Published:Updated:

பணம் இல்லாமல் 11 மாநிலங்களைச் சுற்றிய பயணக்காதலன்!

பணம் இல்லாமல் 11 மாநிலங்களைச் சுற்றிய பயணக்காதலன்!
பணம் இல்லாமல் 11 மாநிலங்களைச் சுற்றிய பயணக்காதலன்!

பணம் இல்லாமல் 11 மாநிலங்களைச் சுற்றிய பயணக்காதலன்!

“மனிதர்கள் மீது எனக்கு அபாரமான நம்பிக்கை. என்மீதும்தான். சவாலாக எடுத்துக்கொண்டு, ஒரு ரூபாய் செலவில்லாமல் பல மாநிலங்களுக்குப் பயணிப்பதென முடிவெடுத்தேன். யார் எதைக் கொடுத்தாலும், மறுக்காமல் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று மட்டும் சபதம் எடுத்தேன். டிக்கெட் இல்லாமல் பயணிக்கக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தேன்” - விமல் கீதானந்தனின் இந்த ஃபேஸ்புக் ஸ்டேடஸ் பார்த்து ஜெர்க் ஆனேன்!

பாலோ கோயலோ தன் ‛ஆல்கிமிஸ்ட்’ புத்தகத்தில், “உனக்குத் தேவைப்படும்போது, மொத்த உலகமும் அதைக் கொடுத்து உதவும்” என குறிப்பிட்டிருப்பார். 23 வயது விமலுக்கு, அப்படித்தான் அனுபவம் வாய்த்திருக்கிறது.

பைசாவும் இல்லாம, டிக்கெட்டும் வாங்குவேன்னு சத்தியம் பண்ணிட்டு ஒரு பயணமா! என்னடா இது முரட்டு சபதமா இருக்கே என்று . ஃபேஸ்புக்கில் சாட் செய்து, மொபைல் எண்ணை வாங்கி பேசினேன்.

'என்ன விமல், டிக்கெட்டுக்கு காசு கொடுக்காமல் போகமாட்டேன் என்றெல்லாம் சபதம் போட்ருக்கீங்க... பயணம் எப்படி இருந்தது?' எனக் கேட்டதும்  உற்சாகமானார் விமல். “டெண்ட் அமைப்பதற்கான பொருட்கள், படுக்கை, நான்கு செட் துணிகள், ஒரு லேப்டாப், மொபைல், அதற்கான  பவர் பேங்க் - இதுதான் இந்த பயணத்துக்கான முன் தயாரிப்பு. ஆந்திர மாநிலம் அனந்தபூர் என் சொந்த ஊர். வீட்டிலிருந்து ஜூலை 2016-ல் பயணத்தைத் தொடங்கி, கடந்த மார்ச் மாதம் வரைக்கும் மொத்தம் 9 மாதங்கள் பயணித்து, கொல்கத்தாவில் பயணத்தை முடித்தேன்” என்கிறார்.

குறைந்தபட்ச தேவைகளுக்குக்கூட பணம் எடுத்துக்கொள்ளாமல், தெரிந்தவர்களிடமிருந்து எந்த உதவியும் பெறக்கூடாது என்ற வைராக்கியத்துடன் பயணம் செய்திருக்கும் விமலிடம், பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. திட்டங்கள் எதுவும் இல்லாமல் வாழ்க்கையை இலகுவாய் நேசிக்கிறார்.

'இந்தப் பயணத்தைத் தொடங்குறதுக்கு எது உங்களைத் தூண்டிவிட்டது?' என்று கேட்டதும், “என் அம்மா சிங்கிள் மதர். வாழ்க்கைல பெரிய திட்டங்கள் எதுவுமில்ல. நானே ஆரம்பிச்ச வேலைகளை நானே செய்து முடிப்பேன். அவ்வளவுதான். அனந்தபூர் ஜே.என்.டி.யூல இன்ஜினியரிங் படிச்சேன். ட்ராப் அவுட். ஃப்ரெண்ட்ஸ் அதிகம். அவங்ககிட்ட பேசுறப்போ, பலரும் தன் கனவுகளைச் சொல்வாங்க. கனவுகளை எப்படித் துரத்தணும்னு பேசறதுக்குப் பதிலா, அந்தக் கனவைச் செயல்படுத்தலாம்னு தோணுச்சு... கிளம்பிட்டேன். அம்மாவ கன்வின்ஸ் பண்ணேன். எப்படியும் என் முடிவ மாத்தமுடியாதுன்னு தெரிஞ்சதால, நீ எங்க இருக்கேன்னு அடிக்கடி சொல்லுன்னு மட்டும் சத்தியம் வாங்கிட்டு அனுப்பிட்டாங்க ”- சொல்லிவிட்டு சத்தமாகச் சிரிக்கிறார்.

