Published:Updated:

கோடையில் குளிர்விக்கும் ராமநாதபுரம் அரியமான் - குந்துகால் கடலோரச் சுற்றுலாப் பகுதிகள்..!

கோடையில் குளிர்விக்கும் ராமநாதபுரம் அரியமான் - குந்துகால் கடலோரச் சுற்றுலாப் பகுதிகள்..!
கோடையில் குளிர்விக்கும் ராமநாதபுரம் அரியமான் - குந்துகால் கடலோரச் சுற்றுலாப் பகுதிகள்..!

 கோடை விடுமுறையைக் குளிர்ச்சியாகக் கழிக்க ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என மலைவாச தலங்களுக்கும், அருவி நீர் விழக்கூடிய குற்றாலம் போன்ற இடங்களுக்கும் செல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் மத்தியில் கடலோரங்களிலும் குளிர்ச்சியைத் தணிக்கலாம் என்பதற்கு அடையாளமாகத் திகழ்கின்றன ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரியமான் மற்றும் குந்துகால் கடற்கரைப் பகுதிகள்.

கோடை விடுமுறையைக் குளிர்ச்சியாகக் கழிக்க ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என மலைவாசஸ்தலங்களுக்கும் அருவி நீர் விழக்கூடிய குற்றாலம் போன்ற இடங்களுக்கும் செல்வதையே வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் கடலோரங்களிலும் குளிர்ச்சியைத் தணிக்கலாம் என்பதற்கு அடையாளமாகத் திகழ்கின்றன ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரியமான் மற்றும் குந்துகால் கடற்கரைப் பகுதிகள்.

ராமநாதபுரத்திலிருந்து 27 கி.மீ தொலைவிலும் ராமேஸ்வரத்திலிருந்து 28 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது அரியமான் எனும் அழகிய கடற்கரை. ராமநாதபுரம் - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையிலிருந்து 3 கி.மீ தூரம் உள் நோக்கிச் சென்றால், இந்தக் கடற்கரையை அடையலாம். அலைகள் அதிகம் இல்லாத அமைதியான கடற்கரை. அதையொட்டிய மணற்பரப்பு. தொடர்ந்து வளர்ந்து நிற்கும் சவுக்கு மரக்காடு என மனதை மயக்கும் கடற்கரையில் சுடச்சுட பொறிக்கப்படும் மீன்களின் வாசம் நம்மைச் சுண்டி இழுக்கும்.

அலைகளும், கடலின் ஆழமும் குறைவாக இருப்பதால் குழந்தைகளுடன் குதூகலித்து விளையாட சிறப்பான கடற்கரை. இயற்கை கடலில் குளித்துவிட்டு செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள நீச்சல்குளம், குற்றால அருவிகளிலும் நீராடி மகிழலாம். இவை தனியாருக்குச் சொந்தமானது என்பதால் கட்டணம் செலுத்த வேண்டும். சிறுவர்களுக்கு ரூ.30-ம், பெரியவர்களுக்கு ரூ.60-ம் கட்டணமாக உள்ளது. ஆண் பெண் இருவருக்கும் எனத் தனித் தனி நீச்சல்குளம் இருப்பதால் பெண்கள் சுதந்திரமாக நீந்தி மகிழலாம். சுக்கு டீ, பருத்திப்பால், தேநீர், பனங்கிழங்கு மற்றும் கார பஜ்ஜி வகைகளும் நியாயமான விலைக்குக் கிடைக்கும். மதிய உணவைத் தயார் செய்துகொண்டோ அல்லது அங்கேயே தயாரிக்கும் வகையிலோ சென்றால், நாள் முழுவதையும் இனிமையாகக் கழித்து வரலாம். கடற்கரை ஓரங்களில் அவ்வப்போது ஒதுங்கும் ஜெல்லி மீன்கள் நம் உடலில் படாதவாறு முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

