Published:Updated:

`முன்பதிவு இல்லாத விரைவு ரயில்கள் விடுங்கள்; கோடையைச் சமாளிக்க கோரிக்கை

பி.ஆண்டனிராஜ்
`முன்பதிவு இல்லாத விரைவு ரயில்கள் விடுங்கள்; கோடையைச் சமாளிக்க கோரிக்கை
`முன்பதிவு இல்லாத விரைவு ரயில்கள் விடுங்கள்; கோடையைச் சமாளிக்க கோரிக்கை

கோடைக்கால கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில், நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து, பெங்களூரு மற்றும் சென்னைக்கு முன்பதிவு இல்லாத விரைவு ரயில் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோடைக்காலத்தில் தென் மாவட்டங்களிலிருந்து பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு ஏராளமான பயணிகள் செல்கிறார்கள். விடுமுறை காரணமாகவும் கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்காகவும் ஏராளமானோர் பயணம் செய்கிறார்கள். தற்போது அரசுப் பேருந்துகளில் கட்டணம் அதிகமாக உயர்ந்துவிட்டதாலும் அதனுடன் ஒப்பிடுகையில் ரயில் கட்டணம் கணிசமாகக் குறைவாக இருப்பதாலும் பெரும்பாலான சாமான்ய மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். 

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு ஏற்கெனவே இரு விரைவு ரயில்களைக் கோடைக்காலத்தில் இயக்கப்போவதாகத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அந்த ரெயில்களில் முன்பதிவு கிடைப்பது அரிதாக உள்ளது. பொதிகை விரைவு ரயிலில் 24 பெட்டிகளும் சிலம்பு விரைவு ரயிலில் 18 பெட்டிகளும் இணைக்கப்பட்டு இருந்தாலும் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்வதற்கு அதிகபட்சமாக 4 பெட்டிகள் மட்டுமே உள்ளன. அதனால் அந்த ரயில்களில் இடம் கிடைக்காமல் பயணிகள் மிகுந்த சிரமப்படும் நிலை உள்ளது.

தாம்பரம் - செங்கோட்டை பகல் நேர ரயிலும் நிறுத்தப்பட்டுவிட்டதால், பெண்களும் முதியவர்களும் மற்ற ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்ய பெரும் சிரமத்தைச் சந்திக்கிறார்கள். கூட்ட நெரிசல் காரணமாக முன்பதிவு செய்யாத பயணிகள் முன்பதிவு வசதி கொண்ட பெட்டிகளில் ஏறி பயணம் செய்ய முயல்வதால் சிக்கலைச் சந்திக்கிறார்கள். அதனால் சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கு செங்கோட்டையிலிருந்து ராஜபாளையம், மதுரை வழியாக முழுமையான முன்பதிவு இல்லாத விரைவு ரயில்களை இயக்குவது அவசியம். 

அத்துடன், தூக்கும் வசதி இல்லாமல் அமர்ந்துகொண்டே பயணம் செய்யும் வசதி கொண்ட ரயில்கள் இயக்கப்பட்டால் தென்மாவட்டங்களில் உள்ள பயணிகள் அதிகம் பயன் பெறுவார்கள். இதன் மூலம், ரயில்வே துறைக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். இதை தென் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், ரயில்வே அமைச்சகத்திடமும் தெற்கு ரயில்வே நிர்வாக அதிகாரிகளிடமும் வலியுறுத்தி இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனத் தென் மாவட்ட ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.