அனுபவங்களைப் பற்றிக் கேட்டதும், “அனுபவங்கள்தானே.. நிறைய ட்யூட். அடிக்கடி அழக்கூட செஞ்சேன். பயணத்தோட ஒவ்வொரு நிமிஷத்தையும் அனுபவிச்சிட்டேன். பயணமும், சந்தோஷமும் எப்பவும் இணைச்சுப் பேசப்படற விஷயமாத்தானே இருக்கும். என்னைப் பொறுத்தவரைக்கும் அப்படியில்ல. வாழ்க்கையில் எது ரொம்ப முக்கியம், எது மேலெல்லாம் நம்ம நிறைய கவனம் செலுத்தணும்னு உணர்ந்தேன். தனிமையா உணர்ந்தா அழுவேன். அழுதப்புறம் கிடைக்குமே ஒரு நிம்மதி... ஆஹா” என்கிறார்.

இந்த அனுபவங்களுக்குப் பிறகு, வாழ்க்கைல எது முக்கியம்னு உணர்ந்தீங்க? இப்போ எதெல்லாம் நிம்மதியைத் தருது உங்களுக்கு? - இது நான்.

“அனந்தபூர்லேர்ந்து பெங்களூரு போற வழி. ‘அஸ்கர்’னு ஒரு ட்ரக் ட்ரைவர்கிட்ட லிஃப்ட் கேட்டுப் போனேன். அவர் ஓட்டுநர் மட்டுமில்ல, உங்கள மாதிரி ஒரு செய்தி நிருபரும்கூட. சாலை விபத்துகள், பயணத்தின் நடுவில் நடக்கிற நிகழ்வுகள படம்பிடிச்சு நியூஸ் சேனல்களுக்கு அனுப்புறதோட மட்டுமில்லாம, சம்பவங்களைப் பத்தின தகவல்களையெல்லாம் வாய்ஸ் நோட்டா அனுப்புறாரு தெரியுமா? அது ரம்ஜான் நேரம். அவரு நோன்புல இருந்த அந்த நேரத்திலயும், என்னை வயிறு நிரம்ப சாப்பிடவெச்சார். பயணத்தப் பத்தி இருந்த கொஞ்சம் பயமும், அஸ்கர் அண்ணணோட அன்புல கரைஞ்சுபோச்சு. 

சோஷியல் மீடியாக்கள்ல நான் இருந்த இடத்தைப் பத்தியும், பயணத்தைப் பத்தியும் அப்டேட் பண்ணுவேன். பல பேர் அந்தப் பதிவுகளைப் பாத்துட்டு, சாப்பிட, தங்க இடம் கொடுத்தாங்க. கேரளாவுக்குள்ள பயணம் பண்ணப்ப, மூணாறுகிட்ட ஒரு சின்ன கிராமம். குடிசை வீட்டுல வசிச்ச அவங்க, சாப்பாடும், தங்குறதுக்கு இடமும் கொடுத்தாங்க. எனக்கு கட்டில கொடுத்துட்டு, அந்த வீட்டுக்காரங்க எல்லாரும் தரையில படுத்துக்கிட்டாங்க. என் வாழ்க்கையிலேயே ரொம்ப சுவையான மீன் கறிய, நான் அவங்க வீட்லதான் சாப்டேன். உலகம் முழுக்க அன்புதான் இருக்கு. எல்லாரும் வேற எதையோ தேடி ஓடுறாங்கன்னு நினைக்கிறேன். தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, கோவா, மஹாராஷ்டிரா, அசாம், மேகாலயா, நாகாலாந்து, மேற்கு வங்கம்னு 11 மாநிலங்களையும் சுத்திட்டேன். எங்கயும் எனக்கு கசப்பான உணர்வுகளில்லை. ” என்று புன்னகை உதிர்க்கிறார் விமல்.

‛இப்போ என்ன செஞ்சிட்டு இருக்கீங்க... அடுத்து என்ன செய்யப்போறீங்க’ என்ற கேள்விக்கு, “நான் கேக்காமலேயே டிக்கெட் எடுத்து கொடுத்திருக்காங்க. சாப்பாடு கொடுத்திருக்காங்க. ஒவ்வொரு இடத்திலிருந்து புறப்படும்போது அரவணைப்பை பரிசா கொடுத்திருக்காங்க. நான் திரும்ப என்ன செய்யமுடியும்? நான் பயணத்துல சந்திச்ச எல்லாரையும் என் வீட்டுக்கு அழைச்சிருக்கேன். அதே அன்பை, இன்னும் பத்துமடங்கா அவங்களுக்கு திருப்பிக் கொடுக்கணும். ஆசியாவோட மிகப்பெரிய சிவப்பு விளக்குப் பகுதிகள்ல ஒன்னா இருக்குற, கொல்கத்தாவின் சோனாகாச்சிக்கு போனேன். அங்க நடக்குற சுரண்டலும், மனிதமில்லாத சித்ரவதையும் ரொம்ப வலியைக் கொடுத்தது. பாலியல் தொழிலாளர்கள், பாலியல் தொழில்ல ஈடுபடுத்த கடத்தப்படும் பெண்கள், குழந்தைகள் குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தி, அவர்களை மீட்பதற்கான உதவிகளைச் சேகரித்து ஒழுங்குபடுத்துவதற்காக ஒரு அமைப்பு தொடங்கும் வேலைகள் நடக்குது. இதுதான் ப்ளான்” என்று தன் நேயக்கனவை விவரித்தார் விமல்.

அன்பும், வாழ்த்துக்களும் பாஸ்!

அடுத்த கட்டுரைக்கு