திரும்பும் வழியில் புதிதாக உருவாக்கப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலும் உள்ளது. கோயிலைச் சுற்றி 3 ஏக்கர் பரப்பளவில் நந்தவனமும் அமைந்துள்ளது. அவசர உதவி தேவையெனில் அருகில் உள்ள உச்சிப்புளி காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம். காவல் நிலைய தொடர்பு எண்: 04567-259253. அரியமானுக்குப் பேருந்து வசதியில்லை என்பதால் சொந்த மற்றும் வாடகை வாகனங்கள் மூலமே செல்ல முடியும். உச்சிப்புளி அல்லது பாம்பன் சுவாமிகள் கோயில் அமைந்துள்ள பிரப்பன் வலசையிலிருந்து ஆட்டோக்களிலும் செல்லலாம்.

குந்துகாலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவிடம்: ராமேஸ்வரம் கோயிலுக்குச் சென்று வேண்டுதல்களை நிறைவேற்றிவிட்டு தீவில் உள்ள பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம். அவற்றில் ஒன்றுதான் குந்துகால். ராமேஸ்வரத்திலிருந்து பாம்பன் செல்லும் சாலையில் அக்காள்மடம் என்ற நிறுத்தம் உள்ளது. அங்கிருந்து 4 கி.மீ தூரம் உள்நோக்கிச் சென்றால் குந்துகாலை அடையலாம்.

ராமநாதபுரம் மன்னராக இருந்த பாஸ்கர சேதுபதியின் வேண்டுகோளை ஏற்று சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடந்த சர்வ சமய மாநாட்டில் பங்கேற்றார். 1897-ம் ஆண்டு ஜனவரி 26-ல் விவேகானந்தர், அவரின் ஐரோப்பிய சீடர்களுடன் பாம்பன் துறைமுகத்தில் வந்திறங்கினார். அப்போது மன்னர் பாஸ்கர சேதுபதி குந்துகாலிட்டு சுவாமி விவேகானந்தரை வரவேற்றார். அதன் ஞாபகார்த்தமாக இந்த இடத்துக்கு `குந்துகால்’ என அழைக்கப்படுகிறது. அதன் நினைவாக இங்கு ராமகிருஷ்ண தபோவன நிர்வாகத்தால் அழகிய நினைவிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையொட்டிய இந்த நினைவிடத்தில் சுவாமி விவேகானந்தர், மன்னர் பாஸ்கர சேதுபதியின் சிலைகள் அமைந்துள்ளன. விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றுக் காட்சிக் கூடம், தியான அறை, புத்தக விற்பனை மையம் ஆகியன இடம் பெற்றுள்ளன.

கடல் அலைகள் தாலாட்டும் கரையில் விவேகானந்தர் நினைவிடம் அமைந்துள்ள நிலையில் இங்கு குளித்து மகிழவும் வாய்ப்புள்ளது. வன உயிரினப் பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடா தீவில் அமைந்துள்ள குருசடை தீவினை மிக நெருக்கத்திலிருந்து பார்க்கவும், ராமேஸ்வரம் தீவினை இணைக்கும் பாம்பன் சாலை பாலத்தின் அழகினை தூரத்திலிருந்தும் கண்டு ரசிக்கவும் முடியும். இவை தவிர மன்னார் வளைகுடா பாதுகாப்பு அறக்கட்டளையினால் உருவாக்கப்பட்டுள்ள அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய அருங்காட்சியகமும் உள்ளது.

ராமேஸ்வரத்திலிருந்து இங்கு செல்ல காலை 8.40 மற்றும் பகல் 2.50 நேரங்களில் நகர் பேருந்து வசதி உள்ளது. இந்தப் பேருந்து சுமார் அரை மணிநேரம் குந்துகாலில் நிறுத்தப்பட்டிருக்கும். மேலும் பாம்பனிலிருந்து காலை 7 மணி தொடங்கி இரவு 7 மணி வரையில் 5 முறை நகர் பேருந்துகள் வந்து செல்லும். வாகனங்கள் சென்று வர நல்ல சாலை வசதி இருப்பது சிறப்பு.

அடுத்த கட்டுரைக்கு