பட்டிருக்கும் புதிய சுற்றுலா கையேட்டில் தாஜ்மஹால் இடம் பெறவில்லை என்பது அதிர்ச்சிக்குரிய தகவல். 

அடுத்த கட்டுரைக்